பெருநாவல் மிளகு – ஒரு சிறு பகுதி
———————————————–
காவேரி நதியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதியோ மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும்.
அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள் கொண்டுதரும் நீர்ச் சுவையும், நதிவாசனையும் துறந்து உப்புச் சுவை மீதுர கடல்வாடை கொண்டு, ஷராவதி காணாமல் போவாள்.
நதி கடலோடு கலக்கும் கழிமுகத்துக்கு முன்னால் மடைமாற்றி வேகத்தைக் கட்டுப்படுத்தி, நீராடவும், படிகளில் அமர்ந்து கால்தொட ஆறு நனைத்துப் போகவும் நேரம் செலவிட, தண்ணீர்த்துறைகள் சந்தடி மிகுந்து பரபரப்பாக இயங்கும் நிலாநாள் காலை.
இருபத்தைந்து வருடமாக காசிரை இந்த நதி நீராடலுக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் அவளோடு பாடிக் கொண்டும், சிறுபறை கொட்டிக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் வருகிற கன்யகைகளில் சிலர் கல்யாணமாகிக் காணாமல் போகிறார்கள். புதிதாக சின்னப்பெண்கள் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். அவளை வாடி போடி என்று உரிமையோடு அழைத்தபடி கூட வந்த பெண்கள், வயதுக்கு முன் வந்து சேரும் இளம் முதுமையோடு, அவர்களின் பனிரெண்டு வயது மகளை நதிநீராட காசிரையோடு அனுப்பிவைக்கிறார்கள்.
‘அடியே காசிரை’ விளிகள் ‘அக்கா காசிரை’ ஆயின. அவை ’அத்தை காசிரை’யாகி, அதுவும் போய் ’காசிரை அம்மாளாக’, ‘காசிரை முத்தச்சி’யாகத் தேய இன்னும் நிறைய வருடங்கள் மீதி இல்லை என்பதை காசிரை அறிவாள்.
கூட வந்தவர்கள் தொலைந்து போன அந்த சோகத்தை நினைத்தால் எதற்கு நதிநீராட்டு நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களுக்காக இல்லை, காசிரை தனக்காகப் போகிறாள். இனியும்
”அக்கா தண்ணீர்த் துறை வந்தாச்சு. மஞ்சள்பொடியும் வாசனைப் பொடியும் எடுத்துக்கிட்டு உங்க ரதம் வந்து சேர்ந்ததும் நீராட்டு தொடங்க வேண்டியது தான்”.
ஒடிசலான பொற்கொடி போன்ற இளம்பெண் ஒருத்தி வெண்பல் ஒளிரக் கேட்டாள். காசிரை அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டாள்.
“வந்துக்கிட்டிருக்குடா தங்கம்”.
காசிரையின் புன்முறுவலும் அழகிய பெரிய விழிகளும் அதிகாலை வெளிச்சத்தில் அழகாகத் தெரிய கோச் வண்டி தண்ணீர்த் துறைக்கு வந்து நின்றது. தேரோட்டி வந்த அருகமகாவீரன் குதித்து இறங்கினான்.
”காசக்கா, நீங்க சொன்னபடி வெளிச்செண்ணெய், அரப்புப் பொடி, வாசனைப்பொடி, மல்லிகைப் பூ, கருந்துளசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் பிரம்பு கடகத்துலே தனித்தனியாகப் போட்டுக் கொண்டு வந்திட்டேன். சரியா இருக்கா பாருங்க” என்றான் அவன்.
”சரி நான் பார்த்துக்கறேன். நல்ல காரியம் செய்திருக்கே. உன்னை அருகதேவரும் மகாவீரரும் சேர்ந்து ஒரு மாசம் மதுசாலைக்கு போகாமல் பார்த்துக்கொள்ளட்டும். இப்போ கிளம்பு. ஆண்கள் இன்றைக்கு பகல் வரை வரமுடியாத பிரதேசம் இது”.
அருகமகாவீரன் கண்ணை அகல விரித்து காணாதன கண்டது போல் நாலு திசையும் திரும்பித் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்ததை உடனடியாகத் தடுத்து அவனை ஆட்கொண்டு அனுப்பிவைத்தாள் காசிரை.
மிங்கு எங்கே காணோம்? அவள் வரக் காத்திருக்கலாமா? அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது ரத சாரதி அருக மகாவீரன் திரும்ப படித்துறை நோக்கி வந்தான். ஊஊஊ என்று சத்தமிட்டு அவனைப் பெண்கள் விரட்ட, காசிரையிடம் அவசரமாகச் சொன்னான் அவன் –
மிங்கு அக்கா வரமுடியலியாம். சொல்லச் சொன்னாங்க. மறந்துட்டேன்”.
அருகன் மிங்குவை எங்கே பார்த்தானோ.
ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.
ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற நிலைமை துணிச்சலை ஏற்படுத்த, நீராட்டு கட்டத்தின் படிகளில் மேல்துணி துறந்த பெண்டிர் ஒருத்திக்கு ஒருத்தி முதுகு தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்கள். விளையாட்டாக முதுகில் இருந்து முன்னால் படர்ந்த கைகள் குவிந்து பற்ற, சிரிப்பும் கூச்சலும் ஒவ்வொரு வினாடியும் மிகுந்து, அடங்கி, மீண்டும் அதிகரித்துக்கொண்டிருந்தன.
“அக்கா, முதுகு தேய்ச்சு விடவா?” என்று காசிரையிடம் உரிமையோடு ஏழெட்டு சிறுமியர் அவள் அமர்ந்த கல்படிக்கு அடுத்த மேற்படியில் இருந்து, முதுகில் தொட்டு மெல்ல அடித்துச் சிரித்தார்கள். இன்னும் கீழிருந்த படியில் அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்கள் நான்கு பேர் ரம்மியமாகப் பாட ஆரம்பித்திருந்தார்கள். அந்தப் பாட்டின் தாளமும் இசையும் மனம் கவர தண்ணீர்த்துறையே கூடச் சேர்ந்து பாடியது. எண்ணெய் பூசிய தொடைகள் மின்னி தாளம் கொண்டு சிலிர்த்தன –
கும்மியடி பொன்னூர் பூமி முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி.
நம்மை சூழ்ந்து நன்மை பெருகுது
உண்மை இதுவென்று கும்மியடி.
காசிரை எண்ணெய்க் காப்பு கொள்ள நிறைய நேரம் பிடித்தது. சிறுமிகளின் தலையில் எண்ணெய் வைத்து வாழ்த்த நிறையப்பேர் காசிரையைக் கோரினார்கள்.
கொஞ்சம் பெரிய பெண்கள் அவள் கையால் எண்ணெய் வாங்கி நெற்றியிலும் பின் கழுத்திலும் உச்சந்தலையிலும் விரலால் தொட்டுக்கொண்டு ஷராவதி தாயை வணங்கி விரைவில் மணநாள் காண அருளும்படி கண்மூடி பிரார்த்தித்து, நதியில் நீராடி வந்தார்கள்.
இவர்களுக்கும் பிறகு, எப்படி மேகம் போல் அடர்ந்து கருத்த கூந்தலைப் பராமரிப்பது, உதடுகள் வெடிக்காமல் மிருதுவாக காட்சியளிக்க என்ன செய்யணும், இன்னும், பலருக்கும் தேவையான, தொய்வு இல்லாமல் திண்ணென்று பெரியவையாக எப்போதும் திகழ என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் குறிப்புகளை காசிரையிடம் கேட்டுத் தெளிவு பெற ஒரு கன்னியர் கூட்டம் நின்றது.
காசிரையின் முதுகையும், உருண்ட தோள்களையும் தடவி மெய்மறந்து பாராட்டவும் சில பெண்கள் காத்திருந்தார்கள். அந்த வழுவழுத்த உடல் எப்படிக் கிடைக்கும் என்ற கேள்விக்கு அவள் சொல்கிற ஒரே பதில் – பயத்தம்பருப்பு மாவைத் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்துக் குளி.
ஹொன்னாவர் பெண்கள் வந்தாலே பசுநெய் ஊற்றிப் பிடித்த மாவுருண்டை நடந்துவருவது போல் வாடை தீர்க்கமாக அடிக்க பயத்தம்பருப்பு கவசம் முக்கியக் காரணமானது. கையும் காலும் முடி நீங்கி வழுவழுத்துப் போனதாக காசிரைக்கு நன்றி சொன்னவர்கள் அநேகம்.
ஸீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் – எழுத்து பிரசுரம் வெளியீடு 2022