ராமச்சந்திரன் ஸ்டேஷன் மாஸ்டரைக் கவனித்துப் பார்த்தான்.
‘சரவணா.. சாரிடா.. வெரி சாரி.. இனிமே கவனிச்சு சரியா வரையறேண்டா.. நாளைக்கு வந்து நிச்சயம் வரஞ்சு தரேன். இன்னிக்கு ரயில் ஓடாதாம்.. வர முடியலே.. மன்னிச்சுக்கோ..’
‘நீ தப்பு ஏதும் பண்ணலேடா.. எதுக்காக வருத்தப் படறே.. நான் தாண்டா தப்புப் பண்ணிட்டேன். உன் பங்குக்கு எடுத்து வச்ச பணத்திலே அப்பா கருமாதி காரியம் எல்லாம் நடத்தினேன். இதுவும் பொய் தாண்டா. நான், இவ கேட்டாளேன்னு ரெட்டை வடம் செய்யறதுக்கு அதிலேருந்து தான் எடுத்துக்கிட்டேன்.. இந்த வருஷம் அரியர்ஸ் வரும். திருப்பிப் போட்டுடறேண்டா. அப்ப எறந்த போது உன் பங்குலே எடுத்ததைக் கேக்கக் கூடாது. அது கடமைடா.. பெத்தவனுக்குப் போறதுக்கு பல்லாக்கு கட்ட வேணாம்? புஷ்பப் பல்லாக்கு..நீதான் பாக்கலியே..’
அப்பா சிங்கப்பூர்லே இருந்து வந்துட்டாரா? அந்த ஓட்டை உடசல் ரூமிலேயே செத்துப் போய்ட்டாரா?
சரோ .. சரோ.. அரிசி.. வர்றியா.. நான் வரலே.. வாய்க்கரிசி போடணும்..
ராமச்சந்திரனை இன்னொரு அலை உருட்டித் தள்ளுகிறது.
மகாவித்துவான் படுக்கையில் இருக்கிறார். சுவாசம் சிரமத்தோடு இழைந்து கொண்டிருக்கிறது. பக்கத்தில் தலைமாட்டில் சாமிநாதய்யர் உட்கார்ந்து திருக்கோத்தும்பி படித்துக் கொண்டிருக்கிறார். ராமச்சந்திரன் விளாக்கைத் தூண்டி எண்ணெய் விட்டுக் கொண்டு பக்கத்தில் நிற்கிறான். சீக்கிரம் விளக்கு அணையப் போகிறது. மின்விசிறி அதிகமாகச் சத்தம் போட்டுக் காற்றை வீசி அடிக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டர் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான்.
‘நோயுற்று மூத்து நுந்து கன்றாகி..’
சாமிநாதய்யரின் கணீரென்ற குரலும் இடறுகிறது.
‘நுந்து கன்றென்றால்?’
பிள்ளையவர்களைப் பார்க்கிறார்.
‘விருப்பமில்லாமல் செலுத்தப்படுகிற கன்று’
அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழியக் குழறிக் குழறிச் சொல்கிறார்.
ராமச்சந்திரன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான். நோயுற்று மூத்து நுந்து கன்றாகி.. நானும் தான்.. இருக்க இடம் இல்லாமல், பரிவு காட்ட யாருமில்லாமல், நோயுற்று, மூத்து, நுந்து கன்றாகி..நுந்து கன்றுக்குத் தொழுவம் கூடக் கிடையாது.. ஸ்டேஷன் மாஸ்டர் வீடு..சரவணன் ஸ்டூடியோ..அம்மா சமையல்காரியாக இருந்த வீட்டு காடிகானா…
‘சார்.. உங்க வீடு பெரிசு. மனசும் நல்ல மனசு. நான் ஊருக்குப் போய் உங்க படம் வரைஞ்சு அனுப்பறேன். மிசஸ் கூட இருக்கற போட்டோ கொடுங்க. சேர்த்து வரைஞ்சு தரேன். ஃபோட்டோ மாதிரி, அச்சா, அழகா… சரவணன் வரையறதுக்கு எல்லாம் புதுசாத் தருவான்.. நான் கேட்டா அவன் நிச்சயம் தருவான்.. என் மேலே ரொம்பப் பிரியம். எனக்கு பொண்ணு பார்க்க, வேலையை எல்லாம் விட்டுட்டு ஓடி வந்துட்டான். பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலே. அவனைத் தான் பிடிச்சுது.. அதுக்கு அவன் என்ன பண்ணுவான்? கல்யாணம் வச்சுக்கச் சொல்லப் போறேன். அடுத்த மாசம். எங்க வீடு இல்லாட்ட என்ன? வேறே பெரிய வீடா, சுத்தமா, பெரிய கூடத்தோட பிடிச்சு… நூறு இருநூறு பேரு சேர்ந்து உக்கார்ந்து சாப்பிடற தோதிலே.. நான் இல்லாம கல்யாணம் நடக்குமா.. நான் ஊருக்குப் போகறேன்.. ராமேஸ்வரத்துலே என்ன இருக்கு? மணல்தான்..நான் போகலே.. உங்க படம்.. கட்டாயம்.. மறக்காமே..’
‘திடீர் திடீர்னு மனசை மாத்தாதடா.. அப்பா செத்தபோது என்கிட்டே சொன்னாரு.. ராசுப்பயலுக்கு ஸ்திரமான மனசும் புத்தியும் வரபோது அவன் உங்கிட்டே திரும்ப வருவன். அப்போ அவனைக் கைவிட்டுடாதேன்னு. நான் உன்னை விட்டுடுவேனாடா? சின்ன வயசிலே உனக்கு அம்மை வார்த்தபோது பக்கத்திலேயே உக்கார்ந்து பாத்திட்டிருந்தேன் ராவும் பகலும்.. ஞாபகம் இருக்காடா.. நானும் தவமணி அக்காவும்..’
ராமச்சந்திரன் இன்னொரு அலையில் பிரவாகத்தின் உள்ளே போகிறான்.
பல்லக்கு போய்க் கொண்டிருக்கிறது. மேலே மறைப்பில்லாமல் வானம் பார்த்து மல்லாந்து கிடக்கும் பல்லக்கு. பழைய வீபுதியும், பூ வாசனையுமாக போன சிவராத்திரிக்கு முன் தினம் காறுபாறு தம்பிரான் ஆதின நிலத்தில் அறுவடை என்று காறுபாறு செய்ய ஏறிப் போனதற்கு அப்புறம் ஒரு வருடமாக யாரும் அதைத் தொடவில்லை. வயல் வரப்பில், மரத்தடியில் வைத்திருந்ததில், காக்கை எச்சம் மூங்கில் கழிகளில் விழுந்து தெறித்துக் காய்ந்து போய் அப்பி இருக்கிறது. பல்லக்கு பக்கத்தில் ராமச்சந்திரன் சரவணனோடு நடந்து கொண்டிருக்கிறான். சாமிநாதய்யருக்கு அம்மை வார்த்திருக்கிறது. ஆதீனகர்த்தர் சொன்னபடி சூரிய மூலைக்குக் கூட்டிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
‘கொஞ்சம் நடையை எட்டிப் போடுங்க.. வெய்யில் ஏற்றதுக்குள்ளாற போய்ச் சேரணும்..’
பல்லக்குத் தூக்கிகளில் ஒருவன் சொல்கிறான். ராமச்சந்திரன் நடந்தபடி, பல்லக்கு உள்ளே குனிந்து சொல்கிறான்.
’ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சீக்கிரம் சரியாகிவிடும். உங்களுக்கென்ன குறைச்சல்? வீடு இருக்கிறது. அன்பான பெற்றோர் இருக்கிறார்கள். கண்ணைப் போல் பார்த்துக் கொள்வார்கள். எனக்குத் தலைக்கு மேலே கூரை உண்டா? எவ்வளவு மோசமான நிலைமை. ஆனாலும் கவலைப்படவில்லை. இந்த முகத்துக்குக் கல்யாணம் ஒரு கேடா என்றார்கள், ராத்திரி முழுக்கக் கண் விழித்து சோப்பு விளம்பரம் எழுதினால், காலையில் அதை அழிச்சுட்டு மேலேயே வேறே படம் போடறாங்க. ஒண்ணுக்கும் கவலைப்படலே.. ஒன்றுக்கும் கவலைப்படவில்லை.. வைத்திருந்தது எல்லாம், உங்கள் வாழ்க்கை வரலாற்றையும் சேர்த்து, பஸ்ஸில் போய் விட்டது. கிடைக்குமா என்று தெரியவில்லை. உலகம் பெரியது. நுந்து கன்றுக்கும் தொழுவம் கிடைக்கும். வீடு வந்து கொண்டிருக்கிறது. இளைப்பாறிக் கொள்ளுங்கள். நான் அப்புறம் ஈசுவர சித்தம் இருந்தால் வந்து பார்க்கிறேன். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று மகாவித்துவான் சொல்லி அனுப்பியிருக்கிறார். மகாமகம் சமயத்தில் திரும்பி வந்தால் போதும்..’
உடம்பு பூரா வேதனை தெரியப் படுத்திருந்த ஐயர் சொல்கிறார் – ‘ராத்திரி வண்டி வரப் போகிறது. ஏறிப் பட்டணம் போங்கள். எல்லாம் நல்லது நடக்கும்..’
ஈனஸ்வரத்தில் அவர் பேச்சின் கடைசி காதில் விழவில்லை.
ஸ்டேஷன் மாஸ்டர் மெல்லப் பக்கத்தில் குனிந்து கையைப் பிடித்துக் கொண்டு மௌனமாக இருக்கிறான்.
‘ராசு.. உன் கையெழுத்தை நானே போட்டுட்டேண்டா. நிலம் வித்தாத்தான் அக்கா கல்யாணம் முடியும்னு இருந்துச்சு.. ரொம்ப லேட்டாத்தான் அக்காவை கரையேத்தினேண்டா.. அப்பாவும் இல்லே.. நீயும் போய்ட்டே.. நீ நல்ல பையன் இல்லையா.. அக்கா மேலே பிரியம் உண்டு இல்லே.. நான் சொன்னாத் தட்ட மாட்டியே.. நிலம் போனாப் போவுதுடா.. அக்கா இப்போ சந்தோஷமா இருக்கு..ஆம்பளைப் புள்ளை.. நாலரை வயசு ஆவுது.. எனக்குப் பொண்ணு பிறக்காட்ட என்னடா? அவனுக்கு வேறே பொண்ணே கிடைக்காதா? அக்காவைப் பார்க்கப் போகலாமா?’
‘ஊருக்குப் போகணுமே இப்போ..’
‘சீக்கிரம் போயிடு.. அப்புறம் பாத்துக்கலாம்.. அந்தப் பொம்பளையைத் தனியா விட்டுட்டு வந்திருக்கியா? நல்லா சிரிக்கறாடா உங்காளு.. இருட்டிலே கூடப் பல்லு என்ன வெளுப்பாத் தெரியுது.. நாக்கைத் துருத்திக்கிட்டுப் பிராக்குப் பாத்துக்கிட்டு நிக்காதே.. என்னை மாதிரி எவனாவது காஞ்ச பய தள்ளிக்கிட்டுப் போயிடுவான்.. எங்கேயோ நல்லா இருந்தா சரி.. அவளுக்கும் மனசு இருக்கும்டா.. என் புத்திக்கு அவ உடம்பு தான் தெரியுது.. நீ அவ மனசைப் புரிஞ்சுக்கிட்டு நட..’
‘நான் ஊருக்குப் போய் உங்க படம் அனுப்பறேன்..’
‘அண்ணியையும் சேர்த்து வரஞ்சு அனுப்பு. ஹால்லே கல்யாண போட்டோ மாட்டியிருக்கு பாரு. பாத்துக்கோ. நீதான் மனசுலே பதிச்சிட்டா மறக்க மாட்டியே.. அண்ணியைத் துணியோட போடு.. என்ன.. பக்கத்துலே பசங்கள்ளாம் இருக்கிற மாதிரிப் போடு.. படம்னா மனசுக்கு சந்தோஷமா இருக்கணும்..முழுசும் நிசமா இருக்கணும்னா முடியுமா? சரிதானே?’
ராமச்சந்திர்ன் உம் உம் என்று நான்கைந்து தரம் முனகினான். எதற்கென்று தெரியாமல் திடீரென்று எழுந்து ஸ்டேஷன் மாஸ்டர் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொண்டான். அவன் காலைத் தொட யத்தனித்துக் குனிந்து தரையில் விழுந்து தூங்கிப் போனான். சுவர்க் கோழியும் ஃபேனின் கடகட சத்தமும் தவிர அப்புறம் ஒரு சத்தமில்லை.
நடுராத்திரிக்கு யாரோ கதவை இடிக்கிற சத்தம். கணபதி தான்.
‘மெசேஜ் வந்திருக்கு. மதுரையிலேருந்து. பட்டணம் போற வண்டி அவுட் ஆச்சாம். புக்கிங் கிளார்க் சொல்லச் சொன்னாரு’
‘அவரு வீட்டுக்குப் போகலியா?
‘நீங்க பத்து மணிக்கு வரேன்னீங்களாம். தூங்கிட்டீங்களா?’
சீவகன் கண்ணைத் துடைத்துக் கொண்டான். உள்ளே தரையில் அலங்கோலமாகக் கிடக்கிற ராமச்சந்திரனைப் பார்த்தான். அப்புறம் வானத்தைப் பார்த்தான். தெளிவாக இருந்தது.
‘நீ போ.. வரேன்..’
கணபதியை அனுப்பி விட்டு, ராமச்சந்திரனைத் தட்டி எழுப்பினான். முகத்தை ஈரத்துணி கொண்டு துடைத்து விட்டான். நாற்காலியில் பிடித்து உட்கார்த்தினான்.
‘தூங்காதே..டிரயின் வந்துட்டிருக்கு.. த்ரீ டயர் கோச்சில் ஏத்தி விடறேன்.. அங்கே போய்த் தூங்கிக்க.. பணம் இருக்கா? சரி நான் தரேன்.. ஊருக்குப் போற வரைக்கும் போதும்.. டிக்கட்டெல்லாம் நான் பாத்துக்கறேன்.. கிளம்பு… வண்டி வரப் போகுது.. இரு இரு.. பாத்ரூமிலே போய் தலையை வாரிக்கிட்டு வா.. வாயைக் கொப்பளிச்சுத் துப்பு.. சீப்பு இருக்கா.. இந்தா..’
பகுதி – 9
அநேகமாகக் கூட்டம் இல்லாமல் வண்டி வந்து நின்றது. மதுரையில் பிடிவாதமாகக் காத்திருந்து கிளம்பியவர்களாக இருக்க வேண்டும். அதில் ஏறினவர்கள் எல்லாம்.
த்ரீ டயர் கோச்சில் தூங்கி வழிந்து கொண்டு உட்கார்ந்திருந்த கண்டக்டரிடம் சொல்லி சீவகன் ராமச்சந்திரனை ஏற்றி விட்டான்.
‘ஒரு கண்ணு வச்சுக்குங்க.. எங்கேயாவது பாதியிலே எறங்கிடப் போறான்..’
’வேண்டியவரா?’
‘தம்பி..’
‘உடம்பு சரியில்லையா? சோர்ந்து போய் உக்காந்திருக்காரே?’
‘திடீர்னு வண்டி வர்றதா மெசேஜ் வந்தது. நல்லாத் தூங்கிட்டு இருந்தான். எழுப்பிக் கூட்டிட்டு வந்தேன். தூக்கம் இன்னும் தெளியலே.. அதான்’
ராமச்சந்திரன் ஆள் இல்லாத இருக்கையில் காலை சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். மங்கலான வெளிச்சத்தில் கம்பார்ட்மெண்ட் முழுக்க இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. ஒரு குளிர்ந்த காற்று மெல்ல வீசியது. பச்சையும் சிவப்புமாக விளக்கை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மண் தரையில் காற்று வாங்க நின்ற கார்டு தன் பெட்டிக்குப் போய்க் கொண்டிருந்தார். ரயில் கிளம்பி ஊர்ந்து போகப் போகிறது. அப்புறம் வேகம். எல்லாவற்றையும் அடித்துச் சாய்த்து இயக்கம் தான் இருப்பு என்று கூவிப் பாயும் வேகம்.
‘போய்ட்டு வா ராசு.. ராமச்சந்திரன்.. போய்ப் பதில் போடு.. நான் ரிப்ளை கார்ட் அனுப்பறேன்.. அட நீ அட்ரஸே சொல்லலியே..சரி போ.. நீயே எழுது..’
‘போய் நிச்சயம் உங்க படம் அனுப்பி வைக்கறேன்..’
‘ஒண்ணும் அவசரமில்லே.. மெல்ல அனுப்பு.. வரட்டா?’
ரயில் நகர்ந்த போது எதிர்த்த பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். ஸ்டேஷன் பெயர்ப் பலகையைப் படிக்க முயன்று தோற்று இவனிடம் கேட்டார் –
‘மணி என்னங்க?’
‘தெரியலீங்க..நான் வாட்ச் கட்டறதில்லே..’
ஜன்னல் வழியாக வானத்தை வெறித்தார்.
‘மூணு மூணரை இருக்கும்.. நட்சத்திரம் நிக்குது சுத்தமா..’
‘அப்படீங்களா?’
‘இது என்ன ஊருங்க?’
எந்தப் பெயரும் நினைவில் வரவில்லை. ஒரு வினாடி தாமதித்து ‘உத்தமதானபுரம்’ என்றான்.
(நிறைந்தது)