ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 6
கரண்ட் போச்சா?.. மத்யான வெய்யில் நேரத்திலே பவர் கட் பண்ணிடறாங்க.. ஸ்டேஷன்லே இருந்தாலும் ஒண்ணும் தெரியாது. இப்படி வயறு முட்டச் சாப்பிட்டுச் சும்மா இருந்தா வியர்த்து வியர்த்துக் கொட்டறது எழவு.. இவன் மட்டும் எப்படி அலுங்காம உக்கார்ந்து புஸ்தகம் படிச்சுட்டு இருக்கான்? துரைக்கு வேர்க்கறதே கிடையாது பொல.. இந்த விஷயத்திலே ராசுப்பய இவனுக்கு நேர் எதிரே. மத்தியானம் சாப்பிட்டுட்டு ஏதோ மிருகம் படுத்துக் கிடக்கற மாதிரி நடுக் கூடத்திலே உருண்டு கிடப்பான். சுத்தி வியர்வை கால்வாய் வெட்டின மாதிரி ஓடும். அது பிடிச்சுக் கூட அந்தப் பொம்பளை அவன் கூட இறங்கிப் போயிருக்கலாம்… என்ன எழவு இது.. அவனைப் பத்தி எப்ப நினைச்சாலும் சனியன் போல அவளும் கூட வரா.. இல்லே.. இல்லே… அவனை நினைக்கறதே அவளைப் பத்தி அசை போடத்தான்.
போன மாசம் ஊருக்குப் போனபோது சுப்பையாத் தேவர் சொன்னாரே… அது என்ன ஊரு… ரிஷிகேஷ்… யாத்ரா சர்வீஸ்லே வடநாடு பூரா யாத்திரை போறபோது ரிஷிகேசத்துலே எதோ சாமியாரு ஆசரமாம்.. கருப்புக் கம்பளி சாமியோ என்னமோ பெயர் சொன்னாரே…ஆமா.. சாமியாரு பெயரு தான் முக்கியம்… நமக்கு வேண்டிய விஷயம் எதுவும் ஞாபகத்தில் இருக்கறதில்லே.. அந்த ஆசிரமம் கிட்டே பஸ் ரெண்டு நிமிஷம் நின்ன போது பக்கத்துலே ஒரு மேடையிலெ சின்னதா கடை போட்டுக்கிட்டு சாயா ஆத்திக்கிட்டிருந்தது நம்ம ராசுப் பய மாதிரி இருந்ததாம். சிரிச்ச மாதிரி கூட தோணிச்சாம். பக்கத்திலே வடக்கத்திக்காரி மாதிரி பைஜாமா போட்டுக்கிட்டு நின்னது மேற்படியாள் தானாம். சர்வ நிச்சயமாச் சொன்னார்.
ஆனா, பக்கிரிசாமி நாயக்கர் ஒரே போடாப் போட்டாரு…’தம்பி தேவருக்குப் பகல்லேயே பசுமாடு தெரியாது.. இவரு ராத்திரியிலே எருமையைத் தேடற மாதிரி, ஓடற பஸ்ஸுலே உக்காந்துக்கிட்டு ஒரு சொடக்கு போடற நேரம் யாரையோ பார்த்தாராம்… அதை வச்சுக்கிட்டு அவன் தான் இவன்னு ஒரே போடாப் போடறாஅரு.. நீயும் நம்பறே பாரு.. என்னத்தச் சொல்ல…’
தேவருக்குச் சரியான கோபம்…விருட்டுனு எளுந்து சொல்றாரு –
‘நீ நம்பினா நம்பு.. அது உன் தம்பிதான்.. என்னமோப்பா.. உங்கப்பா சாகறதுக்கு நாலுநாள் முந்தி, இங்கே இந்தத் திண்ணையிலே தான் கயத்துக் கட்டிலைப் போட்டுக்கிட்டு உக்கார்ந்திருந்தாரு. நான் சைக்கிள்லே சொசைட்டிக்குப் போயிட்டு இருந்தேன்.. வலுக்கட்டாயமாக் கூப்பிட்டு உக்காரச் சொல்லி ஊர் விஷயம் எல்லாம் பேசிட்டே இருந்திட்டு, போறப்போ சொல்றாரு… ராசுப்பய பாவம்.. அந்த மலையாளத்துக்காரி ஏதோ செய்வினை செஞ்சு அவனை வசியம் பண்ணிட்டா… வாடா பயலேன்னு எதை எதையோ காட்டி இழுத்துக்கிட்டு ஓடி .. இந்த அப்புராணிப்பய இப்போ எங்கே கிறுக்காத் திரியறானோ.. அவ வேறே எவனாவது இன்னொரு பயலோட சவாரி விட்டிருபா.. இவன் பாருங்க.. என் மூத்த பையன் சீவகப் பாண்டியன்.. தம்பியைத் தேடிப் பிடிச்சுக் கூட்டி வரணும்னு ஒரு கவலையும் இல்லாம இருக்கான்.. ரெண்டு பிள்ளை பெத்தேன்.. ரெண்டுமே உருப்படி இல்லே… இவன் விருந்தாளி மாதிரி வந்துட்டுப் போறான்… அவன் வசிய மருந்தைத் தின்னுட்டு எங்கேயோ அலையறான்.. என்னமோ நடக்கட்டும் போங்க தேவரேன்னு ஒரே ஆதங்கம்.. கொட்டித் தீத்துட்டாருப்பா..நான் சொல்றதைச் சொல்லிட்டேன்…அம்புட்டுத்தாம்ப்பா…’
வசியம் என்ன வசியம்?… இவன் காலையிலே படம் போட்டுட்டிருந்தானே.. அந்த மாதிரி எடுப்பா மதமதன்னு நின்னு கண்ணாலே கூப்பிட்டா, ரிஷிகேசச் சாமியார் கூடக் கம்பளியைத் தூக்கி எறிஞ்சிட்டு பின்னாலேயே ஓட மாட்டான்? தம்பி என்ன, நான் கூடத்தான் போயிருப்பேன். தெரிஞ்சிருந்தா, டைப் கிளாஸ்லே பிரஸ்காரன் பொண்ணு பின்னாலே நின்னதுக்குப் பதிலா இவ பக்கத்திலே போயிருப்பேன்…
ராசு, இங்கிட்டு பாருடா.. அண்ணன் வந்திருக்கேன்.. ஆமா, யாத்ரா சர்வீஸ் பஸ்லே தான் வந்தேன்… பஸ்ஸிலே தேவரு, நாயக்கர்லாம் உக்காந்திருக்காங்க..போய் டீ கொண்டு போய்க் கொடு.. நான் இந்தப் பொம்பளையைப் பாத்துக்கறேன்… பஸ் பத்து நிமிஷம் நிக்கும்… ஓடாமப் போ..என்ன பிள்ளே கேக்கறே.. உங்க ஊர்லே குட்டின்னு தானே கூப்பிடறது? எந்தா வேணும் குட்டி? சாயாவா கோப்பியா? நீ தான் வேணும்.. இப்படி கிட்டே வந்து உக்காரு.. எதாவது பேசேன்.. மாட்டியா.. நானே பேசறேன்… சாயா போடற போது டீ தூளைப் பாலோட போட்டுக் கொதிக்க வச்சா நல்லா இருக்குமாம்… நீ வசிய மருந்து கொடுத்தாக்கூட நல்லாத்தான் இருக்கும்..
ஆனாலும் அப்பாவுக்கு ராசு மேலே பிரியம் ஜாஸ்தி தான். அவன் பிறந்த உடனே அம்மா போய்ச் சேர்ந்துட்டா. அம்மா முகமே தெரியாம வளர்ந்த பிள்ளைன்னு தனி வாஞ்சை. சாகற தருவாயிலே என் கையைப் பிடிச்சுட்டுச் சொல்றாரு.. சீவகா, ராசு பங்குக்கு எட்டாயிரம் ரூபா, உன் பேர்லேயே பேங்குலே போட்டு வச்சுக்கோ… அவன் எப்ப திரும்பி வந்தாலும் அவன் கிட்டே கொடுத்து.. வேணாம்.. திரும்ப ஓடிடுவான்.. நீயே ஒரு கடையோ உடையோ வச்சுத் தந்து அவன் பொழச்சுக்க ஒரு வழி பண்ணனும். அவனை வச்சு நீ ஒரு வேளையாவது சோறு போட்டு நல்ல வழி காட்டினாத்தான் என் ஆத்துமா கடத்தேறும்..’
ராசுப்பய நல்லாச் சாப்பிடுவான். இவன் ..இந்த சித்திரக்காரன் சின்னப் பிள்ளை மாதிரி சுத்தி வர எறச்சுக்கிட்டுக் கொறிக்கறான். பாவம்.. சாப்பிடும்போது கண்ணு கலங்கியே இருந்தது.. என்ன சோகமோ..
இவனுக்குச் சாப்பாடு போட்டு அனுப்பணும்னு ஏன் தோணினது? எப்படியாவது இவன் எடத்தைக் காலி செஞ்சா சரின்னு தான் வந்த உடனே நினைச்சேன். அப்பக் கூட்டியே வந்திருக்கக் கூடாது. நல்ல வேளை. இவ இங்கே இல்லாமப் போனா. இருந்தா இவனைப் படி ஏற விட்டிருப்பாளா?
‘அய்யே .. என்ன உங்க தம்பி மொட்டைக் கட்டையாப் படம் போட்டுட்டு இருக்காரு.. இது பொம்பளை இருக்கற வீடுன்னு விவஸ்தையே கிடையாதா.. எதப் பார்த்தாலும் அசிங்கமாத்தான் கண்ணுலே படும் போல.. அவர் பார்க்கிற பார்வையிலே கூசிக் குறுகிப் போயிடறேன்.. அவர் போனதுக்கு அப்புறம் தான் வருவேன். என்ன…போக மாட்டாரா? இங்கேயே இருந்துக்கட்டும்..நாளைக்கு அந்த ஓடுகாலியும் வந்து ஒட்டிக்கட்டும்.. உங்களுக்கும் பாத்தே பொழுது போகும்..’
பார்த்துக்கிட்டா… ராசு, முகப்பிலே உட்கார்ந்து நீ பாட்டுக்குப் படம் போடு. உன்னை யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. உன் பங்குப் பணம் எட்டாயிரம் தானே? தரேண்டா. நீ வாசல்லே இரு. பணம் தானே? வரும்… தானே வரும்….ஏ குட்டி.. இவிடெ வரூ… பால் எடுத்துட்டுப் போறியா? யாருக்கு? ராசுப்பயலுக்கா? சல்யம் பண்ணாதே அவனை. கேட்டோ? வரூ.. இவிடெ வா… பேசிட்டு இருப்போம்.. தரையிலே உக்கார்ந்தா நல்லாத் தான் இருக்கு.. தலை வச்சு படுத்துக்கட்டா? ரயிலா? அது பாட்டுக்கு ஊதிக்கிட்டுக் கிடக்கட்டும்.. எவனாவது கொடி காட்டிட்டுப் போறான். இந்தக் கை அதுக்கு இல்லே… மசில்ஸ் பார்த்தியா? தொட்டுப் பாரு.. சினிமா பாக்கறது உண்டா? ரொம்ப நாள் முந்தி செம்மீன் பார்த்தேன். உன்னை மாதிரித்தான். கருத்தம்மான்னோ என்னமோ பேரு.. பெரிசு பெரிசா..
சீ.. எப்பவும் அவ நினைவுதான்.. ராசு பயித்தியம் பிடிச்சு அலையறானோ என்னமோ.. நான் ஒரு நாள் ஓடப் போறேன்.. ராசு .. நீ நல்லா இருடா.. எங்கேயாவது நல்லா இரு.. உன் பங்குப் பணம்தானே? அப்புறம் தரேண்டா… இப்பத் தோதுப் படாது.. நீ ஊருக்குப் போய்ட்டு அப்புறம் வா…