எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல் – என் ‘ஏதோ ஒரு பக்கம்’ மின்நூலில் இருந்து – தொடர்ச்சி

  • நான்: நீங்கள் மலையாள மகாகவி துஞ்சன் நம்பியாரின் மரபு இலக்கியத்தோடு தொடர்பு உள்ள நவீன இலக்கியவாதி. துஞ்சன் பற்றி சொல்லுங்களேன். அவர் தான் மலையாளத்தில் முதல்முதலாக 51 எழுத்து மலையாள எழுத்துமுறையைக் கொண்டு வந்தாராமே? அதற்கு முன் 30 அட்சர வட்டெழுத்து லிபிதான் எழுதப் பயன்படுத்தப்பட்டது என்கிறார்களே?

எம்.டி: துஞ்சன் ஸ்மாரகம் (நினைவு இயக்கம்) தலைமைப் பொறுப்பில் நான் இருக்கிறேன். மலையாள இலக்கியத்தை மக்கள் இலக்கியம் ஆக்கிய முதல் படைப்பாளி துஞ்சன். அதுதான்  முக்கியமே தவிர அவர் வட்டெழுத்தில் எழுதினாரா, மலையாள லிபியில் முதல்முறையாகக் காவியம் எழுதினாரா என்பதில்லை. பண்டிதர்கள் மட்டும் படித்து அனுபவிக்கும் கடினமான நடையில் அமைந்தது துஞ்சன் காலத்துக்கு முற்பட்ட அந்த்யந்த ராமாயணம். அதை யார் எழுதியது என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொழி கடினமாக இருந்தாலும் இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் குழந்தை பிராயத்தில் இருந்து அறிந்து அனுபவித்து ஆழ்ந்த ராமாயணக் கதையை மக்கள் இலக்கிய வடிவமான கிளிப்பாட்டு உருவில் படைத்தார் துஞ்சன். வால்மீகியையும் அத்யந்த ராமாயணத்தையும் ஆழ்ந்து கற்ற அவர் அவற்றின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். மலையாள மண்ணுக்கே உரிய மணத்தோடும் வனப்போடும் இங்கே முழங்கிய இசை வடிவாக  ராமாயணத்தை எழுதினார் அவர். வால்மீகியை விட்டு நிறையவே விலகிப் போயிருக்கிறார் துஞ்சன். ஆனால் என்ன, மகா காவியத்தை காவியச் சுவை கெடாமல் மேலும் மெருகிட்டு மக்கள் காவியமாக்கும் முயற்சி இல்லையா அது? மகாபாரதத்தையும் கிளிப்பாட்டு ஆக்கியிருக்கிற மகாகவி அவர். கிளிப்பாட்டு கேட்டிருக்கிறீர்களா? கும்மி மாதிரி.

(பாடிக் காட்டுகிறார். 76 வயதிலும் நடுங்காத குரல். நாலு வரி பாடி முடித்ததும் ஏதோ கணக்கு வைத்துக் கொண்டது போல் சட்டென்று நிறுத்தி இன்னொரு பீடி பற்ற வைத்துக் கொள்கிறார்.

கும்மி தமிழாச்சே? ‘கும்மியடி பெண்ணே, தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி’ நான் பாரதியின் விடுதலைக் கும்மியைப் பாட முயற்சி செய்ய ‘அதேதான், கொடுந்தமிழ் தானே மலையாளம். அங்கேயும் கும்மி கும்மி தான்’ என்றபடி பீடிப்புகையை இழுத்து ஒரு வினாடி அந்த சுகத்தை அனுபவிக்கிறார்).

பதினைந்தாம் நூற்றாண்டில் வடமொழியாக்கம் மலையாள மொழியை வெகுவாகப் பாதித்திருக்கலாம். ஆனால், துஞ்சன் போன்ற மக்கள் கவிஞர்கள் மொழியை மீட்டெடுத்து வந்து அதைப் பேசிப் பழகும் பொது மக்களின் நாவிலும் மனதிலும் திரும்ப இருத்தியவர்கள். காலப் போக்கில் மொழிவளர்ச்சியில் இது போன்று பாதிப்புகள் ஏற்பட்டு விலகுவதும் மொழி செம்மைப் படுவதும் இயல்பானதுதான்.

  • நான் : சார், கொஞ்சம் சினிமா பற்றி சம்சாரிக்கலாம். 1964-ல் வெளியான மலையாளப்படமான ‘முறைப்பெண்ணு’வில் நீங்கள் திரைக்கதை-வசனகர்த்தாவாக திரையுலகில் அடியெடுத்து வைத்தீர்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் பழசிராஜா வரை கிட்டத்தட்ட அறுபது படங்களுக்கு கதை, வசனம் எழுதியதோடு சிலவற்றை இயக்கியும் இருக்கிறீர்கள். இந்த 45 வருஷத்தில் மலையாள சினிமாவில் ஏற்பட்ட முன்னேற்றம், பின்னடைவு என்று ஏதாவது உங்களுக்கு மனதில் படுகிறதா?

 

எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியலே. அந்தக் காலத்தில் எழுதியது போல் கதையைக் காட்சிகளாக முழு உருவத்தை மனதில் வரைந்து கொண்டு அதை மெல்ல விரிவாக்கி நகர்த்திப் போகிற திரைக்கதை அமைப்பைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். எல்லாப் படைப்புக்குமே அடிப்படை அது குறித்த ஆய்வும், அறிவுத் தேடலும். எந்தக் காலத்திலும் இது தேவையில்லாமல் போகாது.

 

மலையாளப் படங்கள் தொடக்க காலத்தில் அந்தக் காலத் தமிழ்ப் படங்களைப் பின்பற்றி எடுக்கப்பட்டவை. இசையும் உரையாடலுமான பாணி அது. பார்சி நாடக மேடை தமிழ் நாடகமாகி அதன் பின் தமிழ்ப் படங்களில்  புகுந்ததன் பாதிப்பு மலையாளத்திலும் தூக்கலாக இருந்தது. அப்புறம் பழைய திரைப்படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளினார்கள். ஆனால் நான் முறைப்பெண்ணு திரைக்கதை எழுதும் காலகட்டத்தில் மலையாள சினிமா தமிழ் சினிமா பாதிப்பில் இருந்து விலகி, மெல்ல மெல்ல மலையாள மண்ணின் கலைவடிவமாகிக் கொண்டிருந்தது.   சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மலையாள சினிமா திரைக்கதை அமைப்பில் உரையாடல் இயல்பாக, குறைச்சலாகத்தான் இருக்கும். இது இன்று புதுசாக ஏற்பட்டதில்லை.

  • நான்: 1973-ல் நீங்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று பரவலாகப் பேசப்பட்ட ‘நிர்மால்யம்’ திரைப்படத்தை இயக்கினீர்கள். ‘பள்ளிவாளும் கால்சலங்கையும்’ என்ற நீண்ட கதையை எழுதிய எம்.டியும், அதன் அடிப்படையில் ‘நிர்மால்யத்தை’ இயக்கிய எம்.டியும் மனதளவில் ஒருவர்தானா?

 

‘பள்ளிவாளும் கால்சிலங்கையும்’ எழுதிய எம்.டி. கிராமத்து மனிதன். கிராமத்து மனிதர்களை, கிராம தேவதைகளை, கோவில்களை, கோவில் பணிக்காரனான வெளிச்சப்பாட்டை (சாமியாடி) பார்த்துப் பழகியவன். சாமியாடியை கோவில் உற்சவ காலத்தில் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருத்தி ஊரே வழிபடும். வருடத்தில் நாலு நாள் இப்படிக் கும்பிட்டு விழுந்து வணங்கி காணிக்கை கொடுத்து விட்டு மற்ற நாட்களில் அவனை ஏறெடுத்தும் கூடப் பார்க்காது போவது வழக்கம். இருந்தானா, செத்தானா, அவனுடைய குடும்பம் வறுமையில் வாடியதா, குழந்தைகளின் பசியைப் போக்க அந்த அப்பாவி என்ன செய்கிறான் என்பவற்றைப் பற்றிக் கவலைப்பட தேவி பகவதி இருக்கிறாளே. ஊர் மக்களுக்கு ஆயிரம் கவலை. இதுவும் கூடி என்னத்துக்கு அவர்களுக்கு? அப்படித்தான் பொதுவான மனநிலை.

சாமியாடியும் கடவுளை மனசார நம்புகிறவன். பகவதியை தனக்காக வழிபடுவதை விட ஊருக்காக வழிபடுகிறவன். விரதம் இருந்து சந்நதம் வந்து வாள் எடுத்துக் கையில் பிடித்துச் சலங்கை ஒலிக்க ஆடி, நாடும் வீடும் சிறக்க, தோஷம் தீரப் பரிகாரம் சொல்வான். அதில் நிறைய சந்தோஷமும் காணிக்கையாகக் கொஞ்சம் வருமானமும் பெறுகிறவன் அவன். வெளிச்சப்பாட்டின் வாழ்க்கை நசித்துப் போகிறபோது அவன் நம்பி வணங்கி வாழ்த்திப் பாடிய பகவதி அம்மை மேல் அவனுக்குக் கோபம் வருகிறது. இது தான் எம்.டி என்ற எழுத்தாளன் எழுதியது. அதை இயக்கிய எம்.டி என்ற திரைப்பட இயக்குனர் அந்த சாமியாடியைத் தேடி அலைந்து அற்புதமான நடிகரான பி.ஜே.ஆண்டனியில் அவனைக் கண்டார். கவியூர் பொன்னம்மா வெளிச்சப்பாட்டின் மனைவியாக, குழந்தைகளின் பட்டினியைக் காணச் சகிக்காமல் நெறி தவறி அவர்களின் பசி போக்குகிற அன்னையாக நடிக்க வந்தார். எம்.டி எழுதிய படிக்கு, எம்.டி பார்த்த படிக்கு, கற்பனை செய்தபடிக்கு நிர்மால்யம் அமைய அந்த அற்புதமான நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் முக்கிய காரணம். எழுத்தின் நீட்சியாக அதன் திரையாக்கம் அமைந்ததாகவே எனக்குப் படுகிறது.

  • நான்: நிர்மால்யம் படத்தின் கடைசிக் காட்சியில் வெளிச்சப்பாடு நடனமாடியபடி தன்னையே வாளால் குத்திக் கொண்டு வாயில் கொப்பளித்து ஊறும் ரத்தத்தை தேவி விக்கிரகத்தின் முகத்தில் உமிழ்ந்து உயிரை விடும் காட்சி வருகிறதே. இறக்கும்போது வெளிச்சப்பாடு தெய்வத்தை நம்பாத நாத்திகனாக மாறியதாக இதைக் கொள்ளலாமா?

 

எம்.டி: அப்படி இல்லை. தான் மலை போல நம்பிய ஒருத்தர் தன்னைக் கைவிட்ட கோபம் அது. எங்கள் ஊரில் ஒரு சாமியாடி இருந்ததாகச் சொன்னேனே. அவன் சாதாரணமாகப் பேசும்போது ‘ஆத்தா கிட்டே கேட்டேன் வாசு. அவளுக்குக் கோபம் போல இருக்கு. எதுக்கும் நீ அந்தப் பக்கம் போனா அந்தப் பொம்பளைக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுப் போ. பாவம் அதுக்கும் யாரு இருக்கா?’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். பகவதி அம்மன் பெயரைச் சொல்லி ஒரு கைப்பிடி நீரை மேலே அள்ளித் தெளித்தால் நோய் எல்லாம் போய்விடும் என்று உள்ளபடிக்கே நம்பியவன் அவன். சக மனிதர்கள் போல தினசரி நெருங்கி உறவாடி உரையாடும் பகவதி அம்மையும் அவனுக்கு வாழ்க்கையில் ஒரு அம்சம். தெய்வாம்சம் எல்லாம் அதுக்கு அப்புறம்.

தொடரும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன