பச்சை, சிகப்புக் கொடிகள் அசைக்கும், சமைக்கத் தெரிந்த ஸ்டேஷன் மாஸ்டர்

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 5 அ

 

இந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு சமைக்கவும் தெரிந்திருக்கிறது. கரணை கரணையாகக் கையும் காலும் இருக்கப்பட்ட மனுஷன். மனுஷர்.  அதை வைத்துக் கொண்டு பச்சைக் கொடியும் சிவப்புக் கொடியும் மாறி மாறிக் காட்டலாம். இப்படி குழம்பு செய்ய புளியை மய்ய மசியக் கரைக்கலாம்.  படம் எல்லாம் ஒண்ணும் போட வேண்டாம். சர்க்கார் வீட்டில் பெண்டாட்டிக்கு அலமாரியில் புடவை மடித்து வைக்கலாம். காணாமல் போன பவுடர் டப்பா மூடியைய்த் தேடி எடுக்கலாம்.

 

‘என் ஒய்ஃப் நல்லா சமைப்பா’

 

ஸ்டேஷன் மாஸ்டர் சொல்ல, ராமச்சந்திரன் விஷய கனமான தகவலை உள்வாங்கிக் கொண்டவன் போல் சிரத்தையாகத் தலையாட்டினான்.

 

ராமச்சந்திரன் இலைக்கு முன்னால் உட்கார்ந்தான்.

 

‘ஒண்ணும் அவசரமில்லே.. சாப்பிட்டுட்டு மண்டபம் போகலாம் நீங்க’

 

‘உங்களுக்கு நல்ல மனசுங்க’

 

‘அட இதுல்லே என்னங்க..மனுஷனுக்கு மனுஷன் செய்யறது தானே’

 

இந்த ஸ்டேஷன் மாஸ்டர் தான் எவ்வளவு நல்லவன். சோறும் குழம்புமாக இலையில் பரிமாறிக் கொண்டே பேசுகிறான். ஸ்டேஷன் மாஸ்டர் பேச்சில் சினிமா தியேட்டரில் டிக்கட் கிழிக்கிற டிராயிங் மாஸ்டர்களும், குடுமி வைத்துக் கொண்டிருப்பவர்களும், இந்தி பண்டிதர்களும், தலைவர்களும், தியாகங்களும், தனுஷ்கோடியை விழுங்கி ஒரு ரயிலைக் காணாமல் போக்கிய புயலும், தலைவர்கள் இறப்பதும், விடுமுறையில் எல்லோரும் சந்தொஷமாகத் துக்கம் அனுஷ்டிப்பதும் என்று நிறைய வந்து கொண்டிருக்கிறது. ராமச்சந்திரன் எல்லாவற்றையும் மரியாதை கருதிப் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருக்கிறான்.

 

உலகத்தில் எல்லாவிதமான நபர்களும் இருக்கிறார்கள். இறக்கிறார்கள். வீடுகள் சிறிதும் பெரிதுமாக, பளிங்கு பதித்தும், காரை பெயர்ந்தும், கூரை மூடியும், பானை மூடியில் வரைந்த இயற்கைக் காட்சிகள் சுவரி அலங்கரித்தும்… பாதுகாப்பாக, அரணாக, கோட்டையாக, காற்று வராத புறாக் கூண்டுகளாக, வானத்தை விசாரிக்கும் உப்பரிகைகளுடன், படிகளும், உள்ளே… உள்ளே… உள்ளே நீண்டு போகும் கூடங்களும், ஸ்கிரீன் வைத்துத் தடுத்த ஒற்றை அறைகளும், பாத்ரூமில் கரி பிடித்த பாய்லரும், தரையில் பயோரியா பல்பொடி சிந்தியும்…

 

‘அம்மா நம்ம வீட்டுக்கு எப்பம்மா போகப் போறோம்?’

 

‘போகலாம்டா… அப்பா வரட்டு..’

 

‘மாமி ரொம்ப திட்டறாங்களே’

 

‘நம்ம தலையெழுத்து.. பொறுத்துக்கணும்..’

 

‘அப்பா எப்போ வ்ருவார்? எனக்கு நம்ம வீடு எப்படி இருக்கும்னே மற்ந்து போச்சு..’

 

’நீலமா, சுவரெலாம் நீல பெய்ண்ட் அடிச்சு, ஊருக்கு வெளியிலே…  வாசல்லே நந்தியாவட்டைச் செடியோட…’

 

‘அங்கே இப்ப யாரும்மா இருக்காங்க?’

 

‘தெரியலேடா… அப்பா வந்ததும் போய்ப் பார்க்கலாம்..’

 

அப்போ யார் வந்தாலும் கொடுத்திடுவாங்களா?’

 

‘கட்டாயம் கொடுத்திடுவாங்க… அப்பா கேட்டா இல்லைம்பாங்களா?’

 

‘அப்பா எங்கேம்மா போயிருக்காரு?’

 

‘அது.. சிங்கப்பூருக்கு..’

 

‘அன்னிக்கு மலேயான்னு சொன்னியே?’

 

‘ரெண்டும் பக்கத்துலே பக்கத்துலே தாண்டா’

 

‘அப்பா ஜெயில்லே இருக்கறதா வெங்கடசாமி சொன்னானே… அவங்க அப்பா சொன்னாராம்..’

 

‘அவங்க அப்பன் தாண்டாஅ ஜெயிலுக்குப் போக வேண்டிய கேசு. அவனை ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் ..அவன் முகத்துலே காறிப் துப்பப் போறேன்.. நீ பெரியவனானா அவனை நேர்லே கேட்டு அறையிற அரையிலே ஊரே திரும்பிப் பாக்கணும்.. ஏண்டா எங்கம்மா கிட்டே வம்பு பண்றே.. இது என்னா ஆம்பளை இல்லாத வீடுன்னு நினைச்சியான்னு உரக்கக் கேக்கணும்..’

 

‘அப்பா வந்து அறைய மாட்டாரா?’

 

‘அந்த மனுஷன் வரும்போது வரட்டும்டா.. நீ இப்பத் தூங்கு..’

 

சாப்பிடும் போது இப்படிக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வருகிறது. நேற்றைக்குப் பூரா அலைச்சல். அசதி. காலையிலேயே கிளம்பி, சரவணனுடன் போய்… வாசலைத் தாண்டி உள்ளேஎ வரச் சொல்லவில்லை. ‘இவர் தான் மாப்பிள்ளையா? வயசு கொஞ்சம் கூட ஆகியிருக்கும் போல தெரியுது.. பொண்ணுக்குப் பிடிச்சிருக்கும்.. எதுக்கும் கேட்டுடலாமே.. என்னத்துக்கு பிறகு ஏதாவது மனத் தாங்கலாச்சுன்னா.. ஆமா நீங்க தம்பி?…. சிநேகிதரா? பேரு? சரவணன்… நல்ல பேரு … முருகக் கடவுள் …இளைய பெருமாள்னு அருணகிரி சொல்லுவார் திருப்புகழ்லே..சரவணன் தம்பி..உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? நம்ம வகைப் பிள்ளை தானே? பார்த்தாலே தெரியுதே.. ஊர் எல்லாம் எது உங்களுக்கு? என்னங்க… சார் பெரிய ஆர்டிஸ்டா? நல்லதுங்க… ஆனா..சார், ராமநாதனா.. ராமச்சந்திரன் சார்.. உங்க அறிவுக்கு நம்ம பொண்ணு கால் தூசு பெற மாட்டா…(போடா, உன் மூஞ்சிக்கு என் பொண்ணு கேக்குதா? உன் கூட வந்திருக்கற அந்தச் சின்னப் பையன் சரவணன் சரின்னா பாக்கலாம்…) … காப்பி சாப்பிடுங்க.. திண்ணையிலே உட்கார்ந்து பேசலாம்.. காத்து சிலுசிலுன்னு வருது… சரவணன் தம்பி.. கூடப் பொறந்தவங்க எத்தனை பேரு? பேனர் ஆர்ட்டிஸ்டுன்னா மாசம் ஆயிரம் ரெண்டாயிரம் வருமா?..

 

’மிஸ்டர் ராமச்சந்திரன்.. என்ன யோசனை? இலையைப் பார்த்துச் சாப்பிடுங்க.. சாம்பார்லே போட வாழக்காய் தான் இருந்தது.. ஏன் வாழக்கா சாம்பார் வைக்கக் கூடாதா என்ன? எங்க ஊர்லே வாழக்கா குழம்பும் வக்கத்த பொண்ணும்பாங்க… இடம் இருந்தா இங்கே கூட தோட்டம் போடலாம்… வாழை மரம்.. கத்திரி… வெண்டை.. பூசணி.. ஆனந்தா தியேட்டர்னு எங்க ஊர் தியேட்டர்.. அங்கே.. ஏன் கேக்கறீங்க அந்தக் கூத்தை.. தியேட்டர்லே இண்டர்வெல் விடறபோது பசங்க குத்த வைக்கிற எடத்துலே பூசணிக்காய் பயிர் பண்ணினாங்க.. அப்புறம்..’

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன