பசும்புல் மணத்துக்கொண்டு ஜட்கா வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது – ராத்திரி வண்டி – குறுநாவலில் இருந்து

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 7

 

பசும்புல் மணத்துக் கொண்டு ஜட்கா வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. ஆள் அரவமில்லாத கப்பி ரோட்டில் வெய்யில் காய்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடுகள் பாதையோரத்துக் குத்துச் செடிகளை மேய்ந்து கொண்டிருந்தன. வண்டியோடு ஓடி வந்த நாய் ஒன்று அலுத்துப் போய்த் திரும்பி நடந்தபோது ஒப்புக்குக் குரைத்தது.

 

இந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு நம்மேல் ஏன் இத்தனை கரிசனம் என்று ராமச்சந்திரனுக்குப் புரியவில்லை.

 

இங்கே உட்காராதே.. வரையாதே.. சரி.. வீட்டுக்கு வா…  மதியத்துக்கு முன்னால் கிளம்பி விடு…. இரு.. சாப்பிட்டுட்டுப் போ… ஆள் அனுப்பி பஸ் ஏத்தி விடச் சொல்றேன்..

 

‘சாருக்கு சொந்த ஊரு எது?’

 

கணபதி வண்டிக்காரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு உள்ளே திரும்பிக் கேட்டான்.

 

எல்லோருக்கும் ஏனோ இதைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தகவல் ஒரு பரிச்சயத்தை முழுமையாகச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

 

‘தஞ்சாவூர் பக்கத்திலே..’

 

‘நஞ்சை பூமி. மூணு போகம். தெரியுமில்லே அண்ணே?’

 

கணபதி வண்டிக்காரனை விசாரித்தான்.

 

தினம் அவ்வளவு முடியுமா என்ன?

 

ராமச்சந்திரனுக்கு சிரிப்பு வந்தது.

 

அரிசி உண்டாக்கறதும் போகம். அரிவை முயக்கும் போகம்.

 

‘சார் என்ன சிரிக்கறீங்க… இவனுக்கு அதெல்லாம் என்ன தெரியும்னா? எல்லாம் சுத்திட்டு இப்ப அடங்கியாச்சு..’

 

‘சுத்தமா அடங்கியாச்சா?’

 

வண்டிக்காரன் கேட்டான்.

 

‘ஏன், உம்ம மச்சினியை அனுப்பிச்சுக் கேக்கச் சொல்லுமே’

 

‘இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லு. எதுத்தாப்பிலே யாரு வரான்னு பாத்தியா?’

 

‘அட, என் வீட்டுக்காரி.. இங்கே எங்கே வரா? ஒரு நிமிட்டு நிறுத்துங்கண்ணே’

 

தலையில் சுள்ளிக் கட்டோடு ஒரு பெண் வண்டிக்குப் பக்கத்தில் நின்றாள்.

 

‘நீ இங்கே என்ன பண்ணிட்டிருக்கே பிள்ளே?’

 

கணபதி கீழே குதித்தான்.

 

‘சார் ஒரு நிமிட்’

 

அவன் ராமச்சந்திரனைப் பார்த்து அவசரமாகச் சொன்னான்.

 

அதற்குள் அந்தப் பெண் இரைய ஆரம்பித்திருந்தாள்.

 

‘நீ என்ன நெனச்சிட்டிருக்கே.. காலையிலே புட்டு அவிச்சு வச்சேன்.. பசியாற வரலே… மதியம் சோறு பொங்கி இறக்கிட்டுக் காத்திருந்தேன். . ஆளே அட்ரசு இல்லாம எங்கேயோ ஓடிட்டே.. என்ன ஆச்சுய்யா உனக்கு?’

 

‘ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டுலே கொஞ்சம் வேலை இருந்துச்சு. அவங்க வீட்டம்மா ஊருக்குப் போயிருக்காங்களா, அதான்..’

 

‘கோமணம் தோச்சுக் கொடுத்திட்டு இருந்தியா?’

 

வண்டிக்காரன் அனுபவித்துச் சிரித்ததைப் பார்க்க ராமச்சந்திரனுக்கும் சிரிப்பு வந்தது.

 

கணபதி கொஞ்சம் சங்கடத்துடன் ‘தே.. சும்மா கிட.. விட்டா நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறே.. வண்டியிலே ஆளு இருக்கு.. சாரோட விருந்தாளி’ என்றான்.

 

‘இருந்திட்டுப் போகட்டுமே. நான் என்ன அவரைப் பத்தியா புரணி பேசிட்டு இருக்கேன்.. நம்ம கதையே பேசி ஓய மாட்டேங்குது..’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன