Appa Ramesh’s Morning Marvels கட்டுரைத் தொகுப்பு வெளியீடு

லண்டன் மாநகரில் இருக்கும் போது பணிக்குப் போக வேண்டாத ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியான நிகழ்ச்சி நிரல் போட்டுக் கொள்வேன். அதன் கண்ணிகள் ட்யூப் என்ற பாதாள ரயில் சேவை சார்ந்தவை.

 

கார்டியன் தினசரிப் பத்திரிகை வராத தினம் என்பதால், சண்டே அப்சர்வரை மேய்ந்து விட்டு கென்சிங்க்டன் கார்டனில் காலாற நடந்து,  எர்ல்ஸ் கோர்ட்டில் வண்டி ஏறி, ஸ்ட்ராண்டிலும் கோவண்ட் கார்டனிலும் சுற்றி அலைந்து, ஈஸ்ட் ஹாம்  சரவண பவனில் தென்னிந்திய உணவு உண்டு, பிக்கடலி வீதி வந்து க்ரீன் பார்க் கடந்து ஹைட் பார்க்கில் நுழைந்து வடகிழக்கு மூலையில் ஒரு பழைய பெஞ்சை நோக்கி நடப்பது வழக்கம்.

 

அங்கே ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகல் இரண்டு மணியில் இருந்து பெஞ்ச் ஏறி நின்று சட்ட விரோதமில்லாமல் எதைப் பற்றியும் யாரும் பேசலாம். விரும்பினால் யாரும் கேட்கலாம். மாலை ஆறு மணி வரை  அங்கே அரங்கேறுகிறவர்கள் பிரிட்டீஷ் அரசியல் தொடங்கி, கால் பந்து விளையாட்டுக் குழு மேன்செஸ்டர் யுனைடெட்டின் அண்மைக்கால விளையாட்டுத் திறன் பற்றி வரை பேசலாம். கிட்டத்தட்ட  நூற்றைம்பது வருடமாக பிரிட்டீஷ் குடிமக்களுக்கு பேச்சு சுதந்திரம் அந்த ஹைட் பார்க் பெஞ்சில் வழங்கப்படுகிறது.

 

நமக்கு, இந்தியாவில் ஹைட் பார்க் இல்லை, ஹைட் பார்க் ஸ்பீக்கர்ஸ் கார்னர் பெஞ்சு இல்லை. விதவிதமான தலைப்புகளில் பேசும் பேச்சாளர்கள் இல்லை.

 

ஆனாலும் எனக்கு தி.நகர் நடேசன் பூங்கா உண்டு. காலை நடைப் பயிற்சியில் கூட வரும் நண்பர் கிரேசி க்ரியேஷன்ஸ் அப்பா ரமேஷ் உண்டு.  (அன்பு நண்பர் மறைந்த கிரேசி மோகன் மூலம் கிரேசி கிரியேஷன்ஸில் அத்தனை பேரும் நல்ல நண்பர்கள் தான்).

 

காலை நடையின்போது அப்பா ரமேஷ் ஏதாவது பேசிக்கொண்டு வருவார். நான் கேட்டுக் கொண்டு வருவேன்.

 

ரமேஷ் பேச எடுக்கும் தலைப்புகள் வகைவகையானவை. Role of USA in a unipolar world, work-home life – stage life balancing, அவருடைய தாத்தாவான பிரபல anthropologist திரு.ஜகதீச அய்யர் எழுதிய தென்னிந்தியக் கோவில்கள், அவற்றின் அமைப்பு, வழிபாடுகள், விழாக்கள் இன்னோரன்னவை,  ஆனந்த ஜோதி (1960களில் வெளியான தமிழ்ப் படம்) திரைப்படத்தில் கதாநாயகன் எம் ஜி ஆர் ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம்’ என்று பாடி வர, சிறுவர்களாக அப்பா ரமேஷும், கமல் சாரும் லெப்ட் ரைட் போட்டு வருவது என்று பலபட்டறையாக சுவாரசியமாகப் பேசி வருவார் ரமேஷ். நான் ‘I can’t chew gum and walk at the same time வகையினன் என்பதால் கேட்டபடி வருவேன்.

 

தி நகரில் ஐந்து வருடம் இப்படிக் காலை நடை நடந்துவிட்டு நானும் அப்பா ரமேஷும் அஷோக் நகருக்கும், பிஷப் கார்டனுக்கும் குடிபெயர்ந்து விட்டோம்; என்றாலும் அப்பா ரமேஷ் நட்பு இன்னும் அதிகமானதே தவிரக் குறையவில்லை.

 

தினசரி காலையில் வாட்ஸ் அப் திறந்தால் அப்பா ரமேஷ் Hi My Well Wishers என்று தொடங்கிச் சற்று நீளமான கட்டுரை தினசரி எழுதியிருப்பார்.  விதம் விதமான விஷயங்கள் தொடர்பான உரை அது. Nothing பற்றிக் கூட இரண்டு பக்கம் வரும் கட்டுரை எழுதியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

அந்தக் கட்டுரைகளின் முதல் தொகுதி நண்பர் மாது பாலாஜி  முன்கை எடுத்து பிரசுரம் காண வைக்க, அலையன்ஸ் கம்பெனி பதிப்பகம் மூலம் சென்ற சனிக்கிழமை வெளியானது. Morning Marvels என்ற அழகான புத்தகம் இது.  அட்டை ஓவியமாக நண்பர் (தி ஹிந்து கார்ட்டூனிஸ்ட் ) கேஷவ் வரைந்த கிரேசி மோகன், அப்பா ரமேஷ் ஓவியம் காணக் கண்கோடி வேண்டும்.

 

Morning Marvels புத்தகத்தை வெளியிட்டுப் பேசியவர் தொண்ணூற்று நான்கு வயதிலும் சுறுசுறுப்பாகத் தன் மருத்துவ மனையில் நோயாளர்களை பரிசோதித்துக் குணப்படுத்தும் என் மதிப்புக்குரிய டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள். அரசியலிலும் முத்திரை பதித்து இரண்டு அமைச்சரவைகளில் அமைச்சராகப் பணியாற்றிய அவருக்கு ஓர் இலக்கிய முகமும் உண்டு என்பது பலருக்குத் தெரியாது. கன்னடம் தாய்மொழியான திரு ஹண்டே தமிழ் எழுதப் படிக்கக் கற்று எட்டாண்டு உழைப்பில் சாதித்தது – கம்பராமாயணம் முழு நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.

 

புத்தகத்தின் முதல் பிரதியை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவர் இரா.முருகன்.

 

பெரியவர்கள், சாதனையாளர்கள், அப்பா ரமேஷ் நண்பர்கள் என்று பலரும் சுருக்கமாகப் பேசி விழாவைச் சிறக்க வைத்தார்கள். நண்பர் காந்தன் தொகுத்தளிக்க, நண்பர் மாது பாலாஜி நன்றி நவின்றார்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன