கூப்பிடறாங்க சார்
நீங்க இதை நம்பப் போறது இல்லேன்னு தெரியும். வருஷம் 2000 ஞாபகம் இருக்கா? அப்போ நான் அமெரிக்கா வாசி. கலிபோர்னியாவிலே இருந்தேன். கால் இல்லாமக் கூட கலிபோர்னியாவிலே இருந்துடலாம். கார் இல்லாம முடியாது. கார் இல்லாதது தானே என் பிரச்சனை.
எனக்கு கம்ப்யூட்டர் புரகிராமிங் சுமாரா வரும். தெக்ககத்தி ஆளு. ஏதோ படிச்சு ஏதோ எழுதி பாஸ் செஞ்சு, காரைக்குடி காலேஜ்லே பி.ஈ வாங்கி கையில் எடுத்துக்கிட்டு, கம்ப்யூட்டர் கம்பெனியிலே செருப்புத் தொடைக்க சேர்ந்து ஆச்சு பதினஞ்சு வருஷம். இப்போ அங்கேயே சாதா புராஜக்ட் மேனேஜர்.
கொத்தடிமை வர்க்கம். சென்னை கத்தரி வெய்யில்லே டை கட்டி,, கோட் போட்டுக்கிட்டு நிக்கணும். ஜெனரல் மேனேஜர், வைஸ் பிரசிடெண்ட், ஜியோ ஹெட் இப்படி தெய்வங்களை கொண்டாடணும். அதுங்க வண்டை வண்டையாத் திட்டி முகத்திலே உமிஞ்சாலும் புளகாங்கிததோடு வழிச்சுப் பூசிக்கிட்டு கும்புடணும். தொரை அமெரிக்காவிலே இருந்து வரும்போதெல்லாம் அவனும் சேர்ந்து பட்டையைக் கழட்டுவான். சளைக்காம, இன்னும் திட்டுங்க எசமான்னு சிரிக்கணும். மத்தபடி செஞ்ச பிராஜக்ட் வேலைக்கு கறாரா காசு வாங்கிப் போடணும். லேசுலே தர மாட்டானுங்க.
’உன் இங்கிலீஸ் முன்னே பின்னே இருந்தாலும் சரிதான். திட்டத் திட்டத் திண்டுக்கல்லுனு நிக்கறியே அதான் கம்பெனிக்கு வேணும். கலிபோர்னியாவிலே கூப்பிட்டு விட்டு நிக்க வச்சு திட்ட ஆள் கிடைக்குமான்னு கேட்டாங்க. போய்ட்டு வா’ன்னு மேலிட உத்தரவு.
பிராஜக்ட் ஏற்கனவே ஒரு வருஷமாப் போய்ட்டு இருக்காம். நம்ம பிள்ளைங்க நூறு பேர் அங்கே குடியும் குடித்தனமுமா செட்டில் ஆகிட்டாங்களாம். நீயும் போய் ஜோதியிலே கலந்துக்கோன்னு விரட்டினாங்க.
சின்ன ஊரு. அங்கே சின்னதா ஒரு வீடு. மர வீடு. நமம பையன் ஒருத்தன். ஜெய். அதான் பேரு. அவன் கூட தங்கறதா ஏற்பாடு. ஏர்போர்ட்டுக்கு வந்து கூட்டிப் போனான். எனக்கும் அவனுக்கும் பத்து பதினஞ்சு வ்யசாவது வித்தியாசம் இருக்கும். ஜூனியர் சாப்ட்வேர் எஞ்ஜினியர். நம்மூர்லே சுண்டைக்காய் பதவி. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தலையெழுத்தை தீர்மானிக்கறது பிராஜக்ட் மேனேஜர்ங்கறதாலே ரொம்ப மரியாதையா இருப்பாங்க இந்த வர்க்கத்திலே இருக்கற பசங்க. அப்படி குனிஞ்சு வளஞ்சு கும்மியடிச்சுட்டு அமெரிக்கா போய் ஒரேடியா நிமிர்ந்தவன் இந்த ஜெய்.
கையைக் குலுக்கினதுமே விருட்டுனு பிடுங்கிக்கிட்டு., ஃபிளைட் மூணு மணி நேரம் லேட் ஆனதுக்கு ரொம்ப சலிச்சுக்கிட்டான். ஏம்பா ஆபீஸ்லே தானே ஏற்பாடு செஞ்சாங்கன்னேன். நீங்க போன் பண்ணியிருக்கலாமே … சுதாரிப்பா இல்லாட்ட இங்கே பிழைக்கறது கஷ்டம்னு முணுமுணுத்தான். என்னமோ அங்கேயே பொறந்து சினிமாவிலே குடும்பப் பாட்டு பாடி முடிக்கறதுக்குள்ளே அங்கேயே சடசட்ன்னு வளர்ந்து நிக்கற மாதிரி. நேரம்.
’பெட்டியிலே மூட்டைப் பூச்சி இருக்குமா’?
இல்லேன்னு சத்தியம் பண்ணிட்டு நான் அந்த பிரம்மாண்டமான பெட்டியை தேசத் தலைவர் செத்துப் போய் பீரங்கி வண்டியிலே வச்சுத் தள்ளிட்டு ஊர்வலம் போகிற மாதிரி உருட்டிட்டு வந்தேன். தோள்லே ரெண்டு மெகா சைஸ் பை. அதுலே ஒண்ணு லாப் டாப் கம்ப்யூட்டர். மற்றதில் தொழில் சம்பந்தமா புத்தகங்கள்.
தூக்க வேண்டியதைத் தூக்கி மாட்ட வேண்டியதை மாட்டி உருட்ட வேண்டியதை உருட்டிக் கிட்டு தடுமாறறேன். நம்மாள் செக்யூரிடி மாதிரி அமர்த்தலா கூடவே வரான். ஒரு பழைய கார் பக்கம் ஊர்வலம் முடிஞ்சுது.
மூட்டையைத் பூட்டுலே வைங்கன்னான ஜெய். தரையிலே வச்ச பெட்டியை அவசரமா தூக்கிட்டு நின்னேன். பூட்டுலே வைக்கறது அப்படின்னா?
பூட்டுனா நாம இங்கே டிக்கின்னு சொல்றோமே அதுவாம். தெரியாதுப்பான்னேன். தெரிஞ்சுக்கணும்-ங்கறான். ஏண்டா நீ ஒரு வருஷம் முன்பு வரை டிக்கின்னு சொல்லிட்டுத் தானே உள்ளூர்க் கடையிலே டீ ஆத்திக்கிட்டிருந்தே? கேட்க முடியாது. எனக்கு முந்தி இங்கே வந்தவன்.
கார் ஓட்டத் தெரியுமான்னு கேட்டான். வெஸ்பா ‘ஸ்கூட்டர்லே ஒரு ஆயுசுக் காலம் கழிஞ்சவன். எதோ கொஞ்ச நாளா இந்த மேனேஜர் உத்தியோகம். கையிலே கொஞ்சம் காசு. வீட்டுலே கார் வாங்கி நிறுத்தினேன். கத்துக்கிட்டு லைசன்ஸ் வாங்கறதுக்குள்ளே இங்கே தொரத்தி விட்டுட்டானுங்க.
சாங்கோபாங்கமா ஆரம்பிச்சேன். என்னது, டிரைவிங் லைசன்ஸ் இல்லியா? ரொம்ப கஷ்டம்னு கட் பண்ணினான். பரவாயில்லே சமாளிச்சுக்கறேன்னேன். கஷடம் உங்களுக்கிலே எனக்குன்னானே பார்க்கலாம்.
இப்படித் தான் நான் பிணைத் தொழிலாளியா கலிபோர்னியா வந்ததும், குப்பை கொட்டினதை கூட்டிப் பெருக்கிக் காசு வாங்கினதும். சம்பளமும் முழுசா எனக்கு வராது. ஐநூறு டாலர் பணத்தை எந்த ராஜா எந்தப் பட்டணத்துக்குப் போனாலும் டாண்ணு ஜெய்க்கு மாசம் பொற்ந்ததும் கொடுத்திடணும்னு ஒப்பந்தம். வாடகையிலே என் பங்காம். அதிகம் தான். என்ன செய்ய? அதைத் தவிர சாப்பாட்டுச் செலவு, மின்சாரம், கேபிள் டிவி, ஃபோன் இப்படி அந்தந்த மாசம் வர்ற தொகையை ரெண்டா வகுத்து தரணும்.
வேலை பார்க்கற இடம் இருக்கே, ஏன் கேக்கறீங்க, சடை ஆபீஸ். தைவான் காரனுங்களும் ஜப்பான்காரன்களும் நாள் முழுக்க மீட்டிங் போட்டு நம்மை வாய் பார்க்க வச்சுட்டு மோஷி மோஷின்னு பேசிட்டே இருப்பாங்க. இதுக்கு நடுவுலே அங்கேயே உட்கார்ந்திருக்கற என் லோக்கல் தலைவன் எதுக்குன்னு தெரியாம திட்டறது, மெட்றாஸ்லே இருந்து தொலைபேசி, விடியோ கான்பரன்ஸிலே அங்கத்திய கடவுள் திட்டறது, டோக்கியோவிலே கஸ்டமர் பக்கம் சிநேகிதமா உக்காந்து எங்க சேல்ஸ் நிர்வாகி வயசு வித்தியாசம் பார்க்காம, வாய்யா போய்யான்னு கத்தறது எல்லாம் உண்டு. நரகம்.
வீட்டிலேயா, கேக்கவே வேணாம். கட்டின பொண்டாட்டியை கூட்டிவந்து குடும்பம் நடத்தினாக் கூட இம்புட்டு டார்ச்சர் இருக்காது. வீட்டுலே எப்பவும் இருபது பாக்கெட் உருளைக்கிழங்கு வறுவல், பியர், விஸ்கி இதெல்லாம் இருக்குமே தவிர, அரிசி, பருப்பு, சக்கரை எதுவும் ஸ்டாக் இருக்காது.
ஒரு நாள் வேலை முடிச்சு வந்த போது கன்னா பின்னான்னு பசி. ஏம்ப்பா, சமைக்கலாமான்னு மெதுவா ஆரம்பிச்சேன். கூட்டு கொள்முதல், கூட்டு சமையல் ஆச்சே. டுர்யோன்னு நான் மட்டும் பொங்கித் திங்க முடியுமா?
வரும்போது தான் ஆபீஸ்லே கேக்கும் கோக்கும் அடிச்சோமே. அதுக்குள்ளே பசியான்னு ஆச்சரியப்பட்டான் ஜெய்.
நான் எங்கே கொட்டிக்கிட்டேன்? ஜ்பபானிய துரை மீட்டிங்னு ஓலை அனுப்பினான். பேக்டரியில் நட்டு போல்ட் பண்ற மாதிரி துண்டு துணுக்கா ஆயிரம் பத்தாயிரம் சாப்ட்வேர் விள்ளல் செஞ்சு அப்புறம் அதை எல்லாம் இணைச்சு கதையை முடிக்கலாம்ங்கறான் மோஷி மோஷி. சிவனேன்னு நான கேட்டுட்டு உக்காந்திருந்த நேரத்துலே இவன் கேக் மொசுக்கியிருக்கான்.
ஜெய் சமைக்க முடிவெடுக்கட்டும்னு நாலு ரொட்டியை மோரிலே தொட்டுத் தின்னுட்டு கொட்டுக் கொட்டுன்னு தரையிலே உக்காந்திருந்தேன்.
நம்ப முடியலியா? எது, மோரா? கலிபோர்னியாவிலே எல்லா சூப்பர் மார்க்கெட்லேயும் பட்டர் மில்க் அட்டைப் பொட்டியிலே அடைச்சு விக்குதுங்க. அப்புறம்? தரையிலே உக்காந்தா?ஆமா, அமெரிக்கான்னு பேரு, வீட்டுலே பேருக்கு ஒரு நாற்காலி, சோபா கிடையாது. ரெண்டு ரக், அதான், மேலே போத்திக்கற மெத்தை. அதை விரிச்சே இடம் அடைச்சுடுத்து. பர்னிசர் வாடகைக்கு எடுத்தா அதை அடுத்த வீட்டுலே தான் போடணும். காசு ஏது?
உட்கார்ந்த படியே அசந்து இருக்கற போது உலுக்கி எழுப்பினான் ஜெய். ஆபீஸ்லே உழைச்சிட்டு, பசிக்கு சாப்பிட முடியாம, உருளைக்கிழங்கு வறுவலைத் தின்னு மோர் குடிச்சுட்டுக் கிடக்கறவன் கஷ்டம் தெரியாத பய. என்னாடான்னு கேட்டா, வா எல்லாரோடயும் வந்து பேசுங்கறான். கண்ணு சொருகுது. தலை சுத்துது. அங்கே போனா மொத்த டீமும் தண்ணியடிச்சுட்டு உக்காந்து கெக்கெக்கேன்னு சிரிக்கறானுங்க. ஜப்பான் பேங்குலே கணக்கு எப்படி திற்க்கறதுன்னு இந்த வெள்ளைப் பலகையிலே வரைஞ்சு விளக்கு அப்படீங்கறான், யாரா? சொன்னேனே உள்ளூர்த் தெய்வம்.
காலையிலே எழுந்ததும் போடா நீயுமாச்சு உன் சகவாசமுமாச்சுன்னு ஆஃபீஸுக்கு நடந்து போயிட்டேன். வீட்டுக்குப் பின்னாடி பெரிய வெட்டவெளி. கம்பி போட்டு வச்சிருக்கும். நடுவிலே சின்னதா ஒரு கதவு. அதைக் கடந்து, கம்மாய்க் கரை மாதிரி நீண்டுக்கிட்டே போகும். தண்ணியிலே எதேதோ பற்வைகள் வந்து இறங்கும். ஜிவ்வுனு எவ்விப் பறக்கும். பாத்துக்கிட்டே பத்து நிமிஷம் நடந்து மணல் சரிவு இறங்கினா, ஆபீஸ். நடக்க ஆரம்பிச்சுட்டேன்.
லேட்டாக ஆபீஸ் போய்ச் சேர்ந்ததுமே இண்டர்காம்லே உள்ளூர் தெய்வம் கூப்பிடறான். அவசரமாம். போனா அங்கே மெட்றாஸ் சாமிகளும், வாஷிங்டன் சாமிகளும். குட்டையா ஒரு ஜப்பானிய தேவதையும் கேவலமாப் பார்க்கறாங்க.
ஜப்பானிய தேவதையை ஏதோ கேட்டார் எங்க தெய்வத்தின் தெய்வம். அது வெளியே போனதுமே, உள்ளூர் கடவுள் என்கிட்டே எகிறினான் – ’யோவ், நீ பாட்டுக்கு என்ன தில் இருந்தா இங்கே கெட்ட காரியம் பண்ணிட்டு இருப்பே’. அவன் சொன்ன வார்த்தையை இங்கே போடறது சரியில்லே. வாய்யா போய்யா கூட நம்ம வாயிலே வராது. அந்த ஃப வார்த்தையையா சொல்வேன்.
அவன் காரிலே வந்துட்டு இருக்கற போது பார்த்தானாம். நான் சரிவிலே இறங்கி வந்துட்டிருந்தேனாம். சர்க்கார் சொத்தாம் மதகுக்கரை. அத்துமீறி உள்ளே புகுந்தேன்னு பிடிச்சு கேஸ் போட்டா, கலிபோர்னியா முழுக்க கம்பெனி பெயர் ரிப்பேராகிடுமாம்.
அன்னிக்கு பிஸ்ஸா ஆர்டர் பண்ண சொன்னா, இவர் பாட்டுக்கு நைன் லெவனுக்கு போன் அடிச்சிருக்கார். படை பட்டாளமா கிளம்பி வந்துட்டானுங்க.. எல்லோரையும் துருவித் துருவி விசாரிச்சுட்டுப் போனாங்க.
ஜெய் போட்டுக் கொடுத்தான். என் தப்பு தான். பாதி நம்பரை காதுலே வாங்கிட்டு 911-க்கு அடிச்சேன். அது போலீஸ் எமர்ஜென்ஸி நம்பராம்.
பிராஜக்ட் மானேஜருக்கு இந்த காமன் சென்ஸ் கூடவா இருக்காது? பெருந் தெய்வம் எகிற சும்மா பார்த்துக்கிட்டு நின்னேன். முழிச்சுக்கிட்டு நின்னா எப்படி? கடவுள் மறுபடியும் என்னை கெட்ட காரியம் செய்யச் சொன்னது.
எத்தனையோ சீறும் சிறப்புமா நிர்வாகியா இருந்துட்டு இப்போ கண்ட பயலும் இளக்காரம் பண்ணித் திட்டறான்னு தொண்டை கம்மிடுச்சு. கையில் சம்பளம் வந்தாலும் கிளம்பிடலாம். எங்கே கிளம்ப. பேங்க் போக, ப்ளேன் டிக்கட் வாங்க இப்படி எல்லாத்துக்கும் சக குடித்தனக்காரன் உதவி வேண்டியிருக்கு. அடுத்த மாசம் என் கணக்கில் இருந்து வாடகை முதலானதுக்கு என் பங்குப் பணம் ஜெய்யோட கணக்குக்கு நேரடியாகப் போய்ச்சேர அனுமதி கொடுத்திருக்கேன். மிச்சம் இருக்கக் கூடிய பணத்திலே அடுத்த மாசம் பூரா மோர் வாங்கலாம்.
சீன்னு போயிடுச்சு. சாயந்திரம் சீக்கிரமே பிச்சுட்டு கிளம்பிட்டேன். கம்மாய்க் கரை வழியாப் போனாத்தானே திட்டறான்? பெரிய பாதையிலே நடந்து போனேன். கூட பதினைந்து நிமிஷம் ஆகும். ஆகட்டும்.
பின்னால் விர்ருனு வந்த கார், முன்னாலே சீறிக்கிட்டு பாயற ராட்சச டிரக்குனு பார்த்து பார்த்து ஒதுங்கி போய்ட்டிருக்கேன். பின்னாலே ஹாரன் சத்தம். கலிபோர்னியாவிலேயே அந்த நிமிசத்துலே அந்த ஹாரன் மட்டும் தான் சத்தம் போட்டிருக்கும். அமைதியான இடமாச்சே அது.
ஜெய் தான். மன்னிப்பு கேட்க உள்ளூர் தெய்வம் அனுப்பியிருப்பான்.
ஏன் சார், நீங்க் பாட்டுக்கு முடி போச்சுன்னு கிளம்பிட்டீங்க. இன்னிக்கு சாய்ந்திரம் உங்களுக்கு முடி வெட்ட அப்பாயிண்ட்மெண்ட் போட்டிருக்கோமே. போன் பண்ணி எகிரறா கொரிய பொம்பளை. என் நம்பர்லே கால் வந்துது.
நிர்கதியாகக் காரில் ஏறினேன். அவன் கோபத்தோடு முறைத்தபடி வண்டியை கிளப்பினான். ’சீட் பெல்ட் போட்டுக்க சொல்லி குழந்தை கிட்டே சொல்ற மாதிரி ஆயிரம் தடவை சொல்லியாச்சு. கேட்க மாட்டீங்களே’னு கடிச்சான். அவசரத்தோட, பயத்தோட பெல்ட் மாட்டிக்கிட்டேன். தலையெழுத்துலே இதுக்கு மட்டும் தனி எழுத்தா இருக்கும்? அதே கோழிக் கிறுக்கல்தான்.
அந்த கொரியப் பொம்பளை என்னைப் பார்த்து புருபுருன்னு முணுமுணுத்திட்டிருந்தா. முடி வெட்டி, கலர் போடறேன்னு ஏதோ சாம்பலும், கருப்புமா தடவி, உக்காருன்னுட்டு எங்கேயோ கிளம்பிட்டா. ஜெய் வாசல்லே கார்லே என்ன பண்றானோன்னு கவலைப் பட்டேன். அவ திரும்பி வந்தா.
’உன் மகன் போய்ட்டான். முடிச்சுக்கிட்டு போய்ச் சேரு’.
மகனா? ஆமா உன்னைக் கூட்டி வந்தானே அவந்தான்
பக்குனு போச்சு. கையிலே ச்ல்லி கிடையாது. இவளுக்குக் காசு தரணும். வீட்டுக்குப் போகணும். வழி? பசி வேறே. அதுவா முக்கியம் இப்போ?
’உனக்கு முடி வெட்டிக் கலர் அடிக்க காசு கொடுத்துட்டுத்தான் .போனான். .டிப்ஸ் நீ கொடு’ன்னா கொரியப் பொம்பிளை.
அவ கிட்டே பஞ்சப் பாட்டு பாடி பத்து டாலரை வாங்கினேன். நடக்கற போது வெறுங்கையோடு நடந்து, யாராவது அடிச்சா? காசு இல்லாம நடக்கறவன்னு தெரிஞ்சா எரிச்சல்லே கொலையே கூட செஞ்சுடுவான்.
திண்டாடி தெருப் பொறுக்கி ராத்திரி பத்து மணிக்குப் போய்ச் சேர்ந்தா, கதவு பூட்டியிருக்கு. உச்சத்திலே பசி. கிறக்கம். இவன் எங்கே தொலைஞ்சான்?
ஃபோன் போட்டா எடுக்கற வழியா இல்லை. சட்டுனு நினைவு வந்துது. பையிலே பத்து டாலர் நோட்டு.
விழுந்து அடிச்சு காம்பவுண்ட் கடைக்கு ஓடினா எடுத்து வச்சிட்டிருந்தாங்க. ரொம்ப கெஞ்சி, ஒரு பாக்கெட் பிரட் வாங்கினேன். மோர் காலி.
ராத்திரி ஒரு மணிக்கு ஜெய் வர்றதுக்குள்ளே கதவுப் பக்கம் நாய்க்குட்டி மாதிரி தரை விரிப்புலே தலை வச்சுத் தூங்கிட்டேன். தூக்கம் பிரியாமலே உள்ளே போய் படுத்து கொஞ்ச நேரத்திலே இவங்க உபத்திரவம்.
’சார் சார்’
எழுப்பி உட்கார வச்சுட்டான் போடான்னு திட்ட வாய் வருது. திட்ட முடியாத படிக்கு மிச்சத் தூக்கம் வாயை அடைக்குது. துக்கம் வேறே.
’சார், எங்க அப்பா சார் ஃபோன்லே’.
ஃபோன் மணிச் சத்தம் நின்னு போயிருந்துது. திரும்பக் கொடுத்தேன்.
’அஞ்சு நிமிசத்திலே திரும்பக் கூப்பிடுவார் சார். ஒரு மணி நேரமா அதான் செஞ்சுக்கிட்டிருக்காரு’.
’என்ன விஷயம்’?
’வந்து, ஊர்லே எனக்கு பொண்ணு பார்த்து எங்கப்பா நிச்சயம் செஞ்சிருந்தாரு. பத்திரிகை அடிச்சாச்சு அடுத்த மாசம் அஞ்சாம் தேதி கல்யாணம்’.
’நல்ல விஷயம் தானே’?
’எங்கே சார்.. பொண்ணு ஓடிப் போய்ட்டா. பாய் பிரண்ட் இருக்கானாம்’.
அவன் அழுகையை எப்படி அடக்கினாலும் முகம் கோணிப் போச்சு. ஒரு செகண்டுலே கட்டெல்லாம் தளர்ந்து ஓன்னு அழ ஆரம்பிச்சான் . எனக்கு திடீர்னு நூறு யானை பலம் வந்த மாதிரி இருந்தது.
ஃபோன் திரும்ப அடிச்சுது. நான் அவ்ன் கிட்டே இருந்து பிடுங்கினேன்.
’கவலைப் படாதீங்க. நான் உங்க தம்பின்னு வச்சுக்குங்களேன்..இந்தப் பொண்ணு இல்லாட்ட இன்னொருத்தி. யார் யாருக்கெல்லாம் இன்விடேஷன் அனுப்பினீங்களோ எல்லோருக்கும் போன்லே காண்டாக்ட் செஞ்சு..’
நான் உற்சாகமா சொல்லிட்டிருந்தேன். அவன் பயபக்தியோடு என் முகத்தைப் பார்த்துட்டு நின்னான். ஃபோனுக்கு அந்தப் பக்கமும் மரியாதையோடு என் வாக்குக்குக் கட்டுப்பட்டுக் காத்திருக்காங்க. உள்ளபடிக்கே சுகமான சூழ்நிலை.
அனுபவிச்சபடி நிம்மதியாத் தூங்கினேன்.
கொஞ்ச நேரம் தான். திரும்ப எழுப்பி விட்டான். தூங்க விடமாட்டியான்னு எகிறினேன். ’சாரி சார். உங்களுக்கு கால். வீட்டுலே இருந்து கூப்பிடறாங்க’.
அவச்ரமா அலோ சொன்னேன்.
இவ தான். ’என்னங்க.. தூங்கறீங்களா.. உங்க தம்பி… சிநேகிதிப் பொண்ணை ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.. ஒரே களேபரம் இங்கே.. ஏற்கனவே நிச்சயம் ஆன பொண்ணாம்.. உங்க ஆபீஸ் தானாமே அந்தப் பையன்’.
நான் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சேன்.
காலையில் உலகம் எப்படி வேணுமானாலும் போகட்டும். இந்த நிமிஷம் நான் தெய்வம். எல்லாம் என் கட்டுப்பாட்டில் இருக்கு. சகலமும்.
ஃபோனை தலைமாட்டில் வைத்தபடி திரும்பப் படுத்தேன்.
(குமுதம் 2015)