ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 3
தேசிகர் ஒடுக்கத்தில் இருக்கிறார். வெளியே ஓதுவார்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமான தேவாரப் பண் இல்லை. இங்கிலீஷ் மோஸ்தரில் கட்டிய பாட்டு…
’துங்கஞ்சார் தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே…’
அலையில் மிதக்கிற படகுபோல, பெங்குவின் பறவைகள் கூட்டமாக அடியெடுத்து வைக்கிறது போல், தோய்த்து உலர்த்திய காவித் துணிகள் காற்றில் பறந்து அலைக்கழிவது போல… காதிலே ஜவ்வந்திப் பூ வைத்து, கூரை வேய்ந்த மண்டபம் அதிரக் குதித்துக் குதித்து ஆடுகிறார்கள். ராமச்சந்திரன் காதில் பென்சிலைச் செருகிக் கொண்டு குற்றாலம் போக நேரமாகிவிட்டது என்று யாரிடமோ சொல்கிறான். ‘ஸ்டேஷன் மாஸ்டர் டீ போட்டு எடுத்து வரட்டும்.. சாப்பிட்டு விட்டுப் போகலாம்..’ என்கிரார் அவர். எல்லோரும் வெளியே வருகிறார்கள், முதலில் தேசிகர், அப்புறம் மகாவித்துவான். இன்னும் பாட்டை நிறுத்தாமலேயே ஓதுவார்கள். ராமச்சந்திரன் கடைசியில் கையில் ‘என் சரித்திர’த்தை இடுக்கிக் கொண்டு வருகிறான்…
ராமச்சந்திரன் கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான். ஸ்டேஷன் மாஸ்டர் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது.
‘ஒய்ஃப் அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்க.’
ஸ்டேஷன் மாஸ்டர் டீ போட்டு எடுத்து வந்தான்.
‘குளிச்சிட்டுக் கிளம்பினா, ஒரு கால் அவர்லே டவுனுக்குப் போயிடலாம். ஜட்கா வண்டி இருக்கு. அங்கே ஓட்டல்லே சாப்பிட்டு, மண்டபம் போற பஸ்ஸைப் பிடிச்சா சாயந்திரத்துக்குள்ளே ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்துடலாம்..’
ராமேஸ்வரத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன்னைப் போகச் சொல்கிறான் என்று புரியவில்லை. அரசாங்கக் கட்டடத்தில் படம் வரைந்தது குற்றமென்று நேற்று ராத்திரி அவசரச் சட்டம் ஏதும் பிறப்பிக்கப்பட்டு, யாராவது பிடிவாரண்டோடு வருகிறார்களோ என்னமோ.
‘டீ குடியுங்க’
ஸ்டேஷன் மாஸ்டர் மேஜைப் பக்கம் கை காட்டினான்.
‘இன்னிக்குப் பால்காரன் வரலை. பால்பொடியிலே தான் போட்டேன். ஏதோ ஒண்ணு.. சூடா இருக்கணும்.. அவ்வளவுதான்..’
‘ஆமா, சூடா இல்லாட்ட வெளிக்குப் போக முடியாது’
ராமச்சந்திரன் சுபாவமாகப் பதில் சொல்லி விட்டு ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தான். சகஜமான உரையாடலுக் கு இது போதாதோ என்னமோ. கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னான் –
‘வடக்கே எல்லாம் டீத்தூளைஉம் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’.
’நல்லா இருக்குமா என்ன அது?’
ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான்.
‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’