விரல் – சிறுகதை
இரா.முருகன்
சந்தன் என்ற சந்தான கோபாலன் அரங்கத்துக்குள் நுழைந்த போது, ’மாதே மலயத்வ பாண்டிய சம்ஜாதே’ கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் வர்ணம். மத்ய ஸ்தாயியில் ஜலஜலவென்று ஒன்றுக்கு இரண்டு சிட்டை ஸ்வரமாகப் பாடும்போது நர்மதை நதிப் பாலத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் முன்னேறிக் கொண்டிருப்பது போல் பிரவாகம். அதுவும் ராஜாராமன் பாடினால். பாடிக் கொண்டிருக்கிறார்.
முதலிலிருந்து கேட்கக் கொடுத்து வைக்கவில்லை சந்தனுக்கு. வர்ணத்தில் கச்சேரி ஆரம்பித்திருப்பாரா அல்லது வாதாபி கணபதியிலா? ஹம்ஸத்வனியை துக்கடாக்களுக்கு அடுத்து கடைசியாகப் பாடி கச்சேரியை முடித்து வைக்கவும் கூடியவர் ராஜாராமன். அந்தக் குரல் கச்சேரியை எங்கே எப்படி தொடங்கினாலும், முடித்தாலும் அபூர்வமாக அந்தரத்தில் நிறுத்தி விட்டுப் போனாலும், ரசிகர்களைக் கட்டிப் போட்டுவிடும்.
இந்தக் கச்சேரி நடப்பதாக போன வாரமே தெரியும் சந்தனுக்கு. ஆபீஸ் விடுமுறை என்பதால் அரை மணி நேரம் முன்னதாகவே வந்துவிட உத்தேசித்திருந்தான். ட்ராஃபிக்கில் ஊர்ந்து வர வேண்டிப் போனது.
எல்லா சபாவிலும் மேடை நிர்வாகம், ரிசர்வேஷன் என்று முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள், நீண்ட காலமாக கச்சேரி போய்ப்போய் சந்தனுக்கு நல்ல நண்பர்களாகி இருக்கிறார்கள். சில சபாக்களில் நிர்வாக கமிட்டி உறுப்பினராக செயல்பட அழைப்பு.
அதெல்லாம் சரிப்படாது சந்தனுக்கு. வந்தோமா, சபா கேண்டீனில் காப்பி குடித்தோமா, உட்கார்ந்து கச்சேரி கேட்டோமா, கச்சேரி முடிந்து, பக்கவாத்தியக் காரர்களோடும், பிகு பண்ணிக் கொள்ளாத பிரதான வித்வானோடும் சின்னதாக அரட்டை போட்டோமா, ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டோமா– ’பிரமாதம் சார், இன்னிக்கு ராத்திரி தூக்கத்திலே உங்க மோகனம் தான் வந்து ஏன் பள்ளி கொண்டீரய்யான்னு எழுப்பப் போறது’ – அது போதும்.
இங்கே இப்போது பாடிக் கொண்டிருக்கும் ராஜாராமனோடு பேச ஒவ்வொரு கீர்த்தனை பற்றியும் ஒருபாடு விஷயம் உண்டு சந்தனுக்கு. சொல்லப் போனால் அவரோடு பேசுவதை விட ராஜாராமன் மனைவியோடு பேச சந்தர்ப்பத்தை இரண்டு மாதமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன். இன்னும் எதேஷ்டமாக சௌந்தர்யம் குடிகொண்டிருக்கும் அந்த நாற்பது வயது சுந்தரிப் பெண் மேல் தகாத ஈர்ப்பு எல்லாம் எதுவும் இல்லைதான். இன்று சீக்கிரம் வந்திருந்தால்?
வந்திருந்தால் பல்லடம் சித்தப்பா சமீபத்தில் சொன்ன தகவலை சரி பார்த்திருக்கலாம். பல்லடம் சித்தப்பா வாயில் மூணு வரிசையாகப் பல். அதிகப் பல்லனும் அதிகப் பால் தரும் பசுவும் அதிர்ஷ்ட அடையாளம் என்று சித்தப்பா சொல்லியிருந்தார்.. இதைப் பசுவிடம் சோதிக்க முடியாது. எதை? பிரபல கர்னாடக சங்கீத வித்துவான் ராஜாராமன் பெண்டாட்டி நம்மூர் பல்லடத்துப் பெண்தான் என்பதை.
சொன்னாரே சித்தப்பா. நம்ம போர்ட் ஹைஸ்கூலில் படித்தவள். ஆண்பிள்ளைகளும் பெண்களும் சேர்ந்து படிக்கும் அந்த ஸ்கூலில் படித்தவன் தான் சந்தனும்.
பெயர் என்னவாம்? கஜலட்சுமி. என்னது கஜலட்சுமியா. கஜலட்சுமியே தான். யாரு, சந்தனை ஆறு விரல் அழுக்கு பையா என்று கிண்டல் செய்தபடி பாண்டி விளையாட கோடுதாண்டிக் குதிக்கும் புஷ்டியான பெண். சந்தனின் இடதுகை ஆறாம் விரலும் அவள் கூடவே குதிக்கும்.
’கஜம்னா ஆனைக்குட்டி. நீ போடி சித்தானக்குட்டி’ என்று சண்டை இழுத்த ஆறுவிரல் சந்தன் அவன். வேலைக்கு வந்து சியாட்டில் அமெரிக்கா போகும் முன்பு ஏதோ தோன்ற ஆப்பரேஷன் செய்து ஆறாம் விரலைக் களைந்து விட்டான்.
இது சந்தனின் ஆறாம் விரல் பற்றி இல்லை, கஜலட்சுமி பற்றி. பல்லடம் சித்தப்பா சொன்ன தகவலை சரிபார்ப்பதே முக்கிய காரியமாகப் போனது. பாட்டுக்காரரான வீட்டுக்காரருக்குப் பின்னால் இருந்து தம்பூரா மீட்டும் பெண். அந்த ஸ்தூல சரீர ஸ்த்ரி தனியாவர்த்தனத்தின் போது தம்பூராவை வீட்டுக்காரர் முதுகில் சாய்த்து வைத்துவிட்டு, புடவைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு மேடையில் கோடு இழுத்து ஆறு விரல் அழுக்குப் பையா என்று கிண்டல் செய்து ஆடினால்? ஆடினால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். அவள் கஜலட்சுமி தானா?
கச்சேரி தொடங்கும் முன் தடார் என்று மேடைக்குப் போய் அரங்கத்துக்கு முதுகு காட்டி நின்று, ’எக்ஸ்யூஸ் மீ நான் சந்தன். பல்லடம் சந்தன், நீங்க கஜலட்சுமியா’ என்று கேட்கலாமா? ரொம்ப முரட்டுத்தனமா இருக்குமே. சரி, ”இன்னிக்கு மத்தியானம் வெய்யில் ஜாஸ்தி; நான் பல்லடம் சந்தன்; நீங்க கஜலட்சுமியா?” என்று வித்யாசமாகக் கேட்கலாமா? இன்னிக்கு வெய்யிலே இல்லாமல் இதமாக அல்லவா இருந்தது.
எதோ எப்படியோ பேசணும். சந்தன் மும்முரமாக தன் பள்ளித் தோழியை அடையாளம் காண வழி தேடிக் கொண்டிருக்கிறான்.
இன்றைக்கு சீக்கிரம் வந்திருந்தால்? வந்திருந்தால் மேடைக்குப் பின்னால் திரை விட்ட க்ரீன் ரூம் இத்யாதி பகுதிக்குப் போயிருப்பான். போன மாதம் ஒரு ராஜாராமன் கச்சேரிக்கு இப்படித்தான் தும்புரு கான சபையில் மேடைக்குப் பின் மைக் டெஸ்ட் பண்ணிக் கொண்டிருந்த அந்த அம்மணியிடம், இப்போதைக்கு கஜலட்சுமியாகவே இருக்கட்டும், பேசப் போனபோது ராஜாராமன் குறுக்கே வந்து சேர்ந்தார்.
”சுக்கு மிளகு பொடிச்ச இருமல் சூர்ணம் வென்னீரோட எனக்குத்தான் சார். அவளுக்கு அதெல்லாம் தேவையே இல்லை. என் ஒய்ப்பை சொல்றேன் என்று அபிநயம் பிடித்த ராஜாராமன் காத்திருந்த மாத்திரை விவகாரத்தில் தான் பங்கெடுக்கவில்லை என்றான் சந்தன்
ராஜாராமன் உடனே தன் மனைவியைப் பற்றி ஒரு வார்த்தை நல்லதாகச் சொல்ல உத்தேசித்து, ”இவ தம்பூரா மீட்டி ஸ்ருதி தராட்ட நான் சுஸ்வரமாக பாடின மாதிரி தான். ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே நூறு கச்சேரியிலே தம்புரா போட்டிருக்கா சார் இன்னமும் தம்புரா ஆர்டிஸ்ட் தான்; பின்பாட்டு கூட சிஷ்யைகளை பாட வச்சுடுவேன்” என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டார்,
”காப்பி நாக்கு பொளிகிற சூடாப் போடலியே? அப்புறம் ராஜமுந்திரி கச்சேரி மாதிரி ஆயிடும்?” பிரம்மாண்டமான ப்ளாஸ்கைச் சுட்டிக் காட்டிக் கேட்டபோது அவர் மனைவி ஏழு நாரைகள் சேர்ந்திசை எழுப்பும் குரலில் ”நான் ஒண்ணுக்கு மூணுதடவை செக் பண்ணிட்டேன்” என்றாள் சந்தனைப் பார்த்துக் கொண்டு. ராஜமுந்திரியில் என்ன ஆச்சு கஜலட்சுமி என்று உரையாடலை ஆரம்பிக்கலாமா? வேண்டாம். துஷ்டா துன்மார்க்கா என்று வைது தீர்க்கலாம் உரிமை எடுத்துக் கொண்டு பெயர் சொல்லிக் கூப்பிடுகிறவனை. காலம் கெட்டுக்கிடக்கு.
”பயப்பட வேணாம், அவளுக்கு தொண்டைக்கட்டு. அது வேறே ஒண்ணுமில்லே. எனக்கு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு உருளைக்கிழங்கு மசியல் உசிரு. ஆனால், சாப்பிட்டா தொண்டை கட்டி பாட முடியாமல் போயிடும். அதனாலே நான் கறிவேப்பிலைப் பொடி சாதம் சாப்பிடறபோது டைனிங் டேபிள்லே எதிர்லே உட்கார்ந்து மிசிஸ்ஸை எலுமிச்சை பிழிஞ்சு உருளை பொடிமாஸ் சாப்பிடச் சொன்னேன்”.
அட கிராதகரே, நீர் ரீதிகௌளையிலே ’தத்வமறிய தரமா’ன்னு நெகிழ்ச்சியா ஏங்க, என் பள்ளித்தோழியான்னு தெரியலே, யாரோ இந்தப் பெண்ணரசி, தொண்டை கட்டச் சாப்பிடணுமா?
பேச்சு வளராமல் சபா செக்ரட்டரி வந்து ”படுதா தூக்கிடலாமா சார்?” என்று கேட்க, ”தூக்க வேண்டியதுதான்; கச்சேரி முடிச்சு சங்கீத நாடக அகாதமி கமிட்டி மெம்பர் ஜனாப் தில்ஷித் கானுக்கு என் வீட்டிலே விருந்து” என்றார் ராஜாராமன். நான் எப்படிப்பட்ட ஆள், என்ன மாதிரி தொடர்பு எல்லாம் ஏற்பட்டவன் என்று சந்தனிடம் சொல்லாமல் சொல்லி எழுந்தபோது, அவர் வீட்டம்மா காதில் ஏதோ சொல்ல, ’அதெல்லாம் கச்சேரி நடுவிலே சொல்லிடலாம்’ என்றார் ராஜாராமன். என்ன என்று புரியவில்லை சந்தனுக்கும் சபா செக்ரட்டரிக்கும்.
”அது ஒண்ணுமில்லே சார், என் கார் இன்னிக்கு ஒர்க்ஷாப் போயிருக்கு, திரும்ப வீட்டுக்கு கொண்டுபோய் விட டாக்சி ஏற்பாடு பண்ணி ராகம் தானம் பல்லவி முடிஞ்ச உடனே காதுலே போட்டா போதும். காகித சீட்டுலே எழுதி அனுப்பிடாதீங்க. நான் பேப்பர்லே எழுதினதை பாடினாலும் பாடிடுவேன்”. சிரித்தபடி, பேச்சு வளர்க்காமல் சந்தன் அரங்கத்துக்குப் போனான்.
அது போன கச்சேரி. இந்த வாரம் இந்த சபா. கச்சேரி மட்டும் கேட்டுவிட்டு எழுந்து வர வேண்டியதுதான். கச்சேரி முடிந்து சின்ன அரட்டை நடத்த முடியுமோ தெரியவில்லை. வித்துவான் ராஜாராமன் கார் இல்லாமல் இருந்தால் நல்லது. சந்தனுடைய காரில் கொண்டுபோய் விடுவான். வீட்டில் போய் ரொம்ப தேங்க்ஸ் என்பார் ராஜாராமன். மற்றும் கஜலட்சுமி. ”ஒரு வாய் காப்பி குடிச்சுட்டுத்தான் போகணும்”. ”காப்பி சாப்பிட ஏது நேரம் காலம்?” சூடாக காபி வரும்போது ஆரம்பிக்கலாம், ”பை தி பை நீங்க பல்லடமா?”.
அரங்கத்தில் ஒன்றிரண்டாக எரிந்த விளக்குகள் மங்கலாக ஒளி பரத்தின. ’கானமூர்த்தே” குரல் மேடையில் இருந்து சீராக ஒலித்தது சட்டென்று பிசிறியது. அமைதியான அரங்கில் ஹிப்நாடிஸ அனுபவம் சிருஷ்டிக்கும் கானமூர்த்தி ராகம் நடுவில் நின்று ராஜாராமன் பத்து வினாடி இருமி, அவசரமாக ப்ளாஸ்க் திறந்து டம்ளரில் காப்பி ஊற்றிக் கொடுத்தாள் கஜலட்சுமி போல பெயர் கொண்ட பெண்மணி.
தொடர்ந்து கரகரப்ரியா ஆலாபனை. சக்கனி ராஜாவா, இல்லை, ராம நீ சமானமெவருவா அல்லது பக்கல நிலபடியா? ராஜாராமன் ஒரு சிரிப்போடு ’நடசி நடசி’ ஆரம்பித்தார். எடுத்தது தான் தெரியும் குழைந்து மேடையிலேயே சரிந்து விழுந்து விட்டார். திரை இறக்கப்பட, சந்தன் மேடைக்கு ஓடினான்.
அந்த நிமிடத்தில் அவன் சகலமானதற்கும் பொறுப்பு எடுத்துக் கொண்டான். இப்போதைக்கு கஜலட்சுமி என்று பெயர் வைத்த ராஜாராமனின் மனைவி அவசரமாக, பாதி சாப்பிட்ட சபா கேண்டீன் நெய் ஜாங்கிரியை இலையோடு குப்பையில் எறிந்தாள். எனக்காக சாப்பிடவில்லை என்ற முகபாவம்.
சபாவுக்கு ஒரு கிலோமீட்டருக்குள் தான் ராஜாராமனின் சிறப்பு மற்றும் குடும்ப டாக்டர் இருப்பதாக ராஜாராமன் மனைவி பதட்டத்தோடு சொல்ல, கைத்தாங்கலாக சந்தன் காரில் அவரை ஏற்றி கிளினிக் கூட்டிப் போனான், ராஜாராமன் மனைவி பின்சீட்டில் அவரை மடியில் படுக்க வைத்தபடி விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டு வந்தாள். இன்னிக்குன்னு கார் வேறே இல்லே என்று நடுவில் சந்தனிடம் கரகரத்த குரலில் சொன்னாள். நிச்சயம் கஜலட்சுமி இல்லை அவள். கீச்சிடும் குரலோடு தான் நினைவில் இருக்கிறாள் சந்தனுக்கு.
ராஜாராமனுக்கு ஒன்றுமில்லை என்று ஒரு இன்செக்ஷன் போட்டு டாக்டர் எழுந்தார். எதுக்கும் இதை வச்சுக்குங்க என்று கொடுத்தது டானிக் ரகமாகத் தெரிந்தது. ராஜாராமன் மனைவி முகத்தில் தெளிவு.
அண்ணாமலைபுரத்தில் ராஜாராமன் வீட்டில் கொண்டு போய் அவரையும் மனைவியையும் இறக்கி விட்டான் சந்தன். ரொம்ப நன்றி சொன்னாள் அவர் மனைவி. கிளம்பும்போது மொபைல் எண் கொடுத்து ஏதாவது அவசரம் என்றால் கூப்பிடச் சொன்னான் சந்தன்.
ஹாலில் இருந்து முன்னறைக்கு வந்தபோது அவளை, ”நீங்க பல்லடம் தானே, நான் சந்தன் என் கிளாஸ்மேட்டா நீங்க?” என்று கேட்க நினைத்தான்.
ஆறாம் விரல் எங்கே? அது இல்லாமல் நீ சந்தன் என்று எப்படி நம்புவது? கேட்பாள். வேண்டாம். வேறு எப்போதாவது சந்தர்ப்பம் வந்தால் பேசலாம். சந்தனா கஜலட்சுமியா ஆறாம் விரலா, அது முக்கியமில்லை. தேவையான நேரத்தில் கரம் நீட்ட முடிந்தாலே போதும்.
சந்தன் வாசலுக்குப் போகும்போது வீட்டு முகப்பிலிருந்து குரல் – ”சாவகாசமாக ஒய்ப்பை கூட்டிட்டு வந்து போ சந்தான கோபாலா”.