இடமும் காலமும் நடப்பும் பிரமையுமாக ஒரு பிரவாகத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக, மேல் கீழாக

ராத்திரி வண்டி                          இரா.முருகன்                  பகுதி – 8

 

ராமச்சந்திரன் கண்ணை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு தடவை இமை மூடும் போதும் இந்த உலகமே பிடிக்கு வழுக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இடமும் காலமும் நடப்பும் பிரமையுமாக ஒரு பிரவாகத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக, மேல் கீழாகப் பயணம் போகிறான். முன்னால், இன்னும் முன்னால் போய், தொடங்கிய இடத்துக்கு வருகிறான்.

 

கண்ணைத் திறக்கும் போதெல்லாம் எதிரே உட்கார்ந்து பாட்டிலிலிருந்து கிளாஸில் நிறைக்கிற ஸ்டேஷன் மாஸ்டர் தான் இந்த உலகத்தோடு ஒரே தொடர்பாகத் தெரிகிறான்.

 

‘ராசு… ராமச்சந்திரனா.. அட போடா..நீ வேறே என்ன பெயர் வச்சுக்கிட்டா என்ன .. எனக்கு நீ ராசு தான்.. சொல்லுடா தம்பி.. அட, எனக்கு மட்டும் சொல்லுடா.. அவ எப்படிடா உங்கூட வந்தா? நான் தான் அவளுக்குக் காத்துக்கிட்டு டைப்பு அடிக்கற போது அவ பின்னாடியே போனேன்.. அவ இல்லேயிலே .. ஆமா .. அது பிரஸ்காரன் பொண்ணு.. இவ.. டீக்கடைக்காரன் சம்சாரம்.. நீ போனே பாரு.. எப்படிடா தவற விட்டேன்.. இட்டுட்டு வந்திருப்பேன்.. மயிரு உத்தியோகம்.. இந்தப் புடுங்கி உத்தியோகத்தைச் சொல்லியே இவளை அட அதாண்டா உங்க அண்ணியைக் காட்டிப் பிடிக்குதான்னு கேட்டாங்க… என்னமோ ஆர்வக் கோளாறு.. சரின்னுட்டேன்.. கட்டி வச்சுட்டாங்கடா.. கடனேன்னு படுக்க வரா.. கருவாட்டுக் குழம்பு மட்டும் நல்லா வைக்கிறா… நீ சாப்பிட மாட்டியா? கருப்புக் கம்பளி சாமியார் போல சைவமா இப்போ? பூசணிக்காய் சாம்பார் கேசா? டிராயிங் மாஸ்டர் போடுவாரே… முதுகைச் சொறிஞ்சுக்கிட்டு வரிசையா… படம்னா அது படம்.. நீயும் வரையறியே.. அது என்னடா கட்டடம் எல்லாம் கரி படிஞ்சு? டீக்கடையா? அப்போ பாய்லர் எங்கேடா? படம் போட்டா ஒரு தெளிவு வேணும்.. என்ன கவனிக்கறியா?  பார்க்க சந்தோஷமா இருக்கணும். என்ன ஏது யாருன்னு புரியணும்.. பொணத்தை எரிக்கறதும் மாடிப்படியிலே இருட்டிலே ஒண்ணுமில்லாம மொட்டக் கட்டையா நிக்கறவளும் என்னடா படம்? சொல்லுடா ராசு.. அண்ணன் கேக்கறேனில்லே..’

 

‘ஓவியத்தில் காணப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் அதன் நிஜ உருவத்துக்கும் தொடர்பு காண நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். அது ஒரு போதும் சரியாக அமைவதில்லை. ஓவியத்தை, ஓவியனின் கண் கொண்டு பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதை முழுமையானதாக, ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட தூரிகை வீச்சுக்களின் தொகுப்பாக, வண்ணங்களும், உருவமும், பின்புலமும் சேர்ந்து பிரத்யேகமாக ஏற்படுத்திக் கொண்ட உலகமாகப் பார்க்க வேண்டும். ஓவியம் உங்கள் பார்வைக்கும், கவனிப்புத் திறனுக்கும் சவால் விடுகிறது என்பது போல அதை எதிர்கொள்ளாதீர்கள். அது ஒரு மகிழ்ச்சியின், துக்கத்தின், பயத்தின், கோபத்தின் வெளிப்பாடு. பகுதி குறியீடாக, பகுதி இயல்பாக, ஒரு குறுகுறுப்போடு, மிரட்சியோடு, திகைப்போடு வெளிப்படுகிற ஒன்று. அய்யப்பப் பணிக்கர் சொல்கிறது என்னவென்றால் – ஓவியன் சத்தியத்தின் ஒரு துகளைத் தன் போக்கில் சித்தரிக்கிறான்’.

 

‘அது யாரு மலையாளத்தான்? டீக்கடைக்காரன் தானே? கில்லாடிடா நீ. சரிக்கட்டிட்டியா? கையிலே பருப்பு வடையும் பொறை பிஸ்கட்டும் பொட்டலம் கட்டிக் கொடுத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து ரெண்டு பேரையும் அனுப்பி வச்சானா? ஆனாலும் இப்படி பஸ்ஸை விட்டுட்டு நிக்கறியேடா.. நான் அவ கூடப் போயிருப்பேன்..இந்த சாணிக் காகித உத்தியோகமும் இவ கழுத்திலே கட்டின தாலியும் தான் தடுத்துக்கிட்டு காலைப் பிடிக்குது.. நீ ஓடுடா.. துரத்திக்கிட்டு பின்னாடியே ஓடு. எவ பின்னாலேயும் போ, எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லே… உங்க அண்ணி கைமணம் வருமாடா எவளுக்கும்? தெய்வம்டா… அவ என்னப் பார்த்து பூ இவ்வளவு தான்’யா நீன்னு சிரிச்சாலும், எவனும் நாக்கைத் துருத்திக்கிடு வர பய கூடக் கிளம்பிப் போயிட மாட்டா..என் புத்தி தாண்டா லோலோன்னு அலையறது.. ஆனா உடம்பு ஸ்ட்ராங்க்.. நீத்துப் போயிடுமா.. சரிதான் போடா.. கொஞ்சம் ஊத்திக்கடா.. வேணாம்னு சொல்லாதே.. தம்பியைப் பார்க்க வச்சிக்கிட்டுக் குடிச்சா பெரும் பாவம்.. ராமச்சந்திரா.. ராசு.. நேரத்துக்கு ஒரு பெயர்டா உனக்கு.. கூட்டிட்டுப் போனியே.. கல்யாணம்னு சொல்லி ஒரு மஞ்சக் கயித்தையாவது அவ கழுத்திலே கட்டினியா?’

 

‘கல்யாணமா? உன் மூஞ்சிக்குக் கல்யாணம் ஒரு கேடான்னு கேட்டாங்க சார்.. உள்ளே கூப்பிட்டுப் போய் உட்காரச் சொல்லுவாங்கன்னு பாத்தா திண்ணையிலேயே அழிச்சாட்டியமா உக்கார்த்திட்டாங்க. ரொம்ப நாழி கழிச்சு காப்பி கொடுத்தாங்க..கொட்டு கொட்டுன்னு உக்காந்துக்கிட்டு நான் வாசலைப் பார்த்துக்கிட்டிருக்கேன்.. அப்புறம் மெதுவா சொல்றாங்க.. சரவணன் தான் மாப்பிள்ளைன்னு நினைச்சாங்களாம்.. அப்ப நான்? அவனுக்கு எடுபிடியாப் போனவன்னு வச்சுக்கிட்டாங்க போல.. என்னை அந்தக் கிழவனும் கிழவியும் புழு மாதிரிப் பாத்தாங்க சார்.. அந்தப் பொண்ணு.. ஜன்னல் வழியா முகமும் கையும் தெரியுது.. கையெல்லாம் லேசா முடி… நான் கவனிச்சேன்.. அவ சரவணனைப் பாத்துட்டு உள்ளே போயிட்டா… லட்சணமா இருக்கா.. பளிச்சுனு .. அழகா.. கும்பிட வைக்கிற அழகு.. எந்த தீத்தாராண்டியாவது கூப்பிட்டா? போறான் போ.. கும்பிட்டுக்கிட்டே கூப்புடுவோம்ங்கிறானுங்க..’

 

ராமச்சந்திரன் பிரவாகத்தில் தத்தளித்தும், முழுகியும் மேலே எழும்பி வருகிறான்.

 

‘சரோ.. சரோ.. வரியா..?’

 

‘போயிடுங்க.. நான் அந்த மாதிரிப் பொம்பளை இல்லே.. ஆம்பளை இல்லாத வீடுன்னு வம்பு பண்ணாதீங்க. எம் புருஷன் ஜெயிலுக்குப் போயிட்டா என்ன, திரும்பி வராமலா போயிடுவாரு? கஷ்டமோ நஷ்டமோ நானும் என் பிள்ளையும் பட்டுக்கறோம்..சமையல்காரின்னா இளப்பமா.. நிக்காதீங்க.. போயிடுங்க…’

 

‘உடனே போயிடலாம் வா.. வீட்டுலே யாரும் இல்லே..’

 

’நான் வரலே’

 

‘நாகராசன் கிட்டே காலையிலே இங்கே அரிசி கொண்டு வந்து போடச் சொல்லியிருக்கேன்’

 

‘என்னை என்ன ஒழிஞ்ச நேரத்துலே துணி விரிச்சா உப்பு புளிக்கு ஆகும்னு நினைக்கறவளா வச்சுட்டீங்களா?’

 

‘சத்தம் போடாதே. பையன் எந்திருச்சிடப் போறான். ஏதோ போனோம் வந்தோம்னு இல்லாம.. முதல் தடவை மாதிரியே எப்பவும் தகராறு செஞ்சா எப்படி? இந்தப் பேச்செல்லாம் இப்ப எடுபடாது..வா.. நேரமாகிக்கிட்டு கிடக்கு.. இவ இங்கே ஓட்டை உடசலை எல்லாம் அடச்சு வைக்காட்ட இங்கேயே வந்துடுவேன்..பையன் முகப்புலே தானே படம் போட்டுக்கிட்டிருக்கான்..நாற்காலி, தாம்புக் கயிறு.. எழவு.. எல்லாத்தையும் இங்கே எறிஞ்சு வச்சிருக்கா.. ஒரு நாளைக்கு என்னையும் கொண்டு வந்து எறிஞ்சுட்டான்னா, அப்புறம் உன் காலடியிலேயே கிடப்பேன்..’

 

தடாரென்று கதவைத் திறந்து கொண்டு வந்து ஏதோ பழைய குப்பையை உள்ளே எறிந்து விட்டுப் போகிறாள் வீட்டுக்காரனின் மகள். அது சால்வடார் டாலியின் ஓவியம் – நிலையான காலம். சிவகாசிக் காலண்டரில், வார்னிஷ் வழவழப்பில், காபிப் பொடி விளம்பரத்தோடு வந்திருக்கிற படம். மேடை மேலும், தரையிலும், செத்துப்போன கடியாரங்கள் கோரமாக உடல் பிதுங்கித் தொங்குகின்றன. மரக் கிளையில் ஒரு கடியாரம் தூக்கு மாட்டித் தொங்குகிறது. உள்ளங்கை நிலத்தைத் தொடத் தொங்குகிறவன் படத்திலிருந்து சரோ..சரோ.. என்று அம்மாவைக் கூப்பிடுகிறான். ராமச்சந்திரனின் பார்வை ஒரு சிறிய வட்டத்தை மட்டும் வெளிச்சம் போட. காதில் மின் விசிறி சத்தமும், ஸ்டேஷன் மாஸ்டர் குரலும்.

 

உலகத்தில் இவனை விடப் பரிச்சயமானவர்கள் யாரும் இல்லை. அம்மாவும் இறந்து போனாள்.

 

‘உனக்கு படிப்பு ஏறலே. படம் நல்லாப் போடறே. மெட்றாஸிலே என் தம்பி ஆர்ட் காலேஜ்லே சொல்லிக் கொடுக்கறான். அவனுக்கு லெட்டர் தரேன்.. இது உங்கம்மா எங்கிட்டே கொடுத்து போஸ்டல் சேவிங்க்ஸிலே சேர்த்து வச்சது.. ரெண்டாயிரத்துச் சொச்சம் இருக்கு…’

 

இவன் தான் சொன்னான். அப்போது இவனுக்கு நிறைய வயதாகி இருந்தது. தலை வழுக்கையாக, கண்ணாடி எல்லாம் போட்டுக் கொண்டு ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டராக இருந்தான்.

 

’ராமேந்த்ரன்.. படத்திலே மானசம்.. மனசைக் கொண்டு வந்து நிக்க வைக்கணும். வெறும் அனாடமியா ஆர்ட்? இல்லல்லோ.. அனாடமி அறிஞ்சு பிரஷ் பிடிச்சா பேனர் வரையலாம்.. நில்க்கண்டா..அதையும் கடந்து போகணும்.. புரிஞ்சுதா..’

 

இவன் சிகரெட் பிடித்தபடி சொன்னான். அப்போது இவன் ஓவியக் கல்லூரியில் ஓவியம் வரையச் சொல்லிக் கொடுத்தான்.

 

‘ஒரு வருஷத்தோட விட்டுட்டியேடா.. நான் பீஸ் கட்டறேன்.. தொடர்ந்து படிச்சு கம்ப்ளீட் பண்ணுடா’

 

இவன் தான் சொன்னான். மெட்றாலில் பேனர் ஆர்ட்டிஸ்டாக இருக்கிறான்.

 

‘நீ பிடிவாதம் பிடிச்சா பிடிச்சது தான்… சரி போ.. ஒழி.. கொஞ்ச நாள் என் கூடவே இரு.. பானர் வரையக் கத்துக்கோ.. காலேஜ்லே விட்டுட்டு ஓடி காசியிலே திரிஞ்சுட்டு வந்தூ நிக்கற மாதிரி இங்கேயிருந்து போயிடக் கூடாது. என்ன புரியறதா? மெஸ் பில் கட்ட முடியலேன்னு போனியா? அது ஒரு சாக்குடா உனக்கு.. உன் மனசுக்குள்ளே ஏதோ குட்டிப் பிசாசு இருக்கு.. அது போடற ஆட்டம்டா.. ‘

 

இவன் மட்டும் ஆதரவாகக் கைநீட்டி இருக்காவிட்டால் தெருவில் அலைந்து திரிய வேண்டி இருக்கும்.

 

‘இந்த ஓரமா நீ காமடியன் தலையைப் போடு. தவளையை முழுங்கறாப்பலே. இதான் ஸ்டில்.. பாத்துக்க.. போன வாரம் செல்வி டிடர்ஜெண்ட் சோப் போர்டுலே பண்ணின மாதிரி கூத்து பண்ணிடாதே..குவர்னிகாவிலே வர்ற ஒத்தை பல்பையும், குதிரைத் தலையையும் போட்டு நடுவிலே மாடலையும் சோப்போட உக்கார வச்சிருந்தியே.. செல்வராசன் திருப்பிப் போட்டான்.. போய்ப் பாரு.. சேலை வெலகினது தெரியாம துணி துவைக்கிற பொண்ணு.. இந்த வேலைக்கு பிகாஸோவும் மாட்டிஸேயும் வேணாம்.. ஒழுங்கா மாரு வரையத் தெரிஞ்சாப் போதும்’

 

இவன் சொன்னபோது குரலில் கோபமே இல்லை.

 

ராமச்சந்திரன் ஸ்டேஷன் மாஸ்டரைக் கவனித்துப் பார்த்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன