‘என்ன மிஸ்டர் ராமச்சந்திரன்… போகலாமா?’
’எங்கே?’
‘சரியாப் போச்சு. நீங்க போகச் சொன்னீங்களே.. மறந்தே போச்சு.. இப்பப் போனா மதியம் சாப்பாட்டுக்குப் போய்ச் சேர்ந்துடலாமா?’
‘எத்தனை தடவை சாப்பிடறது? இப்பத்தானே சாப்பிட்டீங்க? அதுவும் மறந்து போச்சா?’
‘சாரி.. சாரி.. இந்தப் புஸ்தகத்திலே ஒரேயடியா முழுகிப் போயிட்டேன்.. இது ஒண்ணுதான் எங்க அப்பா எனக்குன்னு விட்டுட்டுப் போன சொத்து.. இந்தப் பக்கத்துலே பாருங்க.. பேரு எழுதியிருக்கு.. இந்தப் படம் யாரு தெரியுமா? மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. ஐயரோட குரு..’
’உங்க அப்பா படமோன்னு பார்த்தேன்..’
‘அவரு படமா.. இருங்க.. காமிக்கறேன்..’
சித்திரக்காரன் தன் ஹோல்டாலிலிருந்து ஒரு பழைய பையை உருவி எடுத்தான். பழ்ந்துணியில் பொதிந்து வைக்கப்பட்ட, ஃபிரேம் செய்த புகைப்படம். கழுத்திலும் காதிலும் ஃபோட்டோவுக்காக நகை மாட்டிக் கொண்டு, கண்கள் சிரிக்க, குழந்தையும் கையுமாக லட்சணமான ஒரு பெண் நிற்கிறாள். பக்கத்தில் நாற்காலி போட்டுச் சட்டமாக உட்கார்ந்திருக்கிற ஆள் ஏகக் குழப்பமாக எங்கேயோ வெறிக்கிறான்.
’அப்பா.. அம்மா கையிலே நான். இது எங்க வீட்டுக் கூடத்திலே எடுத்தது. கூடம் எவ்வளவு பெரிசா தூணெல்லாம் நிறுத்திப் பளிச்சுனு இருக்கு பாருங்க… ஒரு தூசு துப்பட்டி கிடையாது.. சுத்தம்னா அம்புட்டு சுத்தம்.. நூறு பேருக்கு எதிர் எதிரா இலை போட்டு சாப்பாடு போடலாம்.. வாழக்காய் சாம்பார்.. சுடுசாதம்…’
ஏதோ ஸ்டூடியோவிலே எடுத்த மாதிரி இல்லே இருக்கு? வீட்டுலே இப்படித்தான் படுதா தொங்குதாக்கும்.
‘இந்த வீடு எங்கே இருக்கு மிஸ்டர் ராமச்சந்திரன்?’
‘எங்க ஊர்லே. நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. சின்ன வயசுலே பார்த்திருக்கேன். இருந்திருக்கேன். சொந்த வீடுன்னா சும்மாவா? திருக்குறள் படிச்சிருக்கீங்களா?’
‘வீடு கட்டறதைப் பத்தி ஏதாவது வருதா அதிலே?’
இருந்தா ஹௌசிங் லோன் சொசைட்டி போர்டுலே சாக்பீஸாலே எழுதி வச்சிருப்பாங்களே.. இன்று ஒரு தகவல்…
‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றே அம்மா அரிவை முயக்கு’
யாருக்குத் தெரியும்.. அது என்ன கற்க கசடற…
அது கூட சரியா நினைவு வரலே.. சீவகா, உனக்கு இந்தி மட்டுமா வராது? தமிழே தடவுது.. போவட்டும்..பக்கத்து வீட்டு அக்கா தாவணி என்ன கலர்? திங்களும் புதனும் மஞ்சள்.. செவ்வாய் சிவப்புலே ஸ்கர்ட் ப்ளவுஸ்..
‘அந்தத் திருக்குறளுக்கு என்ன அர்த்தம்னா, நம்ம சொந்த வீட்டுலே உக்கார்ந்து நாமே சம்பாதிச்ச சொத்தை அனுபவிக்கற சுகம் பொண்ணு கிட்டே கிடைக்குதாம். எனக்கு தம்மில்லும் இல்லே… தமது பாத்தும் பூஜ்யம். உன் மூஞ்சிக்கு அரிவை முயக்கு வேறே கேக்குதான்னுட்டா அவ… சரியாத்தான் கேட்டா..’
ஆரம்பிச்சுட்டான். பய எங்கேயோ ஒருத்தி பின்னாலே போய் அவ போடா படவாப் பயலேன்னு எகத்தாளம் பண்ணி அனுப்பியிருக்காப்பல… துணியில்லாம வரஞ்சு எடுத்துட்டுப் போய் இதான் நீன்னு காட்டியிருப்பான்.. எல்லாமா ஈன்னு இளிச்சுக்கிட்டு, சீ ஆனாலும் மோசம் நீங்கன்னு வெக்கப் பட்டுக்கிட்டு மாராப்புக்குள்ளே சொருகி வச்சுக்கும்… எவனும் சரி.. எந்த மேதாவின்னாலும்…கிறுக்குத் தனம், கோணங்கித் தனம் பண்ணினாலும்.. பொம்பளை பாத்து போடான்னு சொல்லிட்டா என்னமா உடஞ்சு போயிடறான்.. எல்லாரும் ராசுப்பய ஆக முடியுமா? பய கமுக்கமா இருந்தே என்ன வேலை பண்ணியிருக்கான்.. ராசு உனக்குத் திருக்குறள் தெரியுமாடா? தம்மில்.. தம்மில்… ஏதோ ஒண்ணு.. போ…