முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன்
அத்தியாயம் 6
கடைசி ஒத்திகைக்கான ஞாயிற்றுக் கிழமை,
காலையிலிருந்தே ஜோதி அக்கா அழுது கொண்டிருந்தாள்.
புகுந்த வீட்டிலிருந்து பிரசவத்துக்கு வந்து ஒரு மாதமாகிறது. வீட்டுக்காரனோ வேறு யாருமோ வந்து பார்க்கவில்லையாம்.
சீர் செனத்தியில் குறைச்சலாம்..
‘பொம்பளைப் புள்ளே… சின்னவ இவ தலையெடுத்து எல்லாம் செய்ய வேண்டியிருக்கு..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா பொறுத்துக்குங்க சம்பந்தி.. அடுத்த மாசம் லோன் போடப் போறா..’
போட்டு வைத்திருக்கிறது. ஒரு பவுனில் மோதிரம் வாங்க வேண்டும். முதல் ஆடிக்கு அழைத்தபோது கொடுக்க விட்டுப் போனது.
நாலு தடவை எஸ்.எஸ்.எல்.சி தவறிவிட்டுச் சும்மா சுற்றி வருகிற தம்பி… சைக்கிள் கடை வைக்கப் பணம் கேட்கிறவன்..
தோசைக்கடை வைத்து சிறுவாடு சேர்க்கலாம் என்று சதா நச்சரிக்கிற அம்மா..
எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. நிறையவே.
முத்தம்மா டீச்சருக்கு ஒரு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். இருபத்து மூணு வயசில் வெள்ளெழுத்து வருமா என்ன?
ஆனாலும் முத்தம்மா டீச்சர் அழகு தான். இல்லாவிட்டால் கதிரேசன் டீச்சர்…டீச்சர் என்று சுற்றிச் சுற்றி வருவானா..
வரச் சொல்லிக் கூப்பிட்டிருக்கிறான். தட்ட முடியவில்லை.
முத்தம்மா டீச்சர் பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தபோது பகல் மூன்று மணி.
‘என்ன டீச்சர் தூங்கிட்டீங்களா?’
கதிரேசன் விசாரித்துக் கொண்டு சைக்கிளில் வந்திறங்க, மழையும் ஆர்ப்பாட்டமாக வந்து இறங்கியது.
வராந்தா பக்கம் ஓடினான் கதிரேசன்.
‘கொஞ்சம் இருங்க.. படம் எழுதின தட்டியை எல்லாம் உள்ளே வச்சுடறேன்.. நேத்து ராத்திரி பத்து மணியாச்சு எல்லாம் வரஞ்சு முடிக்க..’
ஆண்டு விழா மேடைக்கு இரண்டு புறமும் நிறுத்தி வைக்க நீள நீளமாகப் பேப்பர் ஒட்டி, மேலே படம் வரைந்த தட்டிகள்.
ஒன்றில் லட்சுமி. அடுத்தது சரஸ்வதி.
இரண்டு முகமும் முத்தம்மா டீச்சர் ஜாடையில்.
‘லட்சுமிக்குக் கைவிரல் ஏன் புளியங்காய் மாதிரித் தொங்குது?’
முத்தம்மா டீச்சர் கதிரேசனைக் கேட்டாள்.
‘எனக்குக் கை போட வராது டீச்சர்’
தட்டியை ஓரமாக வைத்துவிட்டுக் கதிரேசன் சொன்னான்.
பொய்க் கோபத்தோடு முறைத்து விட்டு முத்தம்மா டீச்சர் வாசலைப் பார்க்க அடர்ந்து இறங்கிய மழை.
’பசங்க எப்படி வருவாங்க சார்.. இப்படிக் கொட்டுதே..’
‘வந்துடுவாங்க..’
கதிரேசன் ஈரச் சட்டையோடு நெருக்கமாக நின்று வாசலைப் பார்த்தான்.
‘ரேணுகாவுக்குச் சரியாவே ஆட வரலியே சார்… அவளைப் பின்னுக்கு நிப்பாட்டிட்டு, ஆரோக்கியமேரியை முன்னுக்கு வச்சுடலாமா?’
முத்தம்மா கேட்டாள்.
‘அய்யே.. அவ கொக்கு மாதிரி உசரம்..பின்னாடி நிக்கற பிள்ளைங்களை எல்லாம் மறைச்சுடுவா.. நீங்க கவலையே படாதீங்க டீச்சர்.. இன்னிக்கு ரேணுகாவுக்கு நான் ஸ்பெஷலா கோச் பண்றேன்..’
‘ஏன் சார், ஆண்டுவிழாவுக்கு எஸ்.கே.சி ஆர்டர் கொடுத்தச்சா?’
வானம் மெல்ல இடிக்கிறது. நிற்காத மழை. நின்று, பிள்ளைகள் வர வேண்டும்.
‘எஸ் கே சி.. இங்கத்திய வார்த்தையாச்சே.. ஸ்வீட் காரம் காப்பி.. ரைட்டா டீச்சர்..’
‘சார் சொன்னா தப்பாகுமா?’
முத்தம்மா அவன் கண்ணை பார்த்துச் சிரித்தாள். சாரல் மேலே விழாமல் கதிரேசன் இன்னும் நெருக்கமாக நின்றான்.
‘எஸ்கேசி சொல்லியாச்சு டீச்சர்.. ஆனந்த பவன்லே .. ஐநூறு லட்டு.. பஜ்ஜி.. காப்பி.. காப்பி வேணாம்னுட்டாரு எச்.எம்.. டீ தான் எல்லாத்துக்கும்.. ஆமா, இப்படி மழை பெஞ்சா நாளைக்கு எங்கிட்டு ஆண்டுவிழா நடத்தறதாம்?’
கதிரேசன் கொண்டு வந்த பிளாஸ்கைத் திறந்து காப்பி எடுத்து பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி முத்தம்மா டீச்சரிடம் நீட்டினான்.
‘சாப்பிடுங்க டீச்சர்.. மழைக்கு இதமா இருக்கும்..’
‘அய்யோ இம்புட்டுமா?’
முத்தம்மா கண்ணை அகல விரித்தாள்.
‘மீதி இருந்தா வச்சிடுங்க.. நான் சாப்பிட்டுக்கறேன்..’
மழை இன்னும் வலுக்க, நான்காம் வகுப்பு ஆ பிரிவு மூலையிலிருந்து ஒழுக ஆரம்பித்தது. சில்லென்று குளிர்ச்சியோடு உள்ளே வந்த காற்றில், சுவரில் இந்தியா மேப்பும், சாலை விதிகள் படமும் பேயாட்டம் போட்டன.
‘ஒரு தடவை பாடிப் பாத்துடலாமா டீச்சர்?’
நெருங்கி வந்த கதிரேசன் குரல்.
‘சேவை நாமும் செய்யலாமா?’
முத்தம்மா டீச்சர் கள்ளக் குரலில் பாடினாள்.
‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’
இப்போதுதான் ஆரம்பமாகிறது.
தரையில் வரிசையாகப் பலகைகள். பிள்ளைகள் குந்தியிருந்து பாடம் கேட்க அதெல்லாம்.
‘சார், சாரல்லே பலகையெல்லாம் ஈரமாகுது.. நகர்த்தி வச்சுடலாம்.. ஒரு கை பிடிக்கறீங்களா?’
கதிரேசன் கையைப் பிடித்தான்
மழை மணமும், சாக்பீஸ் வாடையும் கவிந்த, வரிசையாகப் பலகை விரித்துக் கிடந்த நாலாம் வகுப்பு ஆ பிரிவில், பலகைகளுக்கு மேலே கதிரேசன் முத்தம்மாவைச் சாய்த்த போது, மழையும் மனதும் தொடர்ந்து பாடின.
பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..
முத்தம்மாவின் கண்கள் செருகி, இமைகள் சிப்பியாகத் திறந்து குவிந்தன. முகத்தில் இதமாகப் படியும் மழை ஈரம். உள்ளங்காலில் முத்தமிடும் உதடுகள். உடம்பெல்லாம் நனைக்கும் சாரல். ஈர உதடுகள். உடையை அலைக்கழித்து நெகிழ்த்திய மழைக்காற்று. வலிமையான கரங்கள். ஈர வாடை. ஆண் வாடை.
வண்டாக நானும் தேன் உண்ணலாமா ..
கன்னத்தில் ஈரம். ஈர இறக்கையை முகத்தில் வீசுகிறது ஏதோ ஒரு பறவை. கருப்பும் ஈரமுமாக முகத்தில் அறையும் இறக்கைகள் குத்திப் பிராண்டுகின்றன.
முத்தம்மா டீச்சர் அரைக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.
ஈரக் குடையால் முத்தம்மா டீச்சர் முகத்தில் தொடர்ந்து அடித்தபடி கதிரேசன் வாத்தியார் சம்சாரம் விசாலாட்சி டீச்சர் கத்தினாள்.
‘தட்டுவாணிச் சிறுக்கி..’
மழையில் நனைந்தபடி முத்தம்மா வெளியே ஓடினாள்.
ஜோதி அக்காவுக்கு இடுப்பு வலி எடுத்து, அம்மா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருந்தாள். திறந்து கிடந்தது வீடு.
தம்பியைக் காணோம். பணத்தையும்.
குடையைப் பள்ளிக்குடத்திலேயே மறந்து விட்டு ஓடி வந்த அந்த நாளின் மிச்சம் மழையில் கரைந்தது.