அந்தப் பித்தளைக் குடம் திரும்ப வந்து சேரல்லேன்னு சொக்கலிங்கம் ஆசாரியார் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டுப் போனார். சகலை புகார் பண்ணியிருக்காராம்.
ஆசாரியும் அவர் சகலையும் என்ன விதமான ஆட்கள் என்று புரியவில்லை. நாடு முழுக்க துக்கம் அனுஷ்டிக்கிற நேரம். இந்த வார்த்தை எடுப்பாக இல்லையா? அனுஷ்டித்தல். ஜாமான் மாதிரி கிடையாது. நாலு பேர் கூடியிருக்கப்பட்ட இடத்துலே கவுரவமாகச் சொல்லலாம். குடத்தோடு பெண்கள் இருந்தாலும் சரிதான்.
அது சரி. துக்கம் அனுஷ்டிக்கிற நேரம் என்பதால் வாடகைக்கு கொடுத்த குடத்தைத் தலை முழுகிவிடலாமா? வேண்டாம்தான். அதுக்காகப் பொழுது ஒரு பக்கம் விடிந்ததுமே ஆனந்தராவ் வந்து இறங்கி தேடச் சொல்லி அவசரப் படுத்த அது தங்கக் குடமா என்ன? தங்கத்திலே குடம் செய்வார்களா? செட்டிநாட்டில் வேணுமானால் கொல்லுப் பட்டறையில், இதுக்கெதுக்கு கொல்லுப் பட்டறை? பத்தர் நகைக்கடையில் செய்து வாங்கி கல்யாணத்துக்கு சீர் பரப்பி இருப்பார்கள். நம்ம படத்தில், ஆந்திராவிலிருந்து புறப்பட்டு வந்த ரெண்டாம் கதாநாயகி கோடம்பாக்கம் ஸ்டூடியோ கிணற்றடி செட்டில் தடவத் தங்கக் குடம் எல்லாம் கட்டுப்ப்படியாகாது.
ஆனாலும் எனக்குப் பித்தளைக் குடத்தைத் திருப்பிக் கொடுத்ததாக நினைவு இல்லை. அம்பாசிடர் கார் டிக்கியிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கடையில் பரத்திய பொருளில் ஈரமான தாம்புக்கயிறும் தகர வாளியும் இருந்தது. சட்டையை நனைத்தது அது ரெண்டும். குடம் என்ன ஆச்சு?
ஸ்டூடியோ லைட்பாய் பாத்தானாம். செகண்ட் ஹீரோயின் குடத்தோட ஆட்டோவிலே ஏறிப் போச்சாம். சொக்கலிங்க ஆசாரி துப்புக் கொடுத்திருக்கார்.
ஆனந்தராவ் பாயை மடித்து வைத்தபடி சொன்னான். பஞ்சு வெளியே வந்து சிதற என்னத்துக்காகவோ தலைகாணியை, இதுவும் சரியான வார்த்தை இல்லை, தலையணையை உதைத்தான் அவன். ஒரு காப்பி குடித்தால் சரியான வார்த்தை எல்லாம் சரம் சரமாக வந்து விழும்.
கிளம்பு. குடத்தைப் பத்தி விசாரிச்சுட்டு வந்துடலாம்.
எங்கே போகவேண்டும் என்று தெரியவில்லை. பஸ் பிடிக்கக் கையில் காசு குறைச்சலாக இருக்கிறது. ரெண்டு டிக்கட் போக வர எடுக்க நிச்சயம் துட்டு கிடையாது. வரும்போது குடத்தை வேறே கட்டித் தூக்கி வர வேண்டும். பஸ் இருக்குமா? நேருவே போய்விட்டார்.
பஸ், ரிக்ஷா எல்லாம் எதுக்கு? இப்படியே நேரா வண்டியை விட்டா ராஜாபாதர் தெருவாண்டை சாக்கடைத் தண்ணி சுத்தப்படுத்தற ஆபீஸ் இருக்கு இல்லே? அங்கேதான் எங்கேயோ இருக்குது அந்தப் பொண்ணு. மதமதன்னு நிஜமாவே எடுப்பான ராயலசீமைக்காரி. கொஞ்சம் அனுசரிச்சுப் போனா வெர்சா முன்னுக்கு வந்துடலாம். மாட்டேன்னு முரண்டு பிடிக்குறா. ஹீரோ கூட ஒரு கண்ணு வச்சிருக்கான் தெரியுமில்லே?. போய்யா, முடியாதுன்னாளாம், சொக்கலிங்க ஆசாரி போட்ட கிணத்தடி செட்டிலேயே அவ ஆயுசு பூரா, தலை நரைச்சு நிக்கட்டும். நீ கிளம்பு.
தொழில் கூப்பிடுகிறது. தொழில் தர்மம் தெரிந்த ஆர்ட் டைரக்டர்கள் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ஷ¥ட்டிங்குக்காகக் கொண்டு வந்த நாலு வாத்துக்களை, வாத்துகளையா வாத்துக்களையா, சரி ஏதோ ஒண்ணு, அதுகளை உடனே திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் வீட்டு முற்றத்தில் நாலைந்து நாள் மேய விட்டிருந்த சுப்பையரைத் தெரியுமோ? வாத்து மேக்கி ஐயர் என்று இன்னும் கூட பழைய கைகள் கூப்பிடுகிறார்கள். ஒரு படத்துக்கு அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்தேன். இழைப்பு உளியைக் கையில் எடுத்தால் மனுஷர் அற்புதமான தச்சராகி விடுவார். தெலுங்கில் மாயாஜாலப் படங்களில் மந்திரவாதி குகை செட் போடுவது அவராகத்தான் இருக்கும். வில்லன் மந்திரவாதி ஏவி விட்ட பிசாசுகள் எல்லாத் திசையிலும் ஓடிய பிறகு, வில்லி தொடை வரைக்கும் வழித்துக் கொண்டு தொம்தொம் என்று குலுக்கியபடி குதித்து ஆடினாலும் ஒரு ஆணி கூட கழண்டு வராத குகை அதெல்லாம். அவருடைய மூக்குப் பொடி வாடையையும், மூக்குக்கு மேல் சதா வரும் கோபத்தையும் சகித்துக் கொள்ள முடிந்திருந்தால் நானும் ஜருகண்டி என்று தெலுங்கில் நுழைந்து லட்டு லட்டாகப் பணம் எண்ணிக் கொண்டிருப்பேன். இப்படி இட்லி காப்பிக்கு அண்ணாந்து கிடக்க வேணாம்.
காப்பி, நாஷ்டாவை எல்லாம் துச்சமாகப் புறக்கணித்து தேசமே துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிற ஒரு தினத்தில் பித்தளைக் குடத்தைத் தேடி அலைய ஆயத்தமாக ஈரச் சட்டையைக் கொடியிலிருந்து உருவி எடுத்தேன். ஆனந்தராவோடு வாசலுக்கு வந்தபோது தான் அவன் சைக்கிளில் கேரியர் இல்லை என்பது கண்ணில் பட்டது.
முன்னால் உட்காருடா, மிதிச்சுடலாம்.
அவன் சொன்னபடிக்கு குந்தினேன். சைக்கிள் தறிகெட்டு அலைபாய்ந்து அடுத்த வீட்டுத் தோட்டத்துக்குள் ஓடியது. பூச்செடியில் முட்டி மோதி குடை சாய, உள்ளே இருந்து யாரோ இரைந்தார்கள். பீப் பீப் என்று சத்தத்தோடு ஆகாசவாணி வீட்டுக்குள் செய்தி படிக்க ஆரம்பித்தது கேட்டது. நேருவின் சடலம் தகனமாகிற நாள், நேரம் குறித்த தகவலாக இருக்கும் என்பதால் தோட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் பொருட்படுத்த வேண்டியதாகத் தோன்றியிருக்காது.
வண்டியை நிமிர்த்தி எடுத்துக்கொண்டு ராவ் அவசரமாக வெளியேறினான். பின்னால் தட்டிக்கொண்டு நானும் நடந்தேன். பசியில் வயிறு ஆகாசவாணி போல் அழுதது.
தெருக் கோடியில் சின்னக் கும்பல் ஒன்று இன்னும் அடைக்காத கடைகளை உடனடியாகப் பூட்டச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தது. தெலுங்கு கடையில் கொத்தாகத் தொங்கும் பச்சை வாழைப்பழங்களைப் பார்க்கப பசி அதிகமானது. கடையை அடைக்கும் முன்னால் ஓடினால் பிய்த்துத் தின்னலாம். துக்கம் அனுஷ்டிக்கவும் பித்தளைக் குடத்தைத் தேடவும் வயிற்றில் தீனி வேண்டும். குடத்தை இடுப்பில் ஏற்றி இறக்க, கதவை அடைக்கக் கூடத்தான்.
சைக்கிள் ஓட்டக் கூடாது, தெரியுமில்லே?
கூட்டத்தில் இருந்து கெச்சலாக ஒருத்தன் முன்னால் வந்து ஆனந்தராவ் சைக்கிளின் ஹேண்டில்பாரைப் பிடித்து நிறுத்தினான். புசுபுசுவென்று இருந்த அவன் மீசை என் கன்னத்தில் குத்துகிற நெருக்கத்தில் நின்றிருந்தான். மீசையை முறுக்கிவிட்ட படி முறைப்பான் என்று எதிர்பார்த்தபடி கீழே குதித்தேன். வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டு அவன் சொன்னதையே திரும்பச் சொன்னான். முகத்தில் திருப்தி தெரிந்தது. தெலுங்குக் கடை அடைக்கும் முன்னால் வாழைப்பழம் பிய்த்துத் தின்றுவிட்டுத் துக்கம் அனுஷ்டிக்கிறவனாக இருப்பான். பத்து நிமிடத்தில் வயிற்றில் இருந்து பாரம் இறக்க வசதியாக வீடு இந்தப் பக்கம்தான் எங்கேயாவது இருக்கும். சுகமோ துக்கமோ அதெல்லாம் நடந்தே ஆக வேண்டிய விஷயம்.
ஆனந்தராவ் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கெத்தாக நடக்க ஆரம்பித்தான். அவன் நடைக்குச் சரியாக நடந்தால், சுழன்று வந்த சைக்கிள் பெடல் காலில் இடறியது. கொஞ்சம் பின்னால் நடந்தால் அவனுக்கு சேவகம் செய்கிறதுபோல் தோன்றியது.
ராஜாபாதர் தெருக் கோடியில் சீரான சத்தத்தோடு மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. பெரிய குழாய் மூலம் தொட்டியில் விழுந்து கொண்டிருந்தது கழிவு நீரா, இல்லை சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நேரு காலமானதற்காக இந்த மோட்டாரை நிறுத்த யாருக்கும் தோன்றவில்லை என்பது வருத்தமாக இருந்தது.
ஆனந்தராவ் சைக்கிளை நிறுத்தினான். முன்னால் வாய்க்கால் விட்டுப் போகிற மாதிரிப் பிரிந்த சந்துக்குள் இருந்து ஒரு பழைய வீடு எட்டிப் பார்த்தது. குகை வாசல் போல் கதவு பாதி திறந்திருந்தது. ஒற்றை அறை. வாசலை ஒட்டி அடிபம்பில் ஒரு தாடிக்காரன் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தான். தகர வாளி.
அந்த வீட்டுப் பக்கம் நடந்தேன். தண்ணீர் சன்னமாக வாளியில் விழுந்தாலும் அடிபம்பை விடாமல் அடித்துக் கொண்டிருந்தான் அவன். வீட்டுக்குள் இருந்து முட்டை உடைத்த வாடை. காற்றில் மிதந்து வந்து காலில் ஒரு நீளமான முடிக்கற்றை சிக்கியது. எடுத்துப் போட்டுவிட்டு தாடிக்காரனை விசாரித்தேன்.
நடிகை வீடுதான் இது. இத்தனை கீகடமான இடத்திலா இருக்கிறாள்? புதுசாக வந்து ஒரு படத்தில் மட்டும் தலைகாட்டியவள். இன்னொரு குடம் இடுப்பில் வைத்தால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்று ஹீரோவுக்கும் மற்ற தேவையானவர்களுக்கு நிரூபித்தால் சொக்கலிங்க ஆசாரி போட்ட படுக்கையறை செட்டோடு நாலு படம் கிடைக்கும். நிரூபிக்க வாகாகக் குடம் எங்கே?
வீட்டு நடையில் சுவரில் சாய்ந்து இருந்த வயதானவள் என்னைக் கவனிக்காமல் இருமலோடு தெலுங்கில் யாரிடமோ நைச்சியமாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஒரு நடுவயசுக்காரர் மடித்துக் கட்டிய வேட்டியோடு நாற்காலியில் வந்து உட்கார்ந்து தரையில் சிதறிக் கிடந்த முட்டை ஓட்டைத் தர்மசங்கடமாகப் பார்த்தார். மேல் சட்டை மட்டும் அணிந்த ஒரு சின்னப் பையன் வாசலை நனைத்து விட்டுத் திரும்ப வீட்டுக்குள் ஓடினான். செகண்ட் ஹீரோயினுக்கு இவர்கள் எல்லாம் என்ன உறவு? எல்லாரும் காலையில் முட்டை சாப்பிட்டார்களா? ரேடியோ கேட்டார்களா?
உள்ளே இருந்து தலைப்பா கட்டிய இன்னொருத்தர் கிழவிக்குக் கடுமையாகப் பதில் சொல்லியபடி வேகவேகமாக வெளியே வந்தார். ‘’சாயந்திரம் டாக்சி கிடைச்சா எடுத்துக்கிட்டு’ அவர் சொன்னதை முழுசாகக் கேட்க விடாமல் வீட்டுக்குள் இருந்து ரேடியோவில் நேருவுக்காக திருவாசகம் படிக்கிற சத்தம். வீட்டுச் சுவரில் சாய்த்து வைத்திருந்த சைக்கிளை நிமிர்த்தியபோது என்னைப் பார்த்து முறைத்தார்.
இவர் கடன் வசூல் செய்ய வந்திருப்பார். முட்டை சாப்பிடக் காசு இருக்கிறது, கடனை அடைக்க முடியாதோ என்று கேட்டிருப்பார். பாக்கிக்கு ஈடாக ஜாமான் செட்டைத் தூக்குவேன் என்று மிரட்டியிருப்பார். எடுத்துப் போக நேரு இறந்த துக்க நாள் சரிப்படாது போயிருக்கலாம். நேருவுக்காகத் துக்கம் கொண்டாடாத டாக்சி டிரைவர் அகப்படும் பட்சத்தில் அவர் சாயந்திரம் டாக்சி எடுத்து வருவார். அனுசரித்து நடந்தால் இனி துக்க நாள் ஏதும் இருக்காது. முக்கியமாக, கவுரவமான பெண்கள். ஹீரோவின் கண்பட்டவர்கள். குகைகளில் வசிக்கிற, ஆடுகிற பெண்கள்.
வாசலில் சிறுநீரை மிதிக்காமல் திரும்பினேன். உடம்பு சூட்டில் சட்டை உலர்ந்திருந்தது. ராவ் தூரத்தில் இருந்தபடிக்கே குடம் கிடைச்சுதா என்று ஜாடையில் விசாரித்தான். இல்லை என்று தலையசைத்தேன். அது உள்ளே இப்போதைக்கு பத்திரமாக இருக்கும். இன்னொரு தடவை வந்தால் யாராவது கைப்பற்றிக் கொண்டு போயிருப்பார்கள். தெரு திரும்பும்போது ரேடியோவில் நேரு மரணம் பற்றி அடுத்த செய்தி வாசிப்பது கேட்டது. காலையிலிருந்து கேட்கும் அதே தழுதழுத்த குரல்தான். அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை.
(புதிய பார்வை 2008)