கலகலவென்று சத்தம். குறிஞ்சியின் குடிலுக்கு வெளியே குயிலியும் வானம்பாடியும் அவரவர் கையில் எடுத்த புல்லாங்குழலோடு அந்தரத்தில் நின்றிருந்தார்கள்.
குறிஞ்சி அவர்களை ’நீங்கள் இப்படி நிற்கும்போது பார்க்க யட்சி போல் இருக்கிறீர்கள். கீழே வந்தால் காடன் என்னை மறந்து விடுவான்’ என்று பகடி பேச அவர்கள் திரும்ப நகைத்தார்கள். என்னையும் தான் என்றாள் மாடத்தி. மறுபடி சிரிப்பு.
”நாங்கள் அவசரமாக எங்கள் காலத்துக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது. போய் விரைவில் திரும்ப வருகிறோம்”. குயிலி சொன்னாள்.
”ஏ பொண்ணுங்களா, மருதையிலே வட்டுக் கருப்பட்டியும் கருவாடும் வரும்போது வாங்கிட்டு வாங்க. கையைப் பிடிச்சுக்கிட்டுப் பத்திரமாகப் பறந்து போங்க. மழை வந்துச்சுன்னா மரத்தடியிலோ மரக் கிளையிலோ தங்கிக்குங்க” என்று சரம்சரமாகப் புத்திமதி வழங்கினாள் குறிஞ்சி.
”ஒண்ணும் கவலைப்படாதே குறிஞ்சி. எவ்வளவு வேகமாக வரமுடியுமோ அவ்வளவு வேகமாகத் திரும்பி வருகிறேன்
என்றபடி குயிலியும் தொடர்ந்து வானம்பாடியும் விண்ணேறிச் சிறு பொட்டுகளாகத் தோன்றும் வரை பார்த்திருந்தபடி குடிலுக்குள் வந்தாள் குறிஞ்சி.
நண்பர்களே. போய் வாருங்கள். நீங்கள் வரும்போது புதுக் கூத்து உங்களுக்காக உருவாக்குகிறோம் என்றான் முதுகிழவோன் வானம் பார்த்து. அந்தப் பெண்கள் ஒரு வினாடியில் காணாமல் போனார்கள்.
வாசலில் பராக்கு பார்த்தப்டி நின்ற சீனர் பறப்பதாகப் போலி செய்து கூவெனக் கூச்சலிட்டு குழந்தை போல் ஓடினார். அந்தச் சாவியும் மருந்தும் இல்லாமல் போனால் என்ன செய்வீர்கள் என்று சீனரிடம் முதுபெருங்கிழவன் வம்பு விசாரித்தான். உங்களிடையில் மருத்துவன் இல்லையா, மருந்து இல்லையா என்று அவர் பதிலுக்கு மொழிபெயர்ப்பாளன் வழி விசாரிக்க, ஓ உண்டே என்றான் காடன்.
குழலான ட்ரான்சீவர் – நாவல் : தினை