எழுத்தும் பாதிப்பும்
சில கதைக் கருக்கள் மனதின் ஆழத்தில், கிட்டத்தட்ட பாரம்பரிய நினைவிலிருந்து வருகிற மாதிரி புறப்பட்டும் வரும். அதே கரு பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஐரோப்பாவிலோ, ஆப்ரிக்காவிலோ, அல்லது இங்கே சென்னை நுங்கம்பாக்கத்திலேயோ இன்னொரு எழுத்தாளருக்கு, வேறொரு காலத்தில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.
ஒ.வி.விஜயன் எழுதிய பிரபலமான மலையாளச் சிறுகதை ‘பலி காக்கைகள்’. கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வெள்ளாயி அப்பன் நகரத்துக்குப் புறப்படுகிறான். அவனுடைய மகனைத் தீவிரவாதி என்று பிடித்துப் போய் தூக்கு தண்டனை விதித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு நாளில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.
சிறைக் கம்பிகள் குறுக்கே நிற்க, மகனும் அப்பனும் கடைசி முறையாகச் சந்தித்துக் கொள்கிறார்கள். ‘நான் தப்பு எதுவும் செய்யலே அப்பா’ என்று சொல்லும் மகனைப் பிரிய மனமே இல்லாமல் பிரிகிறான் அந்தத் தகப்பன். அடுத்த நாள் தூக்குதண்டனை நிறைவேற்றி, சடலத்தை வண்டியில் எடுத்துப் போய் அரசாங்கமே கொள்ளி போட்டு விடுகிறது. இவன் இயலாமையோடு அதைப் பார்த்து விட்டு கடற்கரை போகிறான். கொண்டுவந்த கட்டுச் சோறு பொதியவிழ்ந்து கொள்கிறது.
இறந்தவர்களுக்கு திவசம் தரும்போது பிண்டம் தின்ன வரும் காக்கைகள் அந்தச் சோற்றைத் தின்ன இறங்கி வருகின்றன.
இந்த அருமையான கதையின் சாயலில் ஒரு ஸ்பானிஷ் சிறுகதையைப் படித்ததாக இலக்கிய விமர்சகர் காலம் சென்ற எம்.கிருஷ்ணன் நாயர், தன் ‘சாகித்ய வாரபலம்’ பத்தியில் குறிப்பிட்டிருந்தார். குற்றம் சொல்லி இல்லை, தகவலுக்காக.
கல்கி தீபாவளி மலருக்கு என்னிடம் ஒரு கதை கேட்டபோது நான் ‘சேது’ என்ற சிறுகதை எழுதிக் கொடுத்தேன். ராமேஸ்வரம் பின்னணியில், மனைவியைத் தொலைத்த ஒரு யாத்திரிகனின் பார்வையில் நகரும் கதை. கதை போய்ச் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் கல்கி ஆசிரியர் தொலைபேசினார் –
‘நல்ல கதையா இருக்கு. ஆனா ஒரு சிக்கல். இதே கருவை வைச்சு முப்பது வருஷம் முந்தி கல்கி ஒரு கதை எழுதி இருக்கார். இது ராமேஸ்வரத்தில் நடக்கறதுன்னா அது காசியில் நடப்பது. அதை விட முக்கியமான விஷயம், இந்த வருட தீபாவளி மலரில் கல்கி எழுதின கதை ஒண்ணு போடலாம்னு தேடியபோது அதைத் தான் தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்’.
உடனே கதாபாத்திரங்களையும் கருவையும் மாற்றி அதே ராமேஸ்வரம் பின்புலத்தில் ‘சேது’ கதையை படிக்கக் கிடைத்தது. சேது வெர்ஷன் ஒன்றுக்கும் அந்தக் கதைக்கும் பத்து சதவிகித ஒற்றுமை இருந்தால் அதிகம். ஆனாலும் பழைய சேதுவைப் படிக்கும் யாருக்கும், அவர் கல்கி கதையைப் படித்தவராக இருந்தால் கல்கி நினைவு வராமல் போகமாட்டார்.
அசாதாரணமான நிகழ்வுகள் பூகோள எல்லைகளைக் கடந்து இரண்டு படைப்பாளிகளை ஒரே நிகழ்வின் அடிப்படையில் எழுத வைத்திருக்கலாம். எழுதத் தூண்டுகிற சம்பவம் தவிர வேறு எந்த விதமான பொதுத் தன்மையும் கொள்ளாது இவர்கள் இருப்பதால் எழுத்தின் நடையும், வீரியமும், கருவும், உருவும் எல்லாமே இரண்டு படைப்புகளிலும் வேறுபட்டு வரலாம். வரும்.
அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல் முடிவில் வரும் சம்பவம் மறக்க முடியாதது – கதைசொல்லியான சந்திரசேகரன் 1947-ல் ஹைதராபாத் கலவரங்களின் போது ஒரு விசித்திரமான சூழலில் சந்திக்கிற பெண் பற்றியது. சுய உணர்வே இல்லாமல் யந்திரமாக பைஜாமா நாடாவை அழிக்கிற அந்தப் பெண்ணின் செய்கையில் அவன் நிலைகுலைந்து போய் நிற்பதோடு நாவல் முடியும்.
உருது –இந்தி எழுத்தாளர் சதத் உசைன் மாண்டோவின் ‘கோல்தோ’ (திற) சிறுகதையைப் படித்தபோது உடனடியாக அ.மி நினைவுக்கு வந்தார். சதத் உசைன் கதை அதே 1947-ல் நாட்டைத் துண்டாடிய இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த பாலியல் வன்முறையும் இனப் படுகொலையுமாக இருண்ட காலகட்டத்தைப் பற்றியது. பாலியல் வன்முறைக்கு இலக்கான இளம் பெண் ஒருத்திக்கு அவசர மருத்துவ சிகிச்சை தர ஒரு மருத்துவ மனைக்கு அவள் எடுத்துச் செல்லப்படுவாள். சிகிச்சை அளிக்க வந்த டாக்டர், அறையில் இருட்டு மண்டி இருந்ததால், படுத்த படுக்கையாக இருக்கும் அந்தப் பெண்ணை மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாமல், ஜன்னல் வெளிச்சத்தை உள்ளே வர அனுமதிக்க, ஜன்னல் திரைப்பக்கம் கைகாட்டி, அதை சற்றே விலக்கச் சொல்வார் –‘கோல்தோ’. பாதி மயக்கத்தில் இருந்த இளம்பெண் இதைக் கேட்டதும் உடனே உடுப்பை உயர்த்துவாள். அ.மி கதை போல் இதுவும் மனதை நெகிழ வைப்பது.
இந்த சம்பவம் அரசியல் கொந்தளிப்பு மிகுந்த 1947-ல் உண்மையாக நடந்து இரண்டு எழுத்தாளர்களையும் பாதித்திருக்க வாய்ப்பு உண்டு. சதத் உசைன் கதையை முந்திப் படித்து பதினெட்டாம் அட்சக் கோட்டை அடுத்து எடுத்திருந்தால் உசைன் நினைவு வந்திருப்பார். இந்தச் சம்பவம் தவிர வேறு எந்த விதத்திலும் ஒற்றுமை இல்லாத படைப்புகள் இந்த இலக்கிய பிரம்மாக்கள் படைத்தவை. வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது போல் ஒற்றுமையில் வேற்றுமையைக் காண்பதும் சுவாரசியமானதே.