ராத்திரி வண்டி குறுநாவல் பகுதி 7 அ
————————————————————————-
‘இப்ப என்னன்னு சொல்லு விஷயத்தை…நான் அவசரமாப் போகணும்..’
‘ஒண்ணுமில்லேய்யா, என் தம்பி வந்திருக்கான். நாளைக்கு முத்துப்பட்டியிலே பொண்ணு பார்க்கப் போகப் போறானாம்’
‘மவராசனாப் போய்ட்டு வரட்டும்’
‘நாமளும் கூட வரணுமாம்’
‘நான் எதுக்குடி? அப்புறம் பொண்ணுக்கு என்னைப் பிடிச்சுப் போயிடுத்துன்னு வச்சுக்க… அவனுக்குக் கல்யாணம் ஆகணுமா, வேணாமா?’
‘ஆமா.. உன் மூஞ்சிக்கு நான் ஒருத்தியே சாஸ்தி.. பழனியண்ணே நல்லாச் சொல்லுங்க இந்த ஆளுக்கு. மனசுலே பெரிய மம்முதக் கொரங்குன்ன்னு நெனப்பு. அடிக்கடி டவுனுக்குப் போறேன்னு கிளம்பிடறாரு சண்டியர். எங்க வேணுமின்னாலும் ஒழி. வயத்துக்குக் கொட்டிக்கிட்டுப் போ. அது போதும்..’
’இரு இரு வந்து கவனிச்சுக்கறேன்.. தம்பி இருக்கானா போய்ட்டானா?’
‘நாட்டரசன்கோட்டைக்குப் போயிருக்கான். காலையிலே வந்துடுவான். ரெட்டரெடியா இருக்கச் சொல்லியிருக்கான்’
’ஆமா இவரு பெரிய ஜில்லா கலக்டரு. சமூகத்தை எதிர்பார்த்து வாயையும் பின்னாலேயும் பொத்திக்கிட்டு காத்து நிக்கணும்..’
‘நீ எங்கெ வேணும்னாலும் பொத்திக்க. விளக்கு வைக்கறதுக்குள்ளே வந்து சேர்ற வழியைப் பாரு. உடம்பைப் பாரு. வத்தக் காச்சியாட்டமா. சமைச்சு வைக்கறதை கொட்டிட்டுப் போக உனக்கு வலிக்குது..’
‘வரேன்.. வரேன்.. வந்து வாயிலேயே போடறேன்’
‘வரும்போது திருநெல்வேலி அல்வா வாங்கிட்டு வா… ஆமா.. சும்மா கையை வீசிக்கிட்டு வந்து நிக்காதே..’
‘சரிதான் போ புள்ளே… வெய்யில்லே அலையாம வீட்டுக்குப் போ.. விட்டா ஓலைப் பாயிலே ஒண்ணுக்கிருக்கற மாதிரி பேசிட்டே போவியே.. அல்வாவாம் அல்வா..’
ராமச்சந்திரனுக்குத் தெரியும். இது கோபமில்லை. இவன் சாயந்திரம் அல்வாவோடு போய் நிற்பான். அவள் காத்திருப்பாள். சமைத்து வைத்து விட்டுக் காத்திருப்பாள். மல்லிகைப் பூவுக்கும், இவனுக்கும். குடிசையோ, அஸ்பெஸ்டாஸ் தகடு வேய்ந்தோ ஒரு வீடு. வழி மறித்து வாயைப் பிடுங்கி ரசிக்கிற மனைவி. வாசலில் காத்திருக்கிற மனைவி.
‘ராமச்சந்திரா, நிச்சயமா நீ லைஃப்லே செட்டில் ஆகறதுக்குக் கல்யாணம் பண்ணிட்டுத் தாண்டா ஆகணும்’
‘எனக்கு எவன் பொண்ணு தருவாண்டா சரவணா? என்ன இருக்கு ஆஸ்தி? உன்னோட ஸ்டூடியோவிலே ஒட்டிக்கிட்டு உனக்குக் கூடமாட பானர் வரைஞ்சு தரேன். நீ நாளைக்கு வெளியே போன்னு சொன்னா வேலையும் போச்சு.. தலைக்கு மேலே கூரையும் போச்சு..’
‘உன் கையிலே கலை இருக்குடா ராமச்சந்திரா.. ஹுசைன் மாதிரி, விவியன் சுந்தரம் மாதிரி, பூபேன் கக்கர் மாதிரி நீ ஒரு நாள் வரத்தான் போறே.. நான் தான் பானரோட நின்னுட்டேன். நீ நல்லா வரத்தான் போறே.. வீடு வீடுன்னு மாஞ்சு போறியே.. நிச்சயம் உனக்குன்னு வரத்தாண்டா போகுது.. பொண்டாட்டி, பசங்க, கட்டில், நாற்காலி… பூபன் கக்கரோட சிவன் சிலையோடு ஒரு ஷோ கேஸ் படம் மாதிரி சகலமும் அடுக்கி வச்ச ஷோ கேஸ்… உன்னாலே முடியும்டா நல்லா வர’
‘ஆனா நான் காலேஜிலே டிராப் அவுட். மெஸ் பில் கட்டப் பணம் இல்லேன்னு வெளியே அனுப்பிச்சபோது நீ மட்டும் வான்னு கூட்டிட்டு வராட்ட நான் இன்னிக்குத் தெருவிலே சாக்பீஸ்லே படம் போட்டுச் சில்லறை பொறுக்கிட்டிருப்பேன். தெருவிலே அனுமார்தான் போடணுமா? சர்ரியலிஸ்டிக்கா சாக்பீஸ்லே படம் போட்டு பஸ் அழிச்சது போக மிச்சத்தை வச்சிருந்தா எப்படிடா இருக்கும்? நாலு பேராவது காசு போடுவாங்களா?’
‘திடீர் திட்டினு என்னடா பேத்த ஆரம்பிச்சுடறே? கல்யாணம் நடந்தா அப்புறம் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது. என்ன பேசறோம், யார் கிட்டப் பேசறோம்னு மனசுலே வச்சுக்கணும். சும்மா ஒரு புஸ்தகத்தைக் கையிலே வச்சுக்கிட்டு, அதுவும் ஒரே புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிச்சுக்கிட்டுப் பொண்டாட்டி கிட்டே போய் திடுதிப்புனு வித்துவான் தியாகராசச் செட்டியார், கட்டளைக் கலித்துறைன்னு என்கிட்டே சொல்ற மாதிரிப் பேசக் கூடாது. மிரண்டு ஓடிப் போயிடுவா’.
‘வந்தா இல்லேடா ஓடறதுக்கு. என் மூஞ்சிக்கு யார்டா சரவணா கழுத்தை நீட்டுவா?’
‘ஏண்டா உன் மூஞ்சிக்கு என்னடா? கொஞ்சம் நாக்கைத் துருத்தறதைக் கொறைச்சுக்கிட்டு தலையை வாரி, ஷேவ் பண்ணிக்கிட்டேன்னா, இதோ பாரு, இந்த ஓரமா வரஞ்சிருக்கேனே.. தெலுங்குப் பட செகண்ட் ஹீரோ.. அவன் மாதிரி இருப்பே’
ராமச்சந்திரன் நாக்கைச் சட்டென்று உள்ளே இழுத்து, உதடுகளை அழுத்தமாக மூடிக் கொண்டு வண்டிக்குள் பதிந்திருந்த சிறிய, சாயம் போன கண்ணாடியில் முகம் பார்த்தான்.
மம்முதக் கொரங்காட்டமா இருக்கு.
கணபதியிடம் வண்டிக்காரன் சித்தினி ஜாதிப் பெண் என்று ஏதோ ஈடுபாட்டோடு பேசிக் கொண்டிருந்தான்.
‘நீ விவரமான ஆளு அண்ணே.. இதெல்லாம் எங்கே தெரிஞ்சுக்கிட்டே?’
‘அனுபவம்டா தம்பி. கேட்டுக் கேட்டுப் படிஞ்சது வேறே. சொந்தமாத் தெரிஞ்சுக்கிட்டதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா நான் சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். நீ கேட்டுக்கிட்டே வாயைத் தொறந்துக்கிட்டு இருக்க வேண்டியது தான். உன் வயசுக்கு நான் எத்தனை பார்த்திருப்பேன். இன்னமும் தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. பொன்னாத்தா தெரியுமா?’
‘கீரை வித்துட்டு வர கிழவி தானே’
‘இப்பத் தாண்டா கிழவி தம்பி.. வாலிபத்துலே… ரவிக்கை எல்லாம் ஏது அப்ப? சேலைத் தலைப்பையும் இடுப்புலே சொருகிட்டு.. கையெல்லாம் மொசமொசன்னு முடி..’
‘அய்யே ஆம்பள கணக்கா மொசமொசன்னு’
’அட போடா விஷயம் தெரியாதவனே.. முடி இருந்தா..’
ராமச்சந்திரன் முணுமுணுத்தான்.
மொசமொசன்னு மொசமொசன்னு
பாஸ்போர்ட் சைச் போட்டோவிலே கை தெரியுமா என்ன?
‘இதாண்டா பொண்ணு.. பார்த்துக்கடா ராமச்சந்திரா.. ஊரு ஆம்பூர் பக்கம். நம்ம பெய்ண்டர் ரங்கசாமிக்கு அக்கா முறையாம் இவங்க அம்மா. உங்க வகை ஆளுதான். உனக்கு சரிடா…அவங்க எல்லாம் பாக்கறாங்களே.. ஏழைப்பட்ட குடும்பம். அப்பா தாலுகா ஆபீஸ்லே கிளாஸ் ஃபோரா இருந்திட்டு ரிடயர் ஆனவராம்.. அதாண்டா, டவாலி சேவகம்..’
‘பொண்ணுக்கு உதட்டுக்கு மேலே லேசா மீசை இருக்கு போல இருக்கே?’
‘டேய் நீ என்னடா நெனச்சிட்டிருக்கே.. இங்கே வாடா சொல்றேன்.. இந்தா பாரு.. பெரிசா மாரை வரஞ்சுக்கிட்டிருக்கேனே.. இந்த ஹீரோயினை பாத்திருக்கியாடா? கையெல்லாம் முடி’
‘அவளையே கட்டிக்கிடலாமா?’
‘ஆமா, வாசல்லே மாலையை வச்சுக்கிட்டு ரெடியா நிக்கறா.. போய்ப் பாரு.. ரவிக்கையிலே ஜிகினா ஒட்டணும்.. செய்யறியா? படத்துலேடா’
சப்த கோலாகலங்களுடன் நகரம் முன்னால் விரிந்தது.
‘உங்கள் நாவிற்கினிய கொத்து புரட்டா, வீச்சு புரட்டா, வடைகறி, தோசை, இட்லி வகைகளுக்காக இன்றைக்குப் புதியதாகத் திறக்கப் பட்டிருக்கிறது, விடிவெள்ளி ஈவினிக் மட்டன் ஸ்டால். ஒரு முறை வருகை தந்தால், மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கக் கூடிய சுவையான உணவு.. விடிவெள்ளி..’
ஒலிபெருக்கி இடைவிடாமல் அலறிக் கொண்டிருந்தது.