‘கணபதி, வீச்சுப் பொரட்டா வாங்கிட்டுப் போ’
வண்டிக்காரன் சொன்னான்.
‘போறதுக்குள்ளே ஆறிடுமே அண்ணே’
‘நீ சூடா இருக்கேயில்லே.. அது எப்படி ஆறும்?’
பஸ் ஸ்டாண்ட்.
‘சார், நீங்க இருங்க.. ஸ்டேஷன் மாஸ்டர் ஐயா பணம் கொடுத்து விட்டிருக்காரு வண்டிச் சத்தத்துக்கு.. நீங்க எடுக்க வேணாம்… பழனியண்ணே.. இந்தாங்க…. சார், இறங்கிக்கலாம்.. நீங்க இறங்குங்க.. மூட்டையை நான் இறக்கறேன்.. இதிலே பூரா படமா இருக்கா சார்? கனமாக் கனக்குது. பழனியண்ணே.. நீங்க பாக்கலியே. சார் என்னமா படம் போட்டாரு காலையிலே.. உங்க சித்தினி சாதிப் பொண்ணு தான்’
‘எனக்கு எதுக்குடா படம் எல்லாம்… நேரேயே பாத்துப் பாத்து அலுத்துப் போச்சு..’
’அப்ப ஓரமா வண்டியைப் போட்டுட்டுப் பார்த்துக்கிட்டே இருங்க.. சார் மண்டபம் போகணும்.. பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்.. ஸ்டேஷன் பக்கம் திரும்பற சவாரின்னா நானும் முன்னாடி தொத்திக்கறேன்.. சரிதானே?’
கணபதி சுறுசுறுப்பாக குதிரை வண்டியிலிருந்து மூட்டை முடிச்சை இறக்கி வைத்தான்.
ராமச்சந்திரன் ஒரு முறை தீர்க்கமாகச் சுற்றிலும் பார்த்தான்.
பஸ் பஸ்ஸாக வெள்ளரிக்காயும், பலாச்சுளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மூட்டை ஏற்றினார்கள். பரிசுச் சீட்டு விற்கிற பையன்கள் புகுந்து புறப்பட்டார்கள், எட்டு மடிப்பான காலைப் பத்திரிகையைப் பிரித்து விசிறிக் கொண்டு வெளியே சிகரெட் குடிக்கிற கண்டக்டரையும் டிரைவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். கிளம்புகிற பஸ்களில், கழுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டு, வெற்றிலையைத் துப்பி விட்டுப் பராக்குப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
‘சார், இதான் மண்டபம் போற பஸ்’
தூரத்தில் சிமெண்ட் பெஞ்சில் தோல்பையை மாலை போல தொங்கவிட்டுக் கொண்டு கண்டக்டர் நிஷ்டையில் இருக்கிற மாதிரி அமர்ந்திருக்க, அழுக்குத் துண்டோடு ஒருவன் ‘ராமநாதபுரம்.. மண்டபம்’ என்று அடிக்கொரு தரம் கத்திக் கொண்டிருந்தான்.
’சார்.. நீங்க போய் டிக்கெட் வாங்கிட்டு வாங்க. நான் இந்தப் படுக்கையை மேலே ஏத்திடறேன்.. மேலே வேணாம்.. மீனும் கருவாடுமா வரும்போது ஏத்திட்டு வந்து, ஒரே கவிச்ச நாத்தம் பிடிச்சுக் கிடக்கும். உள்ளேயே போட்டுடறேன். கடைசிக்கு முந்தின சீட்டு. நேரே வந்து உக்காந்துடுங்க.’
ராமச்சந்திரன் கண்டக்டரை நோக்கிப் போனான்.
‘என்ன சார் இப்படி பொம்முனு இருக்கு? கொஞ்சம் இறுக்கமாக் கட்டிட்டா உள்ளே போட்டுடலாம்..சரி, நீங்க போங்க. நான் பாத்துக்கறேன். சார்.. ஒரு நிமிஷம்… பஸ் கிளம்ப இன்னும் அரை அவராவது ஆகும்கிறாங்க.. நான் இதோ போய்ட்டு ஓடி வந்துடறேன். கிளம்பறதுக்குள்ளேஎ வந்துடுவேன். நீங்க ஏறிக்குங்க;
ராமச்சந்திரன் தலையை ஆட்டிக் கொண்டே நடந்தான்.
***************************** *******************
கணபதி ஒரு பொட்டலத்தைக் கையில் மாறி மாறி வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தபோது மண்டபம் பஸ் போயிருந்தது.
சே … புதுக்கடையினா கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டே பொய் மாட்டிக்கிட்டேன். பார்சலுக்கு வேறே நேரமாக்கிட்டான். சரி நாம நம்ம வேலையைப் பார்த்தாச்சு.. அந்த ஆளு போயிருப்பாரு சவுக்கியமா.. கூடவே கையைப் பிடிச்சுட்டுப் போயா விட்டுட்டு வர முடியும்? போகட்டும் போ. ஒரே சூடா சுடுதே. ஆறதுக்குள்ளே போனா அந்த சனியனுக்குத் தரலாம். ஆசையாச் சாப்பிடும்.. பழனியண்ணன் வண்டி எங்கே போச்சு?
யாரோ தோளைத் தொட்டார்கள்.
திரும்பினால், ராமச்சந்திரன் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்.
‘ஐயயோ.. என்ன சார்.. பஸ் போயிடுச்சு போல இருக்கே.. எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கிட்டு நின்னுட்டீங்களா? படுக்கை வேறே வண்டியிலேயே மாட்டிக்கிடுச்சே.. ஸ்டேஷன் மாஸ்டர் படிச்சுப் படிச்சுச் சொன்னாரு.. இவர் கொஞ்சம் ஒரு மாதிரி.. திடீர்னு எங்கேயாவது எதையாவது நினைச்சுக்கிட்டு நின்னுடுவார். பார்த்து பஸ்ஸிலே ஏத்தி விட்டுட்டு வான்னு.. உங்க சங்கதி தெரியாம நான் வெளியே போனது என் தப்பு தான்.. இனிமே வேறே வண்டி கூட கிடையாது.. ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிய வந்தா, என்னை ஒரே முட்டா ஏசுவாரு.. என்ன சார்.. நீங்க பாட்டுக்கு நிக்கறீங்க.. பஸ் போயிடுச்சு சார்.. யாருக்கோ வந்ததுன்னு நிக்கறீங்களே… உங்க பஸ் தான் சார்.. எப்படி விட்டீங்க?’
‘மண்டபம் போக டிக்கட் பதினஞ்சு ரூபாயாம். எங்கிட்டே சட்டைப் பையிலே அஞ்சு ரூபா தான் இருக்கு’
‘ஏன் சார், ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டே முன்னாடியே அத்தச் சொல்லியிருந்தா என்ன? வண்டிச் சத்தம் கொடுத்தவர் பஸ்ஸுக்கு கொடுக்க மாட்டாரா என்ன? ஆமா, என்ன நம்பிக்கையிலே தேசாந்தரம் கிளம்பி வந்தீங்க பையிலே அஞ்சு ரூபாயை மட்டும் வச்சுக்கிட்டு?’
’நூறு ரூபா இருந்துச்சு.. எந்தச் சட்டையிலே வச்சேன்னு ஞாபகம் இல்லே. அந்த ஹோல்டாலுக்குள்ளே தேடினாக் கிடைக்கும். அதான் பஸ்ஸோடு போயிடுச்சே..’
‘நல்ல ஆளு சார் நீங்க. இப்ப எங்கே போய்த் தேடறது? என்ன பண்ணப் போறீங்க?’
‘வாங்க.. திரும்பப் போயிடலாம். நடந்தே போயிடலாம். நீங்க கூட ஏதோ வாங்கணுமில்லே. அஞ்சு ரூபா போதுமில்லே?’
பஸ் ஏஜெண்ட் அழுக்குத் துண்டில் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ‘தொண்டி.. திருவாடானை, இளையான்குடி’ என்று கூவ ஆரம்பித்திருந்தான். கணபதி ஓட்டமும் நடையுமாக அவனை நோக்கிப் போனான். வேடிக்கை பார்க்கிற சுவாரசியத்தோடு ராமச்சந்திரனும் அவனுக்குப் பின்னால் ஓடினான்.
‘இப்ப எங்கேன்னு பிடிக்கறது? நாளைக்கு மதியத்துலே வண்டி திரும்ப இங்கே வரப்போ இருந்துச்சுன்னா எடுத்து வைக்கறேன். நீங்களும் மதுரை ஆபீஸுக்கு போன் அடிக்கச் சொல்லுங்க.. ராத்திர் வண்டி ராமநாதபுரத்துலே ஷெட்டுக்கு போகும். அங்கேயும் சொல்லி வைக்கச் சொல்லுங்க.. செல்வராசு முதலியார்னு மேனேஜர்.. கொஞ்சம் காது மந்தம்.. அவர் கிட்டே தான் தாக்கல் சொல்லணும்.. முத்துப்பாண்டி தான் இன்னிக்கு கண்டக்டரா ஓடறாரு… நாளைக்கும் அவரே இருந்தா கேக்கலாம்..வழியிலே ஏறி இறங்கினவன் எவனாவது கிளப்பிட்டுப் போயிருந்தா, போனவன் போனாண்டி தான்.. சாரோட பொட்டியா? உன்னோட அவரையும் பொரட்டா ஸ்டாலுக்குக் கூட்டிப் போயிட்டியா என்ன வண்டி கிளம்பறது கூட தெரியாம? என்னய்யா நீ ரயில்வேக்கார ஆளா இருந்துக்கிட்டு வண்டியை கோட்டை விட்டுட்டு நிக்கறே? நல்ல ஆளுங்கய்யா.. தொண்டி,,, திருவாடானை..’
‘இவரை ஒரு கேள்வி கேட்டா இவரு நம்மளை ஒன்பது கேள்வி கேக்கறாரு.. ராமவிலாஸ் பஸ் சர்வீஸே அய்யா நிர்வாகத்துலே தான் ஓடற மாதிரி.. சார் என்ன பண்ணலாம்?’
கடகடவென்று வண்டி சத்தம்.
‘என்னய்யா கணபத், சார் இன்னும் வண்டி ஏறலியா? மூட்டை முடிச்செல்லாம் எங்கேய்யா? வித்துப் பொரட்டா வாங்கிட்டு வந்துட்டீங்களா?’
‘மூட்டையா.. அது மட்டும் மண்டபம் போயிடுச்சு. சார் போறதுக்கில்லேன்னுட்டாரு.. திரும்ப ஊருக்குப் போறாராம்..’
‘அதான் இன்னிக்கு ரயில் இல்லேன்னியேப்பா’
‘நாளைக்குப் போகப் போறாராம். பணம் தனியா எடுத்து வச்சிருக்காரு’
ராமச்சந்திரன் பலமாகச் சிரித்தான்.
‘எல்லாம் போச்சு. இனிமேல் புதுசா எல்லாம் வரையலாம்’
‘போயிருக்காது.. நாளைக்குக் கெடச்சுடும். ஸ்டேஷன் மாஸ்டர் சார் கிட்டே சொல்லுங்க’
‘ஏறுங்க போகலாம்.. போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு’
வண்டிக்காரன் சொன்னான்.
‘பொரட்டாவோட’ என்றான் ராமச்சந்திரன்.
(தொடரும்)