திண்ணை இதழில் பிரசுரமாகத் தொடங்கி இருக்கும் என் புதிய நாவல் ‘தினை’யிலிருந்து ஒரு சிறு பகுதி
——————————————————————————————–ஆம் ஆம் என்றாள் குயிலி. அவள் சுனையில் நீராடும்போது இடுப்புக்குக் கீழ் நெகிழ்த்திய சீலை இன்னும் நெகிழக் காடன் காத்திருந்ததைச் சொல்லலாமா என்று யோசித்தாள்.
வேணாம், மனுஷப் பிறவிகளின் மேம்பட்ட அறிவும், உழைப்பும், அனுபவமும் இந்த அரசாங்கத்துக்கு வேண்டும். புகார் சொன்னால், அவர்களை சிறு மீறல்களுக்கு எல்லாம் வெறுக்கத் தக்க வண்ணம் சித்தரித்து விடுவார்கள் தேளர்கள்.
”மலைபடு கிழவோனாக வந்தவன் கடைச்சங்கப் பெரும் புலவன் நக்கீரன். பாட்டு எழுதாத நேரத்தில் அங்கம் பழுதுபட அரிவாளை நெய்பூசி பங்கம் பட இரண்டு கால் பரப்பி சங்கதனை கீறுகீறென்று அறுக்க வைத்திருந்தேன். அது சமூக நோக்கில் சரியானதன்று என்று பிற்கால சமூக விமர்சகர் பொது யுகம் 2024இல் திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் சொன்னதால் நீக்கம் செய்து விட்டேன். உங்கள் மானுட இனத்தின் பிரச்சனைகள் ஒன்றும் புரிபடுவதே இல்லை.” பெருந்தேளர் அலுத்துக் கொண்டார்.
வேறு என்ன சிறப்புச் செய்தி? செந்தேளர் அடுத்துக் கேட்டார்.
குயிலி சொன்னாள் –
“நான் கவிதையின் மூலத்தை அறியத் தனிப்படப் பேசியபோது புலவரும் அன்போடு பேசினார். எப்படி கவிதை உருவாகிறது என்பதை அவர் எழுதுவது கொண்டு நேரடியாக அறிய நேர்த்தியாக இருந்தது. அவர் பாடல் அகநானூறில் ஒன்றாகவோ கொஞ்சம் மாற்றி புறநானூறில் ஒன்றாகவோ தொகுக்கப் பட இருக்கிறதாகச் சொன்னார். புரியாமல் எழுதிவைத்தால் இரண்டிலுமே வருமா என்ற என் கேள்விக்கு மறுமொழி சொல்லவில்லை. அவருக்குக் கவிதை எழுதுவதைவிட அது இலக்கணப்படி இருக்கிறதா என்று சோதிப்பதுதான் கடினமான பணி என்றார்.”.