ஆழ்வார் – சிறுகதை

அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து தேடிக் கொண்டிருந்தார்கள். மேல் மாடியில் பிரம்மச்சாரிக் குடியிருப்புகளில் மங்கிய பல்ப் வெளிச்சத்தில் களைத்துப் போன மின்விசிறிகள் சுற்றுவது ஜன்னல் வழியே தெரிந்தது. கீழே சிதறியிருந்த மாவிலிருது பரபரப்பாக ஓடிய கரப்பான் பூச்சிகள் ஏறாமல் கால் மாற்றிக் கொண்டு ஒரு ஸ்தூல சரீர வைஷ்ணவர் மேலே பார்த்து, ‘சடகோபா .. சடகோபா.. ‘ என்று தொடர்ந்து பெருஞ்சத்தத்துடன் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ராஜுவும் மேலே பார்த்தான். அவன் தேடி வந்தவர் அங்கே இருக்கக் கூடும், அவசியம் அவரைப் பார்த்துவிட்டு வரும்படி கடையில் சொல்லியிருந்தார்கள்.

‘கெச்சலாக, கண்ணாடி போட்டுக் கொண்டு .. கருப்பையா என்று பெயர் .. மதுரைப் ப் பக்கத்திலிருந்து பிரசவலேகியமும், மூங்கில் குருத்து ஊறுகாயும், பாட்டிலில் அடைத்து எடுத்து வந்து இங்கே இருக்கிற பெரிய மளிகைக் கடைக்கெல்லாம் சப்ளை செய்கிறவர். ஐம்பது வயது இருக்கும் .. இங்கே வரும்போது ஏதோ பிரம்மச்சாரி குடியிருப்பில் சொந்தக்காரப் பிள்ளையாண்டன் அறையில் தங்குகிற வழக்கம் .. கொஞ்சம் காது மந்தம் ‘ ..

இந்தத் தகவல் எந்த அளவு போதுமென்று தெரியவில்லை. எதற்கும் மேலே போய்க் கேட்டுப் பார்க்கலாமென்றால் இருட்டில் மாடிப் படியைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.

ஒரு கதவு திறந்தது. திறந்த போது வெளிச்சத்தில் ஓரமாக சுவரை ஒட்டி மாடிப்படிகள் தெரிந்தன. லுங்கி கட்டிக் கொண்டு ஒருவன் வாயில் புகையும் சிகரெட்டோடு கீழே பார்த்தான்.

ராஜு மேலே போய்ச் சேர்ந்த பொழுது லுங்கிக்காரன் அறைக்கு உள்ளே போய்க் கதவை முக்காலுக்குச் சாத்திவிட்டுத் தரையில் உட்கார்ந்திருந்தான். சீட்டுக்களை விரித்துக் கொண்டு இன்னும் மூன்று பேரும் உண்டு. அறை முழுவதும் புகை மண்டலம்.

மதுரைக்காரர் இவர்களோடு தங்கியிருக்கக் கூடும். பிரசவ லேகியத்தையும், ஊறுகாய் பாட்டில்களையும் ஓர் ஓரமாக வைத்துவிட்டு, மின்சார பல்ப் வெளிச்சமும், சிகரெட் புகையும் முகத்தில் படாமல் கைப்பையையோ, மேல் துண்டையோ அணையாக வைத்தபடிக்குத் தூங்க முயற்சி செய்து கொண்டு ..

இங்கே அவரைக் காணோம் .. அடுத்த ரூம் ? அதற்கும் அடுத்தது ?

‘எஸ் பிளீஸ் .. ‘

சிவப்பு லுங்கிக்காரன் திரும்பவும் கொஞ்சம் சலிப்போடு எழுந்து வந்தான். இவன் சொன்னதைக் கடமை கருதிக் கேட்டான்.

‘நீங்க சொல்றபடி இங்கே யாரும் வர்றதே இல்லையே .. எங்க மாமா ஒருத்தர் சிவகாசிப் பக்கம் இருந்து எப்பவாவது வருவார். நீங்க சொல்ற அடையாளம் அவருக்குக் கொஞ்சம் பொருந்தும். ஆனா அவர் லேகியம் சப்ளை பண்றவர் இல்லே .. காலண்டர் ஆர்டர் புக் பண்றாவர் .. ‘

அவர் இல்லை என்று ராஜு தலையசைத்தான்.

‘இந்தப் பக்கம் இதுபோல் பேச்சலர் அப்பார்ட்மெண்ட் வேறே இருக்கா ? ‘

‘இங்கே இது ஒண்ணுதான். பக்கத்துத் தெருவிலே ஒண்ணு இருக்கு .. ஆந்திரா மெஸ் மாடியிலே .. ‘

ராஜு நன்றி தெரிவித்துவிட்டுக் கீழே இறங்கும் போது மேலேயிருந்து சிரிப்புச் சத்தம்.

‘லேகியம் சப்ளையா ? உள்ளே கூப்புட வேண்டியதுதானே .. ‘

‘இவர் இல்லேடா .. தேடிவந்தவர். அதுவும் பிரசவ லேகியம். வேணும்னா சொல்லு, வாங்கித் தரேன் .. ‘

திரும்பவும் சிரிப்பு.

வாசலில் ஒரே அமைதியாக இருந்தது. மாவுமெஷினில் விளக்கு அணைத்துப் பையன்கள் காணமல் போயிருந்தார்கள்.

‘சடகோபன் உள்ளே தூங்கிண்டு இருக்கானா ? இத்தனை கூப்பிட்டும் எழுந்திருக்கக் காணோமே ? ‘

ராஜு சற்று நின்றான். விளக்குக் கம்பத்துக்குக் கீழே இருந்து வந்த குரல் அவனைத்தான் விசாரிக்கிறது. அந்த நாமக்காரப் பெரியவர் அப்போதிலிருந்து அங்கேயே தான் பழியாக நின்று கொண்டிருக்கிறார்.

இவருக்கு என்ன பதில் சொல்வது ?

‘வந்து .. நான் .. ‘

‘நீ சடகோபன் ஆபீஸ் தானே ? ‘

‘நான் இங்கே .. ‘ – வேண்டாம். இவருக்கு அந்தத் தகவல்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

‘நான் இங்கே இருக்கறவன் இல்லை சார். ஒரு ஜோலியா வந்தேன். பார்க்க வந்தவர் இல்லை. ‘

‘சடகோபன் இப்படித்தான் வரச் சொல்லிட்டு எங்கேயாவது போயிடுவான். எத்தனை தடவை தான் நடையா நடக்கிறாது ? போன விசை பெளர்ணமி பூஜைக்குத் தரேன்னான். அப்புறம் ஆளையே காணோம். ரங்கனாதன்கிட்டே .. அதான்ப்பா.. முன்சீப் கோர்ட் நாசரா இருந்தானே, உதடு வெளுத்து .. அவன் கிட்டே வாங்கிப் போட்டு … என்னத்தைச் கொடுத்தான் போ . . மூணு ரூபாயும் சில்லறையும் சட்டைப்பையிலே இருந்ததுன்னு பொடிமட்டை வாசனையோட .. அவனும் பாவம்தான் .. கோர்ட் உத்யோகத்திலே ரிடையரானதுக்கு அப்புறம் சட்டைப் பையிலே சில்லறை இருந்தாலே ஜாஸ்தி .. சட்டையே ஜாஸ்திங்கறியோ .. அது சரி .. எதோ போட்டு ஒப்பேத்தினேன் .. நாம பொறுத்துக்கலாம் .. அனுமார் பொறுத்துப்பாரோ ? ‘

தலைகால் புரியவில்லை. வழியில் அடைத்தமாதிரி நின்றுகொண்டு அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறார். கையில் இருக்கிற குடையால், ராஜுவுக்கு முன்னால் மாவுகொட்டிய மண்ணில் கோடு இழுத்துக் கொண்டே பேசுகிறார். லட்சுமணரேகையைத் தாண்டுவது மரியாதையாகப்படவில்லை. அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘ஆழ்வார் திருநகரிக்குப் போயிருப்பான். சொந்த ஊரு அதுதான். பூர்வீகம் திருப்புல்லாணியாக்கும். வைஷ்ணவன்.. திருமண் இட்டுண்டு ஆபீஸ் போனா என்னன்னா, வந்து இட்டுண்டாப் போச்சுங்கறான். பேண்ட், சட்டையும் நெத்தியிலே திருமண்ணும் சரியா வராதோ ? சப்கோர்ட் சிரஸ்தார் கிருஷ்ணசாமி ஐயங்கார் கோட்டும் சூட்டுமா வர்றபோதே நெத்தியிலே நாமம் டாலடிக்கும்.. வடகலையார். அது அந்தக் காலம் .. வா .. நடந்துண்டே பேசலாம். நான் நீலகண்டன் தெருவரைக்கும் போக வேண்டியிருக்கு. நீயும் அந்தப் பக்கம் தானே ? அங்கே பேச்சலர்ஸ் குவர்ட்டர்ஸ்லே தானே ஜாகை ? கிருஷ்ணா கபேயிலே சாப்பிட்டுப் போன வாரம் ஒருநாள் இந்த நேரம் நடந்து வந்துண்டு இருந்தியே .. பக்கத்திலே யாரோ சிகரெட்டைக் கொளுத்தி, குச்சியை அணைக்காமல் போட்டு .. என் காலடியிலே விழுந்தது .. நீ இல்லே தெரியும் .. சடகோபனும் அப்படித்தான் .. பீடி சிகரெட் .. தொடமாட்டான் .. ‘

‘சார் நான் இந்தப் பக்கமே இல்லே .. திருவல்லிக்கேணியிலேருந்து வர்றேன் .. ‘

சடாரென்று நின்றார். இப்போது அடையாளம் கண்டுகொண்டது சரியாக இருக்கும் என்பது போலக் குடையால் உள்ளங்கையில் மெதுவகத் தட்டிக் கொண்டார்.

‘அதானே பார்த்தேன் .. ரங்காச்சாரி தம்பி பிள்ளை ஆராவமுதன் இருக்கானே சிங்காரவேலன் தெருவிலே … அந்த வீட்டு மாடியில்தானே ரூம் ? கூட ரெண்டு திருக்கோஷ்டியூர் பிள்ளைகள் உண்டோ இல்லையோ ? லெதர் பாக்டரியிலே வேலையா இருக்கிற பிள்ளைகள். நான் அங்கே வந்திருக்கேன். தொடர்ந்து நாலுவாரம் அனுமார் ஆராதனையை ரெண்டு புள்ளாண்டானும் சேர்ந்து நடத்தி வச்சது .. நீ கூட எங்கியோ, மதுரைக்கோ என்னமோ கேம்ப் போகப் போறதாச் சொல்லிக் கிளம்பிப் போனே .. பிரசாதம் கொண்டு போனபோது கூடத் திரும்பி வந்திருக்கலை .. ‘

மெல்ல ஒரு பிம்பம் உருவாகிக் கொண்டிருந்தது. அனுமார் பூஜை. லாட்ஜுகளில் இருக்கிறவர்களிடம் அதற்கான வசூல்.. தெரிந்த முகங்களை மனதில் சுருட்டி எடுத்து வந்து இந்த ஜனசமுத்திரத்தில் எதிர்ப்படுகிறவர்கள் மேல் ஒட்டவைத்துப் பார்க்கிறபோது, அது உதிர உதிரப் பொருட்படுத்தாது வேறு வேறு அடையாளங்களைத் தேடி ..

‘எனக்கு ஒட்டவில்லை ‘ என்று சொல்லலமா ? வேண்டாம். அடுத்த முகம் கைவசம் இருக்கக் கூடும்.

‘உங்க அப்பா கூடத் தென்காசிப் பக்கம் வக்கீல் இல்லையோ ? ‘

இன்னும் தெளிவடைகிற பிம்பம். கோர்ட் சூழ்நிலை வேறு இவர் இருப்பிலும் நினைப்பிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. முன்சீப், நாசர், சிரஸ்தார் என்று வினோதமான பதவிப் பெயர்களுடன், சகலவிதமான கோர்ட் உத்யோகஸ்தர்களும் பேச்சில் வந்து போகிறார்கள்.

‘சார் கோர்ட் வேலையோ ? ‘

என்னமோ அவரிடம் ஒரு பரிவு தோன்றக் கேட்டான். இன்னும் கொஞ்சதூரம் நடந்தால் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் வந்துவிடும். அதுவரைக்குமாவது இவருக்கு ஏதாவது வகையில் ஆசுவாசத்தைத் தர வேண்டும் என்று தோன்றியது.

‘டக்குனு கண்டுபிடிச்சுட்டியேப்பா .. உன் அடையாளம் தான் சட்டுனு புரிபடாம மனசுலேயெ நின்னது .. தொண்டையிலே எலுமிச்சம்பழ மிட்டாய் மாதிரி மாட்டிண்டு .. ‘

‘எந்தக் கோவில்லே பூஜை செய்யறீங்க சார் ? ‘

‘கோயில் இல்லேப்பா .. எல்லாம் நம்மத்துலே தான். பூர்வீகத்திலே திருக்கோளூர்லேயிருந்து ஒரு மகான் கொடுத்துட்டுப் போனது .. திருக்கோளூர் கேட்டிருப்பியே ..உண்ணும் சோறும், பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்னு பாசுரம் .. சடகோபனுக்கு எப்பவும் முதலடிதான் ஞாபகம் வரும் .. நான்தான் பூர்த்தி பண்ணுவேன் .. திருக்கோளூர்லெருந்து வந்த ரூபம் .. சரபோஜி காலத்துது… மெழுகு சீலை மாதிரிப் பட்டுத்துணி .. இன்னிக்குப் பூராப் பாத்துண்டே இருக்கலாம் .. சதுர்புஜ அனுமார். ..அனுமார்னா பட்டாபிஷேகத்துலே பவ்யமா, ஒரு ஓரமாச் சேவிச்சுண்டு நிக்கறவர் இலே .. கம்பீரமான ரூபம் .. காலை இப்படிப் பரப்பி .. இந்த உலகமே தூசுங்கற பார்வையோட கையக் கட்டிண்டு இப்படி .. ‘

திடாரென்று நடுத்தெருவில் குடையை ஊன்றிக் கால்பரப்பி நிற்க எத்தனித்து, இடுப்பிலிருந்து நழுவுகிற வேஷ்டியைச் சரிசெய்ய வேண்டி சமநிலைக்கு வந்தார்.

‘ரொம்ப நாள் பூஜை ஒண்ணும் பண்ணலை .. கோர்ட் அமீனாவுக்கு ஜப்திக்குப் போய் நிக்கவே நேரம் சரியா இருக்கும் போது, பூஜை புனஸ்காரத்துக்கு ஏது நேரம் ? நாராயணசாமி முதலியார்னு சப் ஜட்ஜ் இருந்தார் தெரியுமா ? புலியூர்க் குறிச்சிக்காரர் .. உங்க ஊர்ப்பக்கம்தன் ‘

ஊரும் பெயரும் அடையாளமும் திடமாகக் கொடுத்து அவனை இன்னொருத்தனாக ஸ்தாபிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வலுவடைந்து கொண்டிருப்பதாகப்பட்டது.

‘கோர்ட் வெகேஷன்லே இருக்கிறபோது, சாயந்திரம் தவறாமே கிளப்பிலே பாட்மிண்டன் விளையாடப் போவார் .. மனுஷர் உல்லாசப் பிரியர் .. சங்கீதம்னா உசிரு .. விஷய ஞானம் அபாரம் .. கமகப் பிரியாவை சமத்துக்கு அரை இடம் தள்ளி எடுத்தார்னு வித்வானோட சண்டைக்கே போய்ட்டார்னாப் பாத்துக்கோயேன் .. வக்கீல் ராகவாச்சாரி தமையனர்தான் வித்வான் .. ராகவாசாரி இவருக்கு ஆப்தர்தான் .. ஆனா என்ன ? கால் எடம் முந்தி எடுக்கறதை அரை எடம் தள்ளி எடுத்தாத் தப்பு தப்புதானே ? ‘

யாரோ எதையோ முன்னே பின்னே எடுத்துவிட்டுப் போகட்டும். பஸ் ஸ்டாப் எப்போது வரும் ?

‘நானே தானே பேசிண்டு வேஎன் .. கேக்கறியோ ? சடகோபன் இப்படித்தான் பேசாம வருவான். கடைசியிலே விஷயம் என்னனு என்னையே திரும்பக் கேட்பான். அவனுக்கு என்னோட கூட வீட்டுக்கு வரணும்.. அனுமாருக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிட்டு, வைதேகி கூடப் பேசணும் .. அவ்வளவுதான் . எனக்கு மட்டும் இஷ்டம் இல்லையா என்ன ? பகவான் அவனை மாப்பிள்ளை ஆக்கிக்கறதுக்குக் கண் காட்டலியே … ‘

சடகோபன் கொஞ்சம் நெருங்கி வ்ந்துகொண்டிருந்தான்.

‘நான் வந்து .. அவசரமாப் போகணும் .. ‘

‘நான் மட்டும் என்ன இங்கே உலாத்திண்டா இருக்கப் போறேன் ? பனி விழறதே ? ‘

விடுகிற மாதிரி இல்லை.

‘பாதியிலே விட்டேனே … சாயந்திரம் கிளப்புக்குப் போறபோது வீட்டு வாசல்லே வச்சு கார் நின்னு போச்சு .. யாருக்கு .. ? ‘

‘கிருஷ்ணசாமி முதலியார்.. ‘

‘கிருஷ்ணசாமி இல்லேப்பா .. நாராயணசாமி முதலியார். கேஎன் அப்படான்னு இனிஷியல்லேதான் பிரபலம். நான் வாசல்லே வேஷ்டியைத் திரிச்சு மூக்கிலே விட்டுத் தும்மிண்டிருந்தேன் .. தலையிலே ஒரே கொடச்சல் .. வந்த மனுஷர் அரைக் கட்டுலே நிஜாரும், கையிலே பந்து மட்டையுமா முன்னாலே நிற்கறார் .. எனக்குக் கையும் ஓடலை .. காலும் ஓடலை .. வாங்கோன்னு சொல்றதுக்கு முன்னாடி தடதடன்னு உள்ளே நுழைஞ்சவர் கண்லே கூடத்துலே மாட்டியிருந்த அனுமார்தான் பட்டார் .. எப்பேர்க்கொத்த ரூபம் ஓய் .. இப்படிப் புழுதி அடைய விட்டிருக்கீரே .. பூஜை ஏதாவது பண்ணறீரான்னார். என் ஜீ ஓ வருமானத்துலே வயத்தக் கழுவறதே உம்பாடு எம்பாடு .. பூஜைக்கு எங்கே ஸ்வாமி போவேன்னேன். நான் தர்றேன்யா.. வாரா வாரம் சனிக்கிழமை பண்ணு .. தேங்காய், பழம், அன்னம் நேவித்தியம் போறும்ன்னார். சரின்னு அப்ப ஆரம்பிச்சதுதான் .. விட முடியலே .. நடுவிலே ஒய்ப் உடம்பு முடியாமப் போனபோது ரெண்டு மாசம் நிறுத்தி வச்சிருந்தேன். இருமி இருமிப் பாவம் உசிர விட்டா .. இந்த ஆராதனையிலே இத்தணுண்டு எனக்குப் புண்ணியம்னு விதிச்சிருந்தாலும் அதெல்லாம் அவளைப் பகவான் கிட்டே நல்லபடியாச் சேத்துடும் .. இன்னமும் நான் பூஜை பண்ணிண்டு இருக்கேன் .. வைதேகியும் காத்திண்டு இருக்கா .. சினிமாகூடப் பேர்வச்சு எடுத்துட்டான் பாத்தியோ .. சடகோபன் தான் சொல்வான் .. பகவான் இன்னும் தான் மனசு வைக்கப் போறான்.. ‘

அவர் குரல் உடைந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் மெளனமாக வந்தார். தான் சம்பந்தப்படாத சோகம் கூடத் தன்னைப் பாதிப்பதாகப் பட அவனும் மெளனமாக வந்தான்.

‘இப்ப எனக்கு எல்லாம் இந்த அனுமார் ஆராதனை தான். தினம் ஒருத்தராவது உபயதாரர் வேணும்னு அலைஞ்சு திரிஞ்சு எங்கேயெல்லாமோ ஏறி இறங்கி .. யார் யாரையோ பார்த்து .. பகவானைப் பட்டினி போட முடியுமா ? ‘

‘முடியதுதான்.. ‘ அவன் குரல் அவனுக்கே ஆச்சரியமாக ஒலித்தது. இன்னும் பத்து அடி நடந்தால் பஸ் நிறுத்தம் தான்.

திடாரென்று அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டார். கையை விடுவித்துக் கொள்ள அவன் செய்த பலகீனமான முயற்சிகளை லட்சியம் செய்யவில்லை.

‘இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராட்ட எப்படி ? ‘

‘இல்லே சார் .. அப்புறமா ஒரு நாள் வரேன் .. இப்பப் பஸ் போயிடும்.. ‘

‘அஞ்சே நிமிஷம் தான். வந்தா மனசு சந்தோஷப்படும் எனக்கு. ‘

கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு பக்கத்தில் ஒரு இருட்டுச் சந்தில் நுழைந்தார்.

‘இங்கேதான் .. வலப்பக்கம் மூணாவது வீடு .. ‘

வாசலில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டு கடைபோட்டு ஒரு தையல்காரர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தைத்துக் கொண்டிருந்தார்.

‘இந்த ஓரமா இருக்கு வாசக் கதவு … பாத்து வாப்பா .. கரண்ட் ஃபியூஸைப் பிடுங்கிண்டு போய் நாலு மாசமாறது .. ‘

யாரோ அவசரமாக எழுந்திருக்கிற சத்தம். உள்ளே அரிக்கேன் வெளிச்சம் பெரிதாக, சுவரில் புகை படிந்து கோடு கிளப்புகிறது.

அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது இருக்கும். இந்த நிமிடத்தில் எப்படிச் செயல்படுவது என்று நிச்சயம் இல்லாதவளாக நின்றாள்.

‘வைதேகி .. சார் ஆழ்வார் திருநகரிக்காரர். சடகோபனுக்கு ஆப்தர். ரொம்ப நாள் கழிச்சுக் கண்ணுலே பட்டார். ஒரு நடை வந்துட்டுப் போகலாமேன்னு கூட்டிண்டு வந்தேன். சொம்பிலே தண்ணி எடுத்துண்டு வாம்மா .. கொஞ்சம் போதும். .. ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக் கால் அலம்பிக்கறோம் .. சுவாமிக்கு வெத்தலை மாலை போட்டியோ ? பாட்டு வாத்தியார் பொண்ணு கொண்டு வந்து தந்தாளோ மத்யானம் ? ‘

அந்தப் பெண் தண்ணீர் கொண்டு வந்தாள்.

‘சாமிகளே.. ‘

வாசலிலிருந்து சத்தம்.

‘டெய்லர் கூப்பிடறான். நீ அலம்பிக்கோ .. இதோ வர்றேன் .. ‘

வாசலுக்குப் போனார்.

‘சடகோபனுக்கு நீங்க வேண்டியவரா ? ‘

அந்தப் பெண் இவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள். அரிக்கேன் விளக்கை ஜன்னல் பக்கம் மாட்டும்போது அங்கங்கே வெள்ளி மின்னிய முடிக்கற்றைகள்.

‘வந்து .. நான் இங்கே ஒருத்தரைப் பார்க்க வந்தேன். இவர் சொல்லச் சொல்லக் கேட்காம .. ‘

‘நெனச்சேன் .. ரெண்டு வருஷமா இப்படித்தான் ஆறது. திடார்னு யாரையாவது கூட்டிண்டு வந்து நிறுத்திடறார். எல்லோரும் சடகோபனுக்கு வேண்டியவான்னு திடமான நம்பிக்கை .. பாவம் உங்களுக்கும் கஷ்டம். பெரியவர் கூப்பிடறாரேன்னு தட்ட முடியாமே உங்க மாதிரி வர்றாவா நிறையப் பேர் .. சிலர் திட்டிட்டுப் போறதும் உண்டு. இவருக்கு எதுவுமே மனசுலே நிக்கறதே இல்லை. அனுமார் ஆராதனை .. அதான் முக்கியம். யாராவது எப்பவாவது ஏதாவது கொடுப்பா.. நீங்க ஏதாவது கொடுத்தேளா ? ஏமாத்து வேலைன்னோ கவுரவப் பிச்சைன்னோ நினைக்க வேண்டம். பூஜை பண்ணி, அந்தப் பிரசாதம் மட்டும் சிலநாள் ஆகாரமாறது உண்டு ‘

அவள் குரலில் ஒரு சோகத்தை உணர்ந்து தாங்கிக் கொண்ட, அதை அந்நியர் முன் வெளிப்படுத்தத் தயங்காத தொனி.

‘நான் போறேம்மா .. அவர் வர்றதுக்குள்ளே கிளம்பறேன் .. ‘

‘வரவர ஞாபகம் அதிகமாத் தவறிப் போறது. பென்ஷன் வாங்கிண்டு வரேன்னு கிளம்பி மணிக்கணக்கா அந்த மாவுமில் வாசல்லேயே நின்னுண்டு இருந்தாராம். சடகோபன் போய்ப் பத்து வருஷம் ஆறது .. இன்னும் அங்கேயே இருக்கறதா நினைப்பு .. டெய்லர் தான் பார்த்துக் கூட்டிண்டு வந்தார் .. ‘

‘இப்பக்கூட அங்கேதான் என்னைப் பார்த்தார் ‘

‘நீங்க அந்த லாட்ஜிலே இருக்கப் பட்டவரா ? ‘

‘இல்லே, வேறே எடம். இங்கே இல்லை. ‘

அறையை நோட்டம் இட்டான். வடகம் பிழிந்து உலர்த்திய பிளாஸ்டிக் ஷீட்டுகள் ஒரு மூலையில் அடுக்கியிருந்தது கண்ணில் பட்டது.

‘இதெல்லாம் வீட்டு உபயோகத்துக்காகவா ? ‘

‘விலைக்குக் கொடுக்கறதுக்குத் தான். ஒருத்தர் மூலமா பேங்கிலே லோன் கெடச்சது. என்னமோ நம்பிக்கையிலே ஆரம்பிச்சேன்.. போன மாசம்தான் ..இன்னும் பைசா அடைக்கலே … கரண்ட்காரன் ஃப்யூஸைப் பிடுங்கிண்டு போனமாதிரி பேங்க்லே வடாத்தை எடுத்துண்டு போவாளோ என்னமோ… ‘

‘எங்க கடையிலே தொடர்ந்து சப்ளை செய்ய முடியுமா ? ‘

அவள் இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது முகத்தில் சின்ன சந்தோஷமாகப் பிரதிபலித்தது.

‘கடை அட்ரஸைக் கொடுங்கோ … எப்போ வரணும் .. ‘

விலாசம் சொன்னான். ‘நாளைக்குக் காலையிலே வாங்க .. ‘

‘வைதேகி.. ‘

அவர்தான்.

‘சடகோபன் பிரண்ட் முலமா பகவான் நாளைக்கு ஆராதனைக்கு வழி பண்ணுங்கிறார். நோட்புக்கிலே பேர் வாங்கிக்கோம்மா. சங்கோஜப்படாம உள்ளே வாப்பா .. வந்து தரிசனம் பண்ணிக்கோ .. ‘

அவரே ஜன்னலுக்கு மேலே இருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தார். விளக்குப் பக்கமாக நின்று பக்கத்தைப் புரட்டிக் கையில் கொடுத்தார்.

நாலு மாதத்துக்கு முந்திய தேதியில் யாரோ எழுதி இருந்தார்கள்.

‘ரொம்ப பேர் கொடுத்துட்டு எழுதறதே இல்லை .. ஆனாலும் நான் தேடிண்டு போய்ப் பிரசாதம் கொடுத்துடுவேன் .. ‘

‘சாமிகளே.. ‘

திரும்பவும் வாசலில் சத்தம்.

‘டெய்லர்தான். விளக்கு வச்சதுக்கு அப்புறம் வாடகைப் பணத்தைத் தரலாமான்னான். ஆபத்துக்குத் தோஷம் இல்லை .. எனக்கு எப்பவும் ஆபத்துதான்.. கொடுன்னேன். வீட்டிலே போய் எடுத்துண்டு வர்றேன்னான். வீடு பின் தெருவிலேதான். .. இவனாவது, போய்த் திரும்பி வர்றதாவதுன்னு நினைச்சேன் .. கொண்டே வந்துட்டான் .. பாரு .. மனுஷாளுக்கு எவ்வளவு சீக்கிரம் நினைக்கிறது பிசகாயிடறது .. நீ எழுதுப்பா .. நான் இதோ வர்றேன் .. ‘

இருட்டில் மெல்ல வாசலுக்குப் போனார்.

அந்தப் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து அந்தப் புத்தகத்தில் வைத்து மூடி அவளிடம் கொடுத்து விட்டுக் கிளம்பினான். பஸ் இருக்கும் என்று தோன்றவில்லை. நிறைய நடக்க வேண்டி இருக்கலாம். இந்தப் பெண் நாளை கடைக்கு வர வேண்டும். லேகியக்காரரும் தான். இந்த அலைச்சலுக்கு ஒரு அர்த்தம் ஏற்பட வேண்டும் ..

‘பேர் எழுதலியே.. ‘

‘எழுதிக்குங்க.. ‘

‘என்னன்னு ? ‘

‘சடகோபன்னே எழுதிக்குங்களேன்.. ‘ என்றான் ராஜு என்ற டேவிட் ஆனந்தராஜ்.

( ‘ஆதம்பூர்க்காரர்கள் ‘ தொகுப்பிலிருந்து –)

ஆழ்வார் மேடை நாடகமாக ஷ்ரத்தா தியேட்டர்ஸ் குழுவினரால் அரங்கேற்றப்பட்டது.

நாடகத்தில் ஆழ்வாராக ஒப்பற்ற மேடை நாடகக் கலைஞர் திரு டி,டிஎஸ் T D சுந்தரராஜன்  அவர்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன