‘அம்மா …. தினம் கஞ்சி தானா? நல்லாவே இல்லேம்மா….’
‘நாளைக்கு சோறு பொங்கலாம்… அரிசி வருது…’
‘அம்மா…’
‘என்னடா?’
‘இந்த எடத்தை ஏன் காடி கானாங்கறாங்க?’
‘அந்தக் காலத்துலே சாரட் வண்டி நிக்குமாண்டா இங்கே..’
‘யாரு அதிலே போவாங்க?’
‘பெரிய வீட்டுலே இருக்கறவங்க’
‘நாமளும் பெரிய வீட்டுலே போய் இருந்தா என்னம்மா?’
‘ஏண்டா இந்த எடத்துக்கு என்னடா? நம்ம நிலமைக்கு இதாவது கிடச்சுதே… ஊரு விட்டு ஊரு வந்து… இந்த வீட்டுலே சமையல் செஞ்சு.. எச்சத் தட்டு கழுவி… நாம உயிரோட இருக்கறதே பெரிசுடா…’
‘இந்த இடம் ஒரே அடைசலா இருக்கும்மா… ஓட்டை உடைசல், தகர டப்பா, தாம்புக் கயிறு… காலையிலே கூட அந்த வீட்டு அம்மா பழைய பிரம்பு நாற்காலியை உள்ளே போட்டுட்டுப் போனாங்க… நான் படிச்சுட்டிருந்தேன்.. தொப்புன்னு பக்கத்துலே வந்து விழுந்தது…’
‘நீயே வாங்கி ஓரமா வச்சிருக்கலாமில்லே?’
’அதையெல்லாம் இங்கே ஏம்மா கொண்டுக்கிட்டு வர்றாங்க?’
‘அதைப் போட்டு வைக்கத்தானேடா இந்த இடம்?’
‘அப்ப நாம இருக்கறது?’
‘தெரியாத் தனமாக் கொடுத்திட்டாங்க.. இப்பப் போகச் சொல்ல முடியலே… உறவாயிடுச்சே…’
‘என்ன உறவும்மா?’
‘அவர் உனக்கு சுத்தி வளைச்சு சித்தப்பா ஆகணும்..’
’சுத்தாம?’
‘வாயிலேயே போடுவேன்.. சிம்னியை சின்னதாக்கிட்டுப் படு’
‘அம்மா….’
’என்னடா.. இன்னும் தூங்கலியா?’
‘நேத்து ராத்திரி யாரும்மா உன்னை சரோ சரோன்னு கூப்பிட்டது?’
‘கனவு ஏதாவது கண்டியா? சும்மா படுடா..’
‘இல்லேம்மா.. அந்த வீட்டுக்காரர் குரல் மாதிரி இருந்தது..’
‘உளறாதேடா… படு.. கண்ணை மூடு.. நேரமாச்சுல்லே…’
‘அம்மா,, அப்பா புஸ்தகத்தை ஏம்மா எடுத்திட்டுப் போகலே… நீ பெட்டியிl வச்சிருக்கியே.. அது… அது அப்பா புஸ்தகம் தானே?’
‘நீ இப்பத் தூங்கப் போறியா இல்லியா?’
அந்தப் புஸ்தகம் ரொம்பப் பழசா இருக்கே… அப்பா படிச்சு இருப்பாரோ?’
‘படிச்சிருப்பார்…’
‘நானும் படிக்கப் போறேன்..’
‘பெரியவனானதும் படிக்கலாம்..’
‘நான் நேத்திக்குப் பெட்டியைத் திறந்து அதை எடுத்துப் பார்த்தேன்.. என் சரித்திரம்னு போட்டிருந்தது..’
‘யாரோ பெரிய சாமியார் எழுதினதுடா..’
’நீ படிச்சிருக்கியாம்மா?’
’நாலு எழுத்து படிச்சிருந்தா நான் ஏன் இப்படி எச்சத் தட்டு கழுவிட்டு இருக்கேன்? சரி படுடா.. எனக்குத் தூக்கம் வருது..’
’மிஸ்டர் ராமச்சந்திரன், நீங்க பத்திரிகையிலே படம் போட முயற்சி செய்யலாமே? கையை விலக்கிக்குங்க. சாம்பார் சூடா இருக்கு… எப்படி இருக்கு நம்ம சமையல்?’
‘பிரமாதம்.. எங்க அம்மா சமைச்ச மாதிரி..’
‘நீங்க எப்ப படம் போடக் கத்துக்கிட்டீங்க? இந்த மாதிரி கலை எல்லாம் சின்ன வயசிலேயே படியணுமே..இல்லியா?’
‘காம்பவுண்டு சுவர் பூரா, கரிக்கட்டியால் கிறுக்கி வச்சுட்டு நாக்கைத் துருத்திக்கிட்டு நிக்கறதைப் பாரு.. கண்டிச்சு வளர்க்காட்ட அவஙக் அப்பன் மாதிரி தறுதலையாப் போயிடப் போறான்.. ஏண்டா, கீதா பென்சிலை எடுத்தியாமே? எங்கடா அது?’
‘நான் எடுக்கலே மாமி’
;அவ பென்சில் பின்னே ரெக்கை மொளச்சுப் பறந்தா போச்சு?’
‘பத்திரிகையிலே கார்ட்டூன் போட்டா நிறைய வருமா? இல்லே, கதைக்கு வரைஞ்சாலா?’
’வரைஞ்சு வச்சா எழுத மாட்டாங்களா அதுக்கு?’
‘நீங்க தான் சொல்லணும்..நான் ஸ்டேஷன் மாஸ்டர் .. நீங்க ஆர்ட்டிஸ்ட்…சரிதானே..’
‘கதைன்னா யாரு கேரக்டர்னு பார்த்து.. விதவிதமா மனுசங்க..’
இறக்கை முளைத்த பென்சில் மனிதர்கள். புறா மனிதர்கள். புத்த மனிதர்கள்…
‘பென்சிலை எங்கடா ஒளிச்சு வச்சிருக்கே?’
‘நான் எடுக்கலேம்மா.. அடிக்காதே .. அடிக்காதே..’
‘வெறுமனே விக்கறதுக்குப் படம் போறதை விட பத்திரிகைக்குப் போட்டா தொடர்ந்து சீரா பணம் காசு வரும் இல்லே?’
‘ஆமா சார்… நிறைய பென்சில் வாங்கலாம்’.
ஸ்டேஷன் மாஸ்டர் கண்களில் ஒரு சிரிப்பு மின்னி மறைகிறது.