என் பயோ பிக்ஷன் நாவல் தியூப்ளே வீதி இப்போது ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியாடாக வந்துள்ளது. நாவலில் இருந்து-
———————————————————————————
மொத்தமே இருபது பேருக்கு நடைபெறும் வகுப்பு என்பதால், பின் வரிசையை ஒட்டி இருக்கும் ஒருக்களித்த கதவைத் திறந்து இஷ்டம் போல வெளியே நழுவ முடியாது. உள்ளே திரும்பி வந்து, கும்பலில் ஒருத்தனாக உட்கார்ந்து, ரஃப் நோட்டில் பால் பாயிண்ட் பேனாவால், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் அம்புஜவல்லியையோ, உமாராணியையோ, புஷ்பகலாவையோ கோட்டுச் சித்திரமாக வரைய முடியாது. லெய்பினிஸ் தியரம் மூலம் சக்ஸஸிவ் டிஃபரன்சிஷேயன் நிறைவேறும் உலக மகா அதிசயத்தை கணக்கு புரபசர் ராமநாதனோடு சேர்ந்து மெச்ச வேண்டும்.
நான் அவசரமாக லெச்சு பக்கம் திரும்பி, வர்றதுக்கு இல்லை என்று தோளைக் குலுக்கினேன். இந்த ஊருக்கு வந்து கப்பென்று பிடித்துக் கொண்ட சைகை வழக்கம்.
லெச்சு ‘என்ன?’ என்று அபிநயித்தான். அவன் நிற்கிற கட்டட இடுக்கிலிருந்து நாட்டியமே ஆடலாம். நான் இருக்கப்பட்ட இடம் அப்படியா?
திரும்பத் தோளைக் குலுக்கினேன்.
‘சுளுக்கிக்கப் போவுது. பார்த்து’.
லெய்பினிஸ் தியரத்துக்கு மொத்தக் குத்தகைக் காரர் தான். நின்ற இடத்தில் இருந்து டிபரன்சியேஷனுக்கு ஓய்வு கொடுத்து என்னைக் கிண்டலடிக்கிறார். அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அம்புஜவல்லியும், உமாராணியும், புஷ்பகலாவும் கெக்கெக்கெக்கென்று சிரித்ததை எப்படிப் பொறுக்க?
‘ஐ யாம் சாரி’.
மிடுக்காகச் சொல்லி வெளியே வர நினைத்தாலும், பதற்றத்தில் பாதி வார்த்தை தொண்டையில் நின்று ஐ ஐ ஐ என்றபோது நல்ல வேளையாக மணி அடித்து முழு வகுப்புமே வெளியேறியது.
மண்டபத்து மறைவிடத்தில் இருந்து பிரத்யட்சம் ஆனான் லெச்சு.
‘முக்கியமான வேலை இருக்குன்னா, வர மாட்டேங்கறியே’ .
அவன் அலுத்துக் கொண்டான்.
‘நீ எலக்ஷனுக்கு வேலை செய்வேன்னு பார்த்தா, நழுவிட்டுப் போறே. உடனொடத்தவன் எல்லாம் என்னமா உழைக்கறான். கமலஹாசன் மாதிரி தலைமுடி வச்சுக்கிட்டா மட்டும் பத்தாதுடா. கமல்ஹாசன் மாதிரி உழைப்பு தேவை. புரியுதா?’.
லெச்சு முழங்கினான். எனக்குப் புரிந்தது. ஆனால் லெச்சு மெச்சும் விதத்தில் கமல்ஹாசன் என்ன மாதிரி உழைத்தார் என்பது தான் புரியவில்லை.
‘மாணவன்’ என்று சமீபத்தில் ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் சினிமா பார்த்தோம். பார்த்தோம் என்றால், எங்கள் கடைசி வரிசை கோஷ்டிதான்.
என்னோடு ரெட்டைத் தெரு பிராயத்தில் இருந்து, ரெட்டைத் தெருவுக்கும் வந்து, கூட நின்று கிரிக்கெட் ஆடாமல் போனவர் கமல்ஹாசன். அவர் தியூப்ளே தெரு வயசுக்கு இப்போது என்னோடு வந்திருந்தார்.
‘மாணவன்’ படத்தில் கமல், குட்டி பத்மினியோடு ஆடிய ‘விசிலடிச்சான் குஞ்சுகளா’ பாடல் லெச்சுவுக்கு விவித்பாரதி போர்ன்விட்டா ஜிங்கிள் போல, எப்போதும் புத்துணர்ச்சி தருவது. மதராஸ் ரேடியோ ஸ்டேஷன் விவித்பாரதிக்கு போஸ்ட் கார்ட் போட்டு தினசரி ஒலிபரப்ப வைத்த கீதமாகிப் போனது அந்தப் பாட்டு. ‘மாணவன்’ படம் மெஜந்தா தியேட்டருக்கு வந்து மூணு வாரம் ஓடிக் காணாமல் போகும் வரை தினசரி சாயந்திரம் காட்சியில் லெச்சு ஆஜர். கமல் ஆடி முடிப்பது மட்டும் பார்த்துத் திருப்தியோடு தினம் வெளியே வந்தவன் அவன்.
‘என்ன டான்ஸ் என்ன டான்ஸ், மச்சான் பிச்சு உதர்றாண்டா’ என்று உடனடியாக கமலஹாசனை உறவாக்கிக் கொள்கிற ஆனந்தத்தை என்னிடமும் எதிர்பார்க்கிறானோ என்னமோ.