அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் காமக்கிழத்தியாக, புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்துக்குத் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.
”ஒவ்வொருத்தரா வாங்கோ. எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்திலே உள்ளே வந்தா பின்னாலே இருந்து தரிசனம் பண்ணிண்டு இருக்கறவாளுக்கு ஒண்ணும் தெரியாது”. கோவில் ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் கணீரென்ற குரலில் சொல்லித் தமிழில் பழம்பாடல் எதுவோ பாட்டும் இல்லாமல் வாசிப்பும் இல்லாமல் ராகம் இழுக்கிறார். தேவாரமா என்று கேட்கிறார் பரமன். அவர் முகம் தீபாராதனை வெளிச்சத்தில் தமிழ்ப் பாடல் கேட்ட பெருமகிழ்ச்சியில் மலந்திருக்கிறது.
’தேவாரமா?’ என்ற கேள்வியை எப்போதாவது சந்திக்கும் பட்டரும் சந்தோஷம் அடைகிறார்.
”ஆமா, திருக்கோகர்ணம் தேவாரம். அப்பரும் பாடியிருக்கார். சம்பந்தரும் பாடியிருக்கார். இது அப்பர் தேவாரம்” என்று பாட ஆரம்பிக்கிறார் –
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான்காண்
தாழ்சடையான் காண் சார்ந்தார்க்கு அமுதானான்
மிளகு பெருநாவலும் திருக்கோகர்ணமும்
மொழி புரியாவிட்டாலும் உதவி மடையன் ரமணதிலகனும் சுற்றுப் பற்றுக் காரியம் நோக்கும் பெருந்தேவனும் பரமன் பின் நின்று பாடல் முடியும்வரை கண்மூடிக் கைகுவித்து நெக்குருகி இருக்கிறார்கள்.