சகர் – சிறுகதை

சகர் – சிறுகதை

சகர்

 

எதிர் ஃப்ளாட் என்று அந்தப் பெண் சொல்லி முடிக்கும் முன்பே வாசல் கதவு மூடி விட்டது.  சலிப்பு. ஆபீசுக்குக் கிளம்பும் அவசரம். சமையல்கட்டில் கத்தரிக்காய் வதக்கல் கரிந்து போகிற பயம். இதுவரைக்கும் எத்தனை பேர் கதவைத் தட்டித் திறந்து கருகின வதக்கலை குப்பையில் போட வேண்டி வந்ததோ.

 

எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால் வருகிறவர்கள் குழப்பமடைகிறதாகத் தெரிகிறது. இதைச் சொல்ல இன்னொரு முறை. வேண்டாம். அந்தப் பெண்ணுக்கு ஆபீஸ் போகமுடியாமல் போய்விடலாம்.

 

குணா எதிர் ப்ளாட்டில் இரண்டு தடவை மணியடித்தான். சத்தம் கேட்டு யாருமே வருகிறது மாதிரி தெரியவில்லை. உள்ளே தயக்கத்தோடு நுழைந்து சார் என்று கூப்பிட்டான். கதவை கார்ச் சாவியால் தட்டினான். மேடம் என்று அடுத்த விளி. பதிலே இல்லை. ஏதோ மெஷின் உள்ளே ஓடுகிற ஹம்ம்ம் சத்தம் மட்டும் விட்டு விட்டு வந்தது. ஆக ஆள் உண்டு. வந்து என்னன்னு கேட்க சோம்பல் படுகிறார்கள்.

 

உள்ளறையை மறைத்துத் தொங்கிக் கொண்டிருந்த துணிப் படுதாவில் உஷ் என்று உதட்டில் விரலை வைத்து எச்சரிக்கும் குழந்தையை ஒதுக்கி குணா எட்டிப் பார்க்க, வரிசையாக அறைகள். வலது பக்கத்தில் ஆறு, இடது பக்கம் இன்னொரு ஆறு.  அடுக்குமாடிக் குடித்தனத்தில் இவ்வளவு பெரிய ப்ளாட் இருப்பது அவனுக்குப் புதுசு. கட்டிடத்தின் கோடி வரை ஒற்றை ப்ளாட் நீளவாக்கில் விரிந்து இருக்கிறது. சாதாரணமாக மூணு தனித்தனிக் குடித்தனங்கள் இருக்கும் இடம்.

 

குணா நீள நடந்தான். என்னமோ தோன்ற விருட்டென்று திரும்ப வாசலுக்கு வந்து செருப்பை அங்கே விட்டு வெறுங்காலோடு மறுபடி உள்ளே போனான். ஜில்லென்று இருந்த தரையில் ஈரப்பசை காலை நனைத்தது. புதுசாக கழுவித் துடைத்தது.

 

ஒவ்வொரு அறையாக மறைத்த துணித் திரையில் சின்ன உயரமும் ஆகிருதியுமாக வெங்கடாசலபதி. வலது பக்கம் மூன்றாம் அறையில் அவர் விலகி இருக்க உள்ளே பெர்மூடா போட்ட கிழவர் ஹிந்திப் பத்திரிகையை மடியில் விரித்தபடி உட்கார்ந்தபடிக்கே தூங்கிக் கொண்டிருந்தார். சாய்வு நாற்காலிக்குப் பக்கத்து டிவியில் சத்தமில்லாமல் ஒரு சாமுராய் வாள் சுழற்றினான். எதிரில் பீங்கான் கிண்ணியில் கொசகொசவென ஆறிப்போன ஏதோ ஆகாரம்.

 

இவரிடம்? வேண்டாம். எழுப்பி சிரமப் படுத்தினாலும் மொழி புரியாது. வேங்கட வரதன். அவர் அகராதியில் அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. இரண்டு வரிசையிலுமாக இன்னும் ஆறு அறை பாக்கி உண்டு. அந்தக் கோடிக்குப் போவதற்குள் யாராவது வந்து நின்று என்ன என்று கேட்கலாம்.

 

வெங்கட வரதன் வேணும். ஒரு சவ சம்ஸ்காரத்துக்குக் கூட்டிப் போய்த் திரும்பக் கொண்டு வந்து விட, குணாவை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஏர் கண்டிஷன் செய்த கார். படுத்துக் கொள்ளக் கூட சவுகரியம் உண்டு. பூ மாதிரி பத்திரமாக ஏறிப் போய் ஒரு மணி நேரமோ இரண்டு மணியோ கழிந்து திரும்பி விடலாம்.

 

இடது கோடி கடைசி அறையிலிருந்து கையில் சிந்தாமல் சிதறாமல் பெட்-பான் ஒன்றைத் தூக்கி வந்த பெண்ணிடம் இதைத்தான் சொன்னான்.

 

விசிட்டர் எல்லாம் வெளியே உக்காரணும். வாசல்லே அறிவிப்பு பார்க்கலியா?

 

வெள்ளை அப்ரன் அணிந்திருந்த அவள் இவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்த்தால் கவனம் தவறி, பாத்திரத்தில் வடிந்திருந்த கழிவு நீர் உடுப்பையும் கையையும் நனைத்துவிடலாம். எதிர் ப்ளாட் பெண்ணுக்கு கத்திரிக்காய் வதக்கல் தீய்ந்து போகிற மாதிரி இங்கேயும் அசம்பாவிதம் நிகழ நிறைய சாத்தியம். இவளுக்கு சம்பளம் கிடைக்கக் கூடும். கத்திரிக்காய் கறி வைக்க யாரும் வீட்டுப் பெண்களுக்கு காசு தருவதில்லை.

 

குணா வாசலுக்கு மறுபடி நடந்தபோது அங்கே சீரான வெள்ளை சேலையும், கருப்பு நிற முழுக்கை ரவிக்கையும் அணிந்த ஒரு பெண் மொபைல் தொலைபேசியில் பேசியபடி வந்து கொண்டிருந்தாள். அவள் எந்த நிமிடத்திலும் பறக்கத் தயாராக விமானப் பணிப்பெண் போல் தலை சீவி முடிந்திருந்தாள்.

 

பகவான் ஜெரியார்டிக் கேர். யா, யா, யூ ஆர் ரைட் இன் அ வே. ஜெரியார்டிக் கேர் அவுட்ஸோர்ஸிங். அல்லது, சமூக சேவை. ஓகே, விநோதமில்லாத கலவை.

 

அவள் அடக்கிச் சிரித்தபோது அசம்பாவிதமாக குணா முன்னால் போய் நின்றான்.

 

யார் வேணும்?

 

சட்டென்று தொலைபேசியில் பேசுவதைத் துண்டித்தபடி கேட்டாள்.

 

வெங்கட வரதன்.

 

காலையிலே ஆறு மணிக்கே வருவீங்கன்னு சொன்னாங்களே?

 

லேட் ஆயிடுச்சு. ஹெர்சே கிடைக்காம கொஞ்சம் அலைஞ்சு.

 

என்ன கிடைக்காமே?

 

அமரர் ஊர்தி.

 

சரி, இப்படி உக்காருங்க. நர்ஸ் கூட்டி வருவா. பிரேக்பாஸ்ட் முடிச்சாச்சு. எதுவும் சாப்பிடத் தர வேணாம். காபி டீ கூட.  மெடிகேஷன்லே இருக்காரு. போன ரெண்டு மணி நேரத்துலே திரும்ப கொண்டு வந்து விட்டுடணும். புரியறதா?

 

வெங்கட வரதன் எப்படி இருப்பார் என்று கூட குணாவுக்குத் தெரியாது. அவரை இரண்டு மணி நேரத்துக்கு மேல் தன் கூட வைத்துக் கொள்ள முடியாது. அது மட்டும் இப்போது தெரிய வந்துள்ளது. வைத்துக் கொண்டு என்ன செய்ய?

 

ஹெர்ஸ் பக்கம் கூட்டிப் போகாம இருந்தா நல்லது. சட்டுனு இன்ஃபெக்ட் ஆகிடும்.

 

பறக்கத் தயாரான பெண் மேஜை அருகே ஒரு மணியை அழுத்த அப்ரன்காரி உள்ளே இருந்து வந்தாள். அவள் கையில் அல்லது அப்ரனில் டெட்டால் வாடை கடந்து போகும்போது குணாவில் மூக்கைக் குத்தியது.

 

எப்படி மரணம்?

 

மொபைலை திரும்ப எடுத்த பெண் குணாவைக் கேட்டாள்.

 

அவனுக்குத் தெரியவில்லை.

 

நேற்றைக்கு சாயந்திரம் யாரோ வந்து ஏற்பாடு செஞ்சு.

 

ஓ, இதுவும் அவுட் சோர்ஸிங் தானா?

 

அவள் குரலில் ஏதோ நிம்மதி தெரிந்த மாதிரி இருந்தது குணாவுக்கு.

 

நேராப் பார்த்து நடங்க தாத்தா.

 

அப்ரன் பெண் கைப்பிடியில் தாங்கலாக வயசான ஒருத்தரைக் உள்ளே இருந்து கூட்டி வந்தாள். எழுபது வயது அல்லது அதுக்கும் மேல் காணும். நீலக் கட்டம் பதித்த தொளதொள பைஜாமா, குர்த்தா அணிந்த ஒடிசலான தேகவாகுள்ள மனுஷ்யர். உசரம் அஞ்சரை அடிக்கும் கீழே தான் இருக்கும்.

 

ஹரிவராசனம் பாடுகிற சின்ன டேப் ரிக்கார்டரை கையில் தூக்கிக் கொண்டு தட்டுத்தடுமாறி வந்தார் அவர். குணா எழுந்து நின்றான். அவர் குணாவிடம் டேப் ரிக்கார்டரை நீட்டினார்.

 

கேக்க மாட்டேங்கறது. இதை எடுத்துப் போய்.

 

அவர் சொல்லி முடிப்பதற்கு முன் அப்ரன் பெண் அதை வாங்கினாள்.

 

கேக்குது தாத்தா.

 

ஒலியை அதிகமாக்கினாள்.

 

ஏசுதாஸின் குரல் மட்டும் இழைந்து கொண்டிருந்த உலகத்தில் அவர்கள் எல்லோரும்  சம்பந்தமே இல்லாமல் விளிம்பில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

 

கேக்கலே.

 

பெரியவர் குணாவிடம் திரும்ப சொல்ல, டேப் ரிக்கார்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்து அப்ரன் பெண் கையில் வைத்துக் கொண்டாள்.

 

வேறே புதுசா வாங்கணும். ராஜா பணம் அனுப்பியிருக்கான்.

 

தாத்தா, இவரோட போய்ட்டு வந்துடுங்கோ. பக்கத்திலே தான்.

 

அப்ரன் பெண் வாசலுக்கு பெரியவரை அழைத்துப் போகும்போது சொன்னாள்.

 

கடை திறந்திருக்குமா?

 

அவர் குணாவை விசாரித்தார். தலையசைத்தான் அவன். கார்க் கதவைத் திறந்து அவர் பின் சீட்டில் ஏறக் காத்துக் கொண்டிருந்தான்.

 

உக்காருங்கோ தாத்தா.

 

அப்ரன் பெண் கார் உள்ளே கையைக் காட்டினாள்.  அவர் உள்ளே குனிந்து பார்த்தார். பெரிய சத்தத்தோடு வாயு பிரிந்தார்.

 

அப்ரன் பெண் சிரிப்பை அடக்கியபடி குணாவைப் பார்க்காமல் அவரை மெல்ல சீட்டில் அமர்த்தினாள்.

 

ரெண்டு மணி நேரம் தான். மேடம் சொல்லியிருப்பாங்களே. பத்திரம்.

 

குணா ஏதும் பேசாமல் வண்டியைக் கிளப்பினான். கார் முன்னால் ஊர்ந்து தெருத் திரும்பி போக்குவரத்து நெரிசலில் கலந்தது.

 

ஹரிவராசனம் போடு.

 

பின்னாலே இருந்து பெரியவர் குரல்.

 

ஆடியோ சிஸ்டம் இல்லே.

 

என்ன இல்லே?

 

ப்ளேயர். பாட்டு.

 

ராஜா வாங்கி வச்சானே? ப்ளூபங்கெட். ரிச்சி ஸ்ட்ரீட்லே. தேதி டிசம்பர் டெண்த்.

 

ரிச்சி ஸ்ட்ரீட்? குணாவுக்குத் தெரிந்து இந்த ஊரில் அப்படி ஒரு தெரு இல்லை.

 

நானும் போயிருந்தேன் வாங்கறதுக்கு. அவனை ஒரு இடத்துக்கும் தனியா அனுப்ப முடியாது. அனுபவம் போறாது. பச்சைக் குழந்தை மாதிரி.

 

ஏசி அதிகமா இருக்கா?

 

குணா கேட்டான். ஏதாவது பேச வேண்டி இருக்கிறது.

 

என்ன அதிகமா இருக்கா?

 

ஏசி. குளிர்.

 

ஊட்டியிலே குளிராம என்ன பண்ணும்?

 

இது ஊட்டியில்லை என்பதும் அவருக்குத் தேவையில்லாத தகவல்.

 

சிக்னலில் சிவப்பு விழ கார் நின்றது.

 

ராஜா பிள்ளை ப்ரைமரி ஸ்கூல் எக்ஸ்கர்ஷன்னு இங்கே வந்துட்டான்.  ஸ்வெட்டர் எடுத்து வைக்காம அவன் அம்மா அனுப்பிச்சுட்டா. என்னமோ கைமறதி பாவம்.

 

பின்னால் இருந்த கார் ஹாரன் அடித்தது. சிக்னல் விழுந்திருந்தது. குணா பொறுக்கச் சொல்லி கைகாட்டி விட்டு காரை முன்னால் நகர்த்தினான்.

 

ஆபீசுக்கு லீவு சொன்னான். கான்வாஸ் பையிலே ஸ்வெட்டரும் மப்ளருமா எடுத்துண்டான். இவனும் எக்ஸ்பிரஸ் பஸ்ஸிலே ராத்திரியே ஊட்டிக்குக் அடிச்சுப் பிடிச்சுக் கிளம்பிட்டான். இப்படியுமா ஒரு பிள்ளைப் பைத்தியம்.

 

அவர் சிரித்தார்.

 

ஞாபகம் இருக்கா? நீயும் நானும் இந்தக் கார்லே தானே ராஜா பின்னாலேயே ஊட்டிக்கு ஓடினது.

 

இந்தக் கார்? போன வருடம் தான் குணா ஓட்ட ஆரம்பித்தது. அவ்வப்போது பழுது வந்தாலும் பெரிசாகத் தொந்தரவு தராத வண்டி.

 

நீங்க ஏன் அப்பா வந்தீங்கன்னு கேக்கறான் அசடு. அவனுக்கு அவன் குழந்தை முக்கியம். எனக்கு என் பிள்ளை முக்கியம். என்ன சொல்றே? மங்கி கேப்பை மாட்டி விட்டா குரங்குக் குட்டி மாதிரி சிரிக்கறான் படவா.

 

குரங்குக் குட்டி எப்படி சிரிக்கும்?

 

சட்டென்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் குணா.

 

குரங்கு இல்லே. ராஜா. என் பிள்ளை.

 

பெரியவர் சட்டென்று பேச்சை நிறுத்தினார். அவருக்கு கோபம் என்று குரல் சொன்னது. அப்புறம் பின் சீட்டில் இருந்து பேச்சு சத்தம் கேட்கவில்லை.

 

அப்பார்ட்மெண்ட் வாசலில் கார் நின்றபோது அவர் சீட்டில் குறுக்கிப் படுத்து தூங்கிப் போயிருந்தார். எழுப்பி அவரைக் கைத்தாங்கலாக குணா அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். லிப்ட் மேலே போயிருந்தது.

 

மேலே போனதும் கதவை அடைக்கணும்னு தெரியாதா?

 

யாரோ மாடியைப் பார்த்து உத்தேசமாக சத்தம் போட லிப்ட் திரும்ப கீழே வந்தது.

 

ஸ்வெட்டர் கடையா? காஷ்மிலான் இருக்கும்.  ராஜா நெக் சைஸ் தேர்ட்டி நைன்.

 

குணாவோடு பெரியவர் லிப்டில்  போகும்போது சொல்லிக் கொண்டே வந்தார்.

 

ஏழாவது மாடி. ப்ளாட் வாசல். வாசலில் எதிர் ப்ளாட் கதவு வரை அடைத்தபடி செருப்பும் ஷூவுமாகக் குவிந்து கிடந்தது.

 

ரொம்பக் கூட்டமா இருக்கு, இன்னொரு நாளைக்கு வந்து வாங்கிக்கலாம்.

 

பெரியவர் சொன்னபோது அவருக்கு வழி விட்டு நாலைந்து பேர் சைகையில் ஏதோ பேசிக் கொண்டதை குணா கவனித்தான்.

 

தாத்தா, ஆமா, இவர் இருக்க இவன் போய். கஷ்டம். விதிங்கறது இதான்.

 

கூடத்தில் ஐஸ் கட்டி மேல் படுக்க வைத்திருந்தார்கள். ஐஸ் உருகி கூடத்தில் தண்ணீர் வடிந்து கொண்டிருந்ததை வைர மூக்குத்தி போட்ட ஒரு மத்திய வயசுக்காரி துணியில் ஒற்றி பக்கெட்டில் பிழிந்து கொண்டிருந்தாள். கூடவே இன்னொரு மாமி வெற்று பக்கெட்டோடு நின்றாள்.

 

குணா படுத்திருந்தவனைப் பார்த்தான். அவனை விட சின்ன வயசு. காலேஜ் படிக்கிற பிள்ளை மாதிரி இருந்தான். முகம் கோணலாக பாதி வரைக்கும் துணியால் மூடி இருந்தது.

 

மோட்டார் சைக்கிள் வேணும்னு அப்படி ஒரு அடம். தேவகி என்ன சொல்லியும் கேக்க மாட்டேனுட்டான். இப்படி புது பைக் வாங்கி ஒரேயடியாப் போய்ச் சேரணும்னு இருந்தா அவ தான் என்ன செய்வா, யார் தான் என்ன செய்ய முடியும்?

 

பக்கெட் மாமி மற்றவளிடம் சொல்லியபடி ஈரத் துணியைக் கொடுத்து இன்னொரு உலர்ந்த துணி உள்ளே இருந்து தேடிப் பார்த்துக் கொண்டு வரச் சொன்னாள்.

 

தேவகியை பெட் ரூம்லே கதவைச் சாத்தி வச்சிருக்கோம்.

 

ஈரத்துணி மாமி எதிரே பார்த்தபடி சொன்னாள். அங்கே இரண்டு சோபா நிறைய யாராரோ உட்கார்ந்து காப்பி குடித்துக் கொண்டு குணாவையும் பெரியவரையும் பார்த்தபடி இருந்தார்கள். சுவர் ஓரமாக ஏழெட்டு பேர் நின்றிருந்தார்கள்.

 

தாத்தா வந்திருக்கார். எழுப்பிடலாமே. ஒரு நிமிஷம் தான். இவ்வளவு தூரம் வந்துட்டு.

 

செடேட்டிவ் கொடுத்து தூங்க வச்சிருக்கு.

 

பரவாயில்லே, எழுப்புங்கோ.

 

சோபாவிலிருந்து இரண்டு பேர் காப்பித் தம்ளரைத் தரையில் வைத்து விட்டு உள்ளே போனார்கள்.

 

காப்பி இருக்கா?

 

பெரியவர் குணாவைக் கேட்டார்.

 

ஒரு காப்பி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று குணா நினைத்தான். இவருக்கு எதுவும் தரக்கூடாது என்று ஏர் ஹோஸ்டஸ் பெண் கண்டிப்பாகச் சொல்லி அனுப்பினது நினைவு வந்தது.

 

தாத்தாவை சோபாவிலே உக்காரச் சொல்லுங்கோ.

 

குணா அவரை மெல்லக் கைபிடித்து சோபா மத்தியில் உட்கார்த்தினான். அவர் தரையில் வைத்திருந்த காபித் தம்ளரை பார்த்தபடி இருந்தார். உள்ளே இருந்து கேவி அழுதபடி யாரோ வரும் சத்தம். தூக்கத்தில் நடக்கிறது போல ஒரு பெண்.

 

அழுது வீர்த்த முகத்தோடு இருந்தவளை நாலைந்து பேர் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார்கள். அவள் விம்மியபடி பெரியவர் காலில் தொட்டுக் கும்பிட்டாள்.  பெரியவர் அவளையே பார்த்தபடி இருந்தார். அப்புறம் வலது கையை நீட்டினார்.

 

நேத்திக்கு இடது கையிலே போட்டாச்சு. இன்னிக்கு வலது. ஊசி புதுசு தானே?

 

அவர் கேட்க அந்தப் பெண் அடக்க மாட்டாமல் பெரிய குரல் எடுத்து அழுதாள்.

 

மாமா, கொழந்தையைப் பார்த்தேளா? அப்பா மாதிரி இவனும் விட்டுட்டுப் போய்ட்டானே. என்ன பாவம் பண்ணினேன். பாருங்கோ இவனை.  மாமா.

 

மிசஸ் ராஜா, காம் யுவர்செல்ப். நீங்க தைரியமா இருக்க வேண்டிய நேரம் இது.

 

பக்கத்து ப்ளாட்காரர் என்று தோன்றிய ஒரு பருமனான மனிதர் சோபாவில் இருந்து எழுந்து நின்று சொன்னார். அவர் குஜராத்தி அல்லது வங்காளியாக இருப்பார் என்று உச்சரிப்பில் இருந்து குணாவுக்குத் தோன்றியது. அழுது கொண்டிருந்த பெண் குழைந்து தரையில் சாய யாரோ ஏந்திக் கொண்டார்கள்.

 

செடேடிவ் எபெக்ட். இட் இஸ் வெரி மைல்ட். தட்ஸ் வாட் தி டாக்டர் டோல்ட்.

 

குஜராத்தி பக்கத்தில் நின்ற தாடிக்காரர் சொன்னார்.

 

மைல்டா இருந்தாலும் மெண்டல் ஸ்டேடஸ். அதோட ஏஜ் ஃபாக்டர் வேறே. பிஃப்ட்டி இருக்குமா?

 

நோ, நால்பத்தைஞ்சு. ராஜாவே இன்னிக்கு இருந்தா நாப்பத்தெட்டு தான் ஆகியிருக்கும்.

 

தாடிக்காரர் காலடியில் இருந்த காப்பி தம்ளரை நகர்த்தி விட்டு சோபாவில் உட்கார்ந்தார்.

 

டெத் சர்ட்டிபிகேட் வாங்கியாச்சு.  எடுக்க சடசடன்னு ஏற்பாடு பண்ணலாம்.

 

பெரிய பெல்ட்டும் உடம்பெல்லாம் வியர்வையுமாக உள்ளே வந்தவன் அறிவித்தான்.

 

எலக்ட்ரிக் க்ரிமேட்டோரியம் தானே? போனோமா வந்தோமான்னு முடிஞ்சுடும்.

 

கரெண்ட் கட்டாம். வெறகு தான். வாங்கி வைக்க ஆள் போயிருக்கு.

 

பதில் சொல்லியபடி திரும்ப வெளியே போனவன் குணா கூட வேலை பார்க்கிறவன். வாசலில் இருந்தபடிக்கு உள்ளே எட்டிப் பார்த்து, செருப்பை கழற்றி பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொள்கிற புரோகிதரும் கூட அவன் கூட்டம் தான்.

 

தாத்தாவுக்கு ஒரு தடவை முகத்தைக் காட்டிடுங்கோ. அவர் கையிலே பவித்ரம் கொடுத்து யாராவது காரியம் பண்றதுக்கு வாங்கிக்கலாம்.

 

புரோகிதர் உள்ளே வந்தபடி சொன்னார். பெரியவரை ஐஸ் பாளம் பக்கம் கூட்டிப் போனார் தாடிக்காரரும் இன்னொருத்தரும்.

 

காப்பி இருக்கா?

 

பெரியவர் திரும்பக் கேட்டார். பதில் கிடைக்கவில்லை.

 

யாரோ படுத்துண்டிருக்கா. ஸ்வெட்டர் போட்டுக்கக் கூடாதா? குளிர்றதே.

 

அவர் குணாவோடு லிப்டில் இறங்கும்போது முணுமுணுத்தார்.

 

காரைக் கிளப்பும்போது தாடிக்காரர் ஓடி வந்தார். இங்கே திரும்பி கொண்டு வந்து விட்டுடுவே இல்லே என்று குணாவைக் கேட்டு உறுதி செய்து கொண்டு அவரும் பக்கத்து சீட்டில் ஏறிக் கொண்டார். குணா வந்த வழியில் போகாமல் பக்கத்துத் தெருவில் காரைச் செலுத்தினான்.

 

இப்படியே போயிடலாமே?

 

தாடிக்காரர் ஒரு திருப்பத்தில் எதிர்த் தெருவைச் சுட்டிக் கேட்டார்.

 

அது ஒன்வே.

 

ஒன்வேயா? மத்த வண்டி எல்லாம் போறதே?

 

ராஜா நடு ராத்திரியா இருந்தாலும் ஒன்வேன்னா நுழைய மாட்டான். ரெட் விழுந்தா சட்டமா நின்னுடுவான்.

 

பெரியவர் கண் முழித்துப் பார்த்துச் சொன்னார்.

 

நடுராத்திரிக்கு ரெட் லைட்டுலே வெயிட் பண்றபோது தான் லாரி அடிச்சுடுத்து.

 

தாடிக்காரர் பின்னால் திரும்பி தகவல் தெரிவித்தார்.

 

யாரை லாரி அடிச்சுடுத்து?

 

உங்க பேரன். ராஜாவோட பிள்ளை.

 

குணா வண்டியை நிறுத்தினான். கைக்கடியாரத்தைப் பார்த்தான். இரண்டு மணி நேரம் முடிய இன்னும் பதினைந்து நிமிடம் பாக்கி இருந்தது.

 

உள்ளே ஏர் ஹோஸ்டஸ் பெண் இன்னும் மொபைலில் பேசிக் கொண்டிருந்தாள். இது வேறே அழைப்பாக இருக்கும். அவள் கொண்டை போட்டிருந்ததை அவிழ்த்து தோளெங்கும் பரந்திருந்த தலை முடியை அவ்வப்போது கண்ணை மறைக்காமல் எடுத்து மேலே விட்டுக் கொண்டிருந்தாள்.

 

ஒண்ணும் சாப்பிடத் தரலியே?

 

அவள் மொபைலை மடித்து வைத்தபடி குணாவைக் கேட்டாள்.

 

இல்லே, அங்கே வான்னு சொல்லக்கூட முடியாத சூழ்நிலை.

 

தாடிக்காரர் தெரியப்படுத்தினார்.

 

அப்ரன் பெண் உள்ளே இருந்து வந்து பெரியவரை அழைத்துப் போனாள்.

 

பை தி வே, நான் தேவகியோட  கசின்.

 

யூ மீன், இவரோட மருமகள் மிசஸ் தேவகி ராஜாராமன்?

 

ஆமா. பாவம் தேவகி. ஹஸ்பெண்ட்டோட அமெரிக்கா போறபோது இவரை இங்கே விட்டுட்டுப் போக வேண்டிய சூழ்நிலை.

 

தெரியும் என்றாள் அந்தப் பெண்.

 

ராஜா ப்ளைட் க்ராஷ்லே போய் தேவகி இங்கே திரும்பி வந்தும் கூட இவருக்கு சிஷ்ருஷை பண்ண முடியாம பிள்ளை படிப்பு. உத்தியோகம். டூ பெட் ரூம் ப்ளாட்.

 

மாசா மாசம் பணம் டாண்ணு அனுப்பிடுவாங்க.

 

அமெரிக்கா திரும்ப போனாலும் அது பாட்டுக்கு வந்துடும்.

 

யார் அமெரிக்க போறது?

 

ஏர் ஹோஸ்டஸ் கேட்டாள்.

 

தேவகி தான். பிள்ளையும் இப்படி அகாலமாப் போய்ச் சேர்ந்து அவ மட்டும் இங்கே என்ன பண்ணப் போறா? பொண்ணு கூட இருக்க நெவெடா கிளம்பிண்டு இருக்கா. வாலண்டரி ரிட்டயர்மெண்ட் எடுக்கச் சொல்லி இருக்கேன்.

 

அடுத்த மாசம் மெய்ண்டெனன்ஸ் சார்ஜ் பத்தாயிரமா உயர்த்தப் போறோம்.

 

நோ ப்ராப்ளம். ஊருக்குப் போறபோது எக்ஸ்ட்ரா தொகைக்கு பேங்க்லே டைரக்ட் டெபிட் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திடச் சொல்றேன்.

 

அவள் அடுத்த மொபைல் அழைப்புக்கு பதில் அளிக்க ஆரம்பித்தாள். குணா வாசலுக்கு வந்தபோது உள்ளே இருந்து பெரியவர் கைதட்டிக் கூப்பிட்டார்.

 

உப்பு பிஸ்கெட் வாங்கிண்டு வந்துடு.

 

குணா எதுவும் சொல்லாமல்  கையை அசைத்து விட்டு நடந்தான்.

 

பத்து அன்னிக்கு எள்ளுருண்டை கொண்டு வரேன். சாப்பிட்டுட்டு சௌக்கியமா செஞ்சுரி போடுங்கோ.

 

தாடிக்காரர் உரக்கச் சொல்ல எதிர் ப்ளாட் பெண் கதவை மூடுகிற சத்தம். அவள் தோளில் பையோடு அவசரமாகப் படி இறங்கிக் கொண்டிருந்தாள்.

 

உப்பு பிஸ்கட். மறந்துடாதே. ராஜாவுக்கு பிடிக்காது. அவன் பிள்ளைக்கு இஷ்டம்.

 

குணா திரும்பிப் பார்க்க எல்லாக் கதவும் அடைத்திருந்தது.

 

(வார்த்தை ஆண்டு மலர் 2010) நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன