குடம் – சிறுகதை நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

குடம்

 

ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன்  சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ.

 

எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு வயசா என்ன? சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்தநாள் என்றால் இனிமேல் தில்லியிலிருந்து யார் அறிக்கை விடப் போகிறார்கள்? கொடி ஏற்றுகிறது போல், சமாதானப் புறா பறக்க விடுகிற மாதிரியெல்லாம் பத்திரிகை முதல் பக்கத்தில் போட வேறு யாருடைய படம் தோதாக இருக்கும்? அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு அவர் போயிருக்கலாம். குறைந்த பட்சம் சக்ரபாணி ஓட்டலை அடைக்காமல் அங்கே வழக்கம்போல் இட்லியும் காப்பியும் கிடைக்கவாவது வழி செய்திருந்தால், குளித்து, நாஷ்டா பண்ணிவிட்டு வேலைக்குக் கிளம்பி இருக்கலாம். வேலை  இன்று நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பசியாறாமல் முடியுமா?

 

போனவாரம் பார்த்தபோது சொன்னேனே, நாங்கள் ஒரு சினிமாப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்ப் படம். தேவகோட்டை அனாருனா தான் பைனான்சியர். கண்டமங்கலம் பையன் ஒருத்தன் கெச்சலாக நம்ம ராமநாதன் சார் கூடத் திரிந்து கொண்டிருப்பான் இல்லே, அவன் தான் டைரக்டர். ராமநாதன் சார் டைரக்ட் செய்து போன மாதம் வந்த படத்தில் உதவியாளர்கள் பெயர் அடங்கிய டைட்டில் கார்டில் கீழாக துணை வசனம் என்று போட்டு அவன் பெயரும் வந்திருந்தது, பார்த்திருப்பீர்கள். அந்தப் படம் சரியாக ஓடவில்லைதான். டவுணுக்கு வெளியே எங்கேயாவது  கீற்றுக் கொட்டகையிலாவது அது தட்டுப்படாமல் போகாது. கிடைத்தால் அவசியம் பாருங்கள். இன்றைக்கு வேண்டாம். கொட்டகை எல்லாம் அடைத்திருக்கும்.

 

ராமநாதன் சாரும் கண்டமங்கலம் பையனும் ஜவஹர்லால் நேருவும் கிடக்கட்டும். ஆனந்தராவ் என்னத்துக்கு வந்திருக்கிறான்? சட்டையில் கருப்புத் துணி குத்திவிடவா? அதற்கும் வழி இல்லாமல் சட்டையைத் துவைத்துப் போட்டிருக்கிறேன். ஆனந்தராவ் போல அசிஸ்டெண்ட் டைரக்டராக நான் இருந்தால் ரெண்டு சட்டையாவது கைவசம் இருக்கும். ஆர்ட் டைரக்டருக்கு எடுபிடி. கொஞ்சம் மேலே வந்து என் பெயரும் டைட்டில் கார்டில் போடுவதற்குள் நேருவுக்குப் பத்து இருபது திதி திவசம் நடந்திருக்கும். அதுவரை இந்தச் சட்டை கிழியாமல் இருக்குமா?

 

வாய்யா ஜேம்சு. ஷூட்டிங் லேது. நேரு மர்கயா. சரியா?

 

நான் புஷ் டிரான்சிஸ்டரை மேன்ஷன் வாசல்படியில் வைத்துவிட்டு ஆனந்தராவை விசாரித்தேன். என்னுடையதில்லை. கூடத் தங்கியிருக்கிற  காமரா அசிஸ்டெண்டுடையது. எனக்கான டைட்டில் கார்ட் போட்டதும் நானும் வாங்குவேன். வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு டிரான்சிஸ்டரில் மங்கல இசை, ஒலிச் சித்திரம், ஆகாசவாணி செய்திகள், சோக கீதம் என்று கேட்க சுகமாக இருக்கும்.

 

ராவ் சைக்கிளை ஸ்டாண்ட் போடாமல் சுவரில் அதை சார்த்தி வைத்துவிட்டு அரக்கப் பரக்கப் படி ஏறினான். அவன் காலடியில் டிரான்சிஸ்டரில் ஒற்றை வயலின் புலம்பியது. கிட்டத்தட்ட இதே டியூனில் தான் ஒரு பேத்தாஸ் பாட்டு போன மாதம் படத்துக்காக ரிக்கார்ட் செய்தோம். ரேப் சீனுக்கு அடுத்த காட்சி. நேரு உயிரோடு இருந்த நேரம்.

 

பல்லு வெளக்கிட்டியா? சட்டையைப் போட்டுக்கிட்டு வா.

 

ஆனந்தராவ் சொன்னான். நான் பல்லு வெளக்கியிருந்தால் உடனே சட்டையை மாட்டி விட்டுச் சாப்பாடு போடக் கையோடு கூட்டி வரும்படி யாரோ சொல்லி அனுப்பியதுபோல் இருந்தது. துக்கம் இல்லாமல் மங்கல இசை கேட்கிற யாரோ.

 

எங்கே போகணும் சொல்லு. காலையிலே இருந்து காப்பி கூட இல்லாம உக்காந்திருக்கேன். நேரு இப்படி திடீர்னு அவுட்டாகி.

 

அதுக்கு  சாவகாசமா உக்காந்து கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுதுடலாம் மவனே..

 

ரூம் உள்ளே அவன் வந்தபோது ராத்திரி படுத்துக் கிடந்த பாயைக் கூடச் சுருட்டி வைக்காதது ஞாபகத்துக்கு வந்தது. ஆனந்தராவ் பாயில் காலைப் பரப்பி உட்கார்ந்தான். பாய் ஓரமாகப் பிரிந்து இருந்த கோரையைப் பிய்த்தான்.

 

முந்தாநாள் பாட்டு ஷூட் பண்ணிணோம் இல்லே.

 

அவன் கோரைத் துரும்பால் காது குடைந்தபடி சாவகாசமாக ஆரம்பித்தான். போன வருடம் கல்யாணம் முடிந்து ஸ்டோர் வீட்டில் குடித்தனம் நடத்துகிற சம்சாரி. தாம்பத்தியத்தில் வேறே ஏது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் காலையில் ஒரு டம்ளர் நீர்க்கவாவது காப்பி கிடைக்கும். குடித்துவிட்டுக் காது குடைந்து கொண்டு உட்காரலாம். நேரு சாவுச் செய்தி திடீரென்று வந்து எல்லாம் இதை மாற்றாது.

 

நான் சும்மா வாய் பார்த்துக் கொண்டு நிற்க ஆனந்தராவ் தொடர்ந்தான்.

 

முடிச்சு பேக் அப் பண்ணி செட் ப்ராப்பர்டி எல்லாம் திருப்பிக் கொடுத்தாச்சோ?

 

பின்னே? உதவி-ன்னு டைட்டில் கார்ட் போடாவிட்டாலும் என் பொறுப்பில் இருக்கப்பட்ட காரியம் இல்லையா அது எல்லாம்? கிணத்தங்கரையிலே ஹீரோயின் தண்ணீர் இரைத்தபடி செகண்ட் ஹீரோயினோடு பாடுகிற காட்சி. கிணற்றுப் பக்கம் துளசி மாடம், அவசரமாகக் கட்டி வைத்த செங்கல், மேலே கவிழ்த்து நிறுத்தின ப-வடிவ மரச் சட்டம், நடுவில் ராட்டினம், தாம்புக் கயிறு, தகர வாளி இப்படி ஒரு ஜாமானையும். வேண்டாம். அது கெட்ட வார்த்தையாகிக் கொண்டிருக்கிறது இப்போது பட்டணத்தில். ஒரு பொருள் விடாமல். இது நல்ல வார்த்தை. ஒரு பொருள் விடாமல் ஜாப்தா படி எடுத்துப் போய் வாடகைக்கு எடுத்த கடைகளில் கொடுக்க வேண்டும். ஹீரோயினின் பஞ்சு அடைத்த உள்பாடி முதற்கொண்டு என் பொறுப்பில் தான் விடப்படுகிறது. அதுக்கு ஒரு வாடை உண்டு.

 

கிணற்றுப் பாட்டுக்காக தகரவாளியில் ஸ்டூடியோ கழிப்பறையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பியது நான் தான்.  எடுத்து முடிந்து ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்துப் போய் சொக்கலிங்க ஆசாரியாரின் சகலபாடியின் கடையில் கொடுத்துவிட்டு வர ப்ரொடக்ஷன் யூனிட் காரில் போனேன். அப்போதும் நேரு மூச்சு விட்டுக்கொண்டு இருந்தார். அன்றைக்கு டேராடூனில் இருந்தார் அவர். மகள் இந்திராவோடு பூந்தோட்டத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்ததாக சகலபாடி  கடையில் அப்போது ஆகாசவாணி செய்தி அறிக்கை படித்தது துல்லியமாக நினைவில் இருக்கிறது.

 

கிணத்துக் கைப்பிடிச் சுவர் மேலே ஒரு பித்தளைக் குடம் இருந்துதே. இன்னொரு குடம் வச்சா இடுப்பு உடையாதான்னு கதாநாயகி பாடும். அப்ப இந்த செகண்ட் ஹீரோயின் பொண்ணு குடத்தைத் தூக்கி இடுப்புலே வச்சுக்கும்.  அதை அப்படியே அணைச்சுப் பிடிச்சுக்கிட்டுச் சைட் ப்ரொபைல்லே  ரெண்டு மாரும் அலுக்கிக் குலுக்கிக்கிட்டு ஒய்யாரமா நடக்கும். காமிராவிலே மூணு குடம் தெரியும். சரியா?

 

ஆனந்தராவ் மாரைத் தள்ளிக் கொண்டு அசைந்தபடி பாடிக் காட்டினான். துணைக்கு ரேடியோவில் துக்கமான சங்கீதம். அது என்னமோ சாவு  என்றால்  யாரையாவது பிடித்து வந்து ஆகாசவாணியில் அழ வைத்து விடுகிறார்கள். வீட்டிலிருந்து சப்பாத்தி கட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் வேலைக்கு வந்திருப்பார்கள் போல.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன