குறிஞ்சிக்கு அலுப்பும் எரிச்சலுமாக வந்தது. சமவெளி மனுஷர்களுக்கு கால்நடையாகவும், எருது இழுக்கும் வண்டி ஏறியும், குதிரை சவாரி செய்தும், ஒட்டகம் ஏறிப் பாலை நிலம் கடந்தும் சதா மலைகளுக்குத் தாவியேறி அங்கே திமிர்த்து அலையும் பெண்டிரைக் கண்ணிமைக்காது நோக்கி வருவதில் என்ன ஓர் ஈடுபாடு!
கொம்புத் தேன், தினை மாவு, வரகரிசி, உலர்ந்த உடும்பு மாமிசம் என்று பெருமளவு மலைபடு பொருள்கள் வாங்கி, அரிசியும், கேப்பையும், மதுவும் கொடுத்துப் பண்ட மாற்று செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் நிறைய உண்டு.
அவ்வப்போது, செல்வம் படைத்த சமவெளி மனிதர்கள் பொன்னும் முத்தும் கொடுத்து அழகிய சிறு குழந்தைகளை வாங்கிப் போய் வளர்ப்பது உண்டு.
அழகிய மலைப் பிரதேசக் கன்னியரைக் கடல் பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கும், நெல் செழித்துக் கதிர் தாழ்த்தி வளரும் ஆற்றுப் படுகை வயல்பூமிக் கிழார்களுக்கும் திருமணம் செய்வித்து அனுப்புவதுண்டு. அந்தப் பெண்கள் அப்புறம் மலையேறி உற்றாரையும் பெற்றோரையும் சந்தித்து உற வு கொண்டாடிப் போவது அரிதினும் அரிது.
வயல்காட்டில் விதைக்கவும், நாற்று நடவும், நீர் பாய்ச்சவும், களை எடுக்கவும், அறுவடை செய்யவும் கற்றுக்கொண்ட அவர்கள் மரமேறித் தேனடை பிழிந்து தேனீ கொட்டாமல் தேன் எடுக்கவும், ஆடவர் வேட்டையாடிக் கொண்டுவந்த பச்சை மாமிசத்தை மலையகப் பெருந்தெய்வம் முருகனுக்குப் படைத்து வேலாட்டமும், அவன் அம்மைக்காக துணங்கைக் கூத்தும் ஆடிப் புளிப்பு மதுவை மாந்தி மகிழ்ந்திருக்கவும் அநேகமாக மறந்திருப்பார்கள்.
விருந்தாளி அதிரசம் கொண்டு வருவதை எதிர்பார்த்திருக்கும் குழந்தைகள் போல், பிறதிணை மாந்தர் மலை ஏறி வரும்போது வெல்லம் கொண்டு வந்து தருவதை ஆவலோடு எதிர்பார்த்து மலைஞர்கள் இருப்பார்கள்.