‘உங்க சொந்த ஊர் எது மிஸ்டர் ராமச்சந்திரன்?’
‘அது.. அது.. பட்டீசுரம்.. ஆறுமுகத்தா பிள்ளை தெரியுமா? அந்த ஊரு’
‘அது யாரு?’
’பண்ணையார்… உ.வே.சாமிநாதய்யரோட எழுத்தாணியை ஒளிச்சு வச்சுக்கிட்டார்’.
‘கீதா பென்சிலை எங்கடா ஒளிச்சு வச்சே?’
நான் எடுக்கலே.. இரு கேட்டுச் சொல்றேன்..
ராப்பொழுது பட்டீசுரம். அங்கங்கே ஒளி மினுக்கப் பெரும்பாலும் இருட்டில் முழுகிப் போயிருக்கிறது. காவிரி தூரத்தில் சலசலத்து ஓடுகிற சத்தம்.. ராத்திரியில் அதிசயமாக நாரை ஒன்று பறந்து போகிறது.
திண்ணையில் குத்து விளக்கு காற்று இல்லாததால் நின்று எரிகிறது. மகா வித்வான் மேல் துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு கண்களை மூடி யோசனை செய்கிறார்.
திடீரென்று அவர் குரல் கணீரென்று ஒலிக்கிறது. நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு செய்யுளாக வருகிறது. திருப்பெருந்துறைப் புராணம். அடுத்த மாதம் அரங்கேற்ற வேணும்.
எங்கேயோ அல்லி அரசாணி மாலையைச் சத்தம் போட்டுப் படிக்கிறார்கள். இடுப்பில் குழந்தையோடு உழத்திப் பெண் ஒருத்தி தெருவில் போகிறாள். குழந்தை அழுகை இருட்டில் கரைந்து கொண்டே போகிறது.
‘சாமிநாதய்யரே, எழுதியது போதும். எழுந்து நித்திரை போங்கள்’ என்கிறார் ஆசிரியர்.
எழுத்தாணியைப் பத்திரமாக இடுப்பில் முடிந்து கொண்டு திண்ணையிலேயே ஒரு ஓரமாக முடங்குகிறார் ஐயர். ஆசிரியர் விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறார்.
ராமச்சந்திரன் மெல்ல உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தா பிள்ளையைத் தட்டி எழுப்புகிறான்.
‘மனுஷர் கஷ்டம் தெரியாமல் யாரது தூங்குகிற போது எழுப்புகிறது?’
அவர் கண்ணைத் தேய்த்துக் கொண்டு ராமச்சந்திரனைப் பார்க்கும்போது ஓவியக் கல்லூரி பிரின்சிபால் மாதிரித் தெரிகிறார். ராமச்சந்திரன் அவர் தலைமாட்டில் உட்கார்ந்து கர்ண மந்திரம் போல மெதுவாகச் சொல்கிறான் –
‘ஏன் இப்படி சில்லறைத் தனமாக சாமிநாதய்யரின் எழுத்தாணியை ஒளித்து வைத்துக் கொண்டீர்? சீப்பை ஒளித்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன? உமக்கு வேண்டுமானால் நான் பென்சில் கொண்டு வந்து தருகிறேன். சின்ன வயசில் திருடினது. சாமிநாதய்யரை எழுதப் படிக்க விடாமல் நோகடிப்பதில் உமக்கென்ன குரூரமான சந்தோஷம்? நீர் காலைக்கடன் கழித்து விட்டு வருவதற்குள் உம் விஷயமாக ஒரு செய்யுள் இயற்றிப் பாடினால் தான் எழுத்தாணியைத் திரும்ப வரவழைப்பேன் என்றீராமே? வெளிக்குப் போகிற நேரத்துக்குள் தமிழ்ப் பாட்டு எழுதச் சொல்லி இம்சிப்பது தான் உம்மைப் பொறுத்தவரை புலமையைச் சோதிப்பதா? உமக்குள் பிரபுத்துவத் திமிர் இருக்கு. அது பணம் வைத்திருப்பவர்கள் ஏழைகளைத் துன்பப் படுத்தச் சொல்லும். எழுத்தாணியை ஒளித்து வைத்து அழ வைக்கச் சொல்லும். பழைய நாற்காலியையும் தாம்புக் கயிற்றையும் மேலே வீசி இருப்பிடத்தை அடைசல் பிடித்து இருண்டு கிடக்க வைக்கச் சொல்லும். எல்லோரும் தூங்கின பிறகு திருடன் மாதிரி சுவருக்கு அப்புறமாக நின்று, ‘சரோ.. சரோ’ என்று கூப்பிட்டு அரிசியையும் பருப்பையும் அனுப்புவதாக ஆசிஅ காட்டச் சொல்லும். உமக்கு, உம் பெயரில் தமிழ்ப் பாட்டுதானே வேணும்? நீர் முக்கி முனகி மலம் கழித்து விட்டு வருவதற்குள் இங்கே புராணமே அரங்கேற்றப் படப் போகிறது பாரும்மய்யா…’
ஆறுமுகத்தா பிள்ளை திரும்பப் படுத்துக் கொண்டு, அரைக் கண்ணை மூடிக் கொண்டு ‘ராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் போதை தருகிற சமாச்சாரம் எல்லாம் குடிக்கக் கொடுப்பான். அளவாகச் சாப்பிடு. நடுராத்திரியில் ரயில் ஏற வேண்டியிருக்கும்’ என்று சொல்கிறார். சொல்லியபடிக்குப் புரண்டு திரும்பிப் படுத்துக் கொள்கிறார்.
ராமச்சந்திரன் வெளியே வரும்போது இன்னமும் நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது.
‘அந்த நாய்?’
ராமச்சந்திரன் வெளியே இலக்கில்லாமல் கையைச் சுட்டிக் கேட்கிறான்.
‘ஸ்டேஷன் நாய்தான்.. ஸ்டேஷன் கலாசி, ஸ்டேஷன் புக்கிங் கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் போல ஸ்டேஷன் நாய்.. அட சிரிங்களேன்.. மாட்டீங்களா.. சரி…நீங்க வேணுமானாக் கையை அலம்பிட்டு வந்து உக்காருங்க .. நான் சாப்பிட்டு முடிக்க இன்னும் நேரமாகும்..’
பக்கத்தில் யாரோ சில்வண்டு இரைச்சலை மீறிச் சொல்கிறார்கள்.
‘என்ன ராமச்சதிரன்.. உட்கார்ந்துக்கிட்டே தூங்கறீங்களா?’
இது ஸ்டேஷன் மாஸ்டர் குரல் இல்லையோ.. ஆமா, இப்போ அவன் .. அவர் கூடத்தானே உக்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கறது…
‘ஐயாம் சாரி.. ரெண்டு ராத்திரியாத் தூக்கம் முழிச்சி இப்ப ஒரு மாதிரி இருக்கு..’
’நீங்க வேணாக் கையைக் கழுவிட்டு கொஞ்ச நேரம் படுத்திருங்க. கணபதி வந்ததும் ஜட்கா வண்டி கொண்டுக்கிட்டு வரச் சொல்றேன். மூணு மணிக்கோ மூணரைக்கோ மண்டபம் பஸ் வரும் .. டவுன்லே’
ராமச்சந்திரன் கை கழுவி விட்டு வரும்போது சொன்னான் –
‘உங்க சமையல் நல்லா இருக்கு. எனக்கு சமையல் தெரிஞ்சாலாவது என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருப்பா. படம் போடறது என்ன பிழைப்பு…’
ஸ்டேஷன் மாஸ்டர் மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.