இன்று சொல்வனம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகி இருக்கும் என் ’மிளகு’ பெருநாவல் அத்தியாயம் 40-லிருந்து ஒரு சிறு பகுதி-
கெரஸுப்பா கிருஷ்ணஸ்வாமி திருக்கோவிலும் தலபுராணமும் மிளகு பெருநாவலுக்காக நான் எழுதிய பக்திபூர்வமான புனைவு.
ஜெரஸூப்பா ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி திருக்கோவில் ஆஷாட மாதம் அஷ்டமி
ஜெரஸுப்பா நகரில் புகழ் பெற்ற ஸ்தலங்களில் முதன்மையானது நகருக்கு வடக்கே ஸ்ரீபாத பஹிச்சா என்ற திருவடித் தோட்டம் என்னும் வளம் மிகுந்த செய்வனத்தின் மத்தியில் அமைந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அம்பலம் என்னும் திருக்கோவில் ஆகும்.
தமிழில் திருமங்கையாழ்வாரும், தெலுங்கில் அன்னமாச்சார்யாவும் பாடிப் பரவிய மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும் இது. ராமாயணத்தில் வரும், சீதா பிராட்டியின் மெல்லிய பயோதரங்கள் நோகும்படி கீழ்மைச் செயலாகக் காக்கை வடிவெடுத்து வந்து அலகால் கொத்திய அடாத செயலுக்காக ராமபிரானால் உடனே சம்ஹாரம் செய்யப்பட்டவன் காகாசுரன்.
ராமபிரானால் திரேதாயுகத்தில் சம்ஹரிக்கப்பட்ட அவனுடைய உயிர் இன்னும் முடிவடையாமல் கிருஷ்ண பரமாத்மாவின் துவாபர யுகத்திலும் குற்றுயிரும் கொலையியுருமாக மேற்படி காகாசுரன் ஜெரஸோப்பா ஸ்ரீபாத பஹிச்சாவில் ஆல் மரத்தின் மேல் கிடந்தபோது ஸ்ரீகிருஷ்ணனும் ராதே பிராட்டியும் நகர்வலம் வந்தபோது ஆல்மரம் விட்டுக் கீழே பறந்து, ராதையின் பிடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்திட ஸ்ரீகிருஷ்ணன் தன் புனிதமான வலங்கையால் காகாசுரன் தலையில் நெற்றிப் பொட்டுகளுக்கு நடுவே விரல் வைத்து அழுத்தினான்.
காகாசுரன் இருகை கூப்பி வணங்கி, கிருஷ்ணா, நான் ராமாவதாரத்திலேயே திருந்திவிட்டேன். இப்போது உன்னைக் கூப்பிட்டு பணிந்து வணங்கி உயிர் நீக்க இங்கே இத்தனை நாள் காத்திருப்பு வீணாகுமோ எனப் பயந்தேன். நகர உலாவின் போது நகரமே கிருஷ்ணனான உன்னையும் ராதாபிராட்டியையும் வைத்த கண் வாங்காமல், கேட்ட செவி அனங்காமல் இருக்க, கவன ஈர்ப்பு செய்யவே ராதா ராணியின் சேலை முந்தியைப் பிடித்திழுத்தேன். சந்தோஷமாக நான் இறுதி சுவாசம் வலிக்கிறேன் கிருஷ்ணா என்று விடைபெற்றும் காக்கை வடிவில் இருந்து அவன் சுவர்க்கம் புக இயலாமல் இருக்க, பிருகு மகாமுனிவர் சொல்படி ராதா சந்நிதியில் ஒரு மண்டலம் கிடந்து காகாகாகா என்று விடாமல் காக்கச் சொல்லி (கா-கா-கா-கா) இரைஞ்சிட சுவர்க்கம் புகுவாய் எனச் சொல்லிப் போந்தார்.
அந்த மாதிரியே செய்து, உய்விக்கப்பெற்று சுவர்க்கம் போகும்போது கிருஷ்ண பகவானிடம் இரைஞ்சியது இப்படி இருந்தது –
காவெனக் கேட்டதால் காத்து ரட்சித்து சொர்க்கம் புகுவதும் தவறாது நடக்கும். இப்படித் தலபுராணம் கொண்ட ஜெர்ஸுப்பா ஸ்ரீகிருஷ்ணா அம்பலத்தில் முந்தாநாள் காகத்தஷ்டமி என்பதால் பெரிய தோதில் பக்தர்கள் அடியார்கள் திருக்கூட்டம் கூடியிருந்தபோது கூட்டத்தின் வெளியே கோவில் வளாகத்தில் தென்மூலை வெடிப் பரம்பில் காணிக்கை வெடி வெடித்து வெடி வழிபாடு கேரளீய வழக்கம்போல் நடந்தேறியது. அந்நேரம் கோவில் தெற்கு வசத்தில் இருந்து பலமான வெடிச் சத்தம் கேட்டது.
கெருஸூப்பா கிருஷ்ணன் அம்பலத்தில் காகத்தஷ்டமி