புதுப் பதிப்பு காணும் என் நூல்கள் வரிசையில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் புது வெளியீடாக இந்த ஆண்டு வந்த நாவல்கள் –
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரோ, தியூப்ளே வீதி
இப்போது புதுப் பதிப்பு கண்ட பயோ பிக்ஷனல் நாவல் – நெம்பர் 40, ரெட்டைத் தெரு
நெம்பர் 40, ரெட்டைத்தெரு நாவலில் இருந்து
————————————————————————————————-
மார்கழி விடிகாலையில் தலையில் அந்தப் பட்டுத் துணியைத் தோளில் வழிகிற கம்பீரமான முண்டாசாகக் கட்டிக்கொண்டு மீசை இல்லாத பாரதியார் மாதிரி வெங்கடேசன் சிவன் கோவில் சந்நிதானத்துக்கு முன்னால் நிற்பார். திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவையும் ஒவ்வொரு பாட்டாகப் பாடி நிறுத்த, சுந்தரேசக் குருக்கள் பின்னால் வளைந்த காலை உந்தி திருவாச்சி விளக்கில் தீபாராதனை கொளுத்தி சிவனுக்குக் காட்டுவார். மடைப்பள்ளியில் வெண்பொங்கல் தயாராகிற வாடை சுகமாகக் காற்றில் மிதந்து வர, நாங்கள் திருவெம்பாவை கவுண்ட்-டவுனில் கவனமாகக் கன்னத்தில் போட்டுக்கொண்டு காத்திருப்போம். விடியற்காலம் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருப்பதால், சிலநாள் குளிக்காமல் பிரசாதம் வாங்கப்போன குற்றத்துக்காகவும் இப்படிக் கன்னத்தில் போட்டுக்கொள்வது உண்டு.
“போற்றி எல்லா உயிர்க்கும்” வெங்கடேசன் கடைசி திருவெம்பாவை பாடி முடிப்பார். உத்தரீயத்தை அவிழ்த்து ஜாக்கிரதையாக மடித்து அஞ்சால் அலுப்பு மருந்து பெயர் எழுதிய துணிப்பையில் அடைத்துக் கொண்டிருக்கும்போது கோவில் மடைப்பள்ளி சுயம்பாகி மாதேசுவரன் ஒரு வெங்கலப் பாத்திரத்தில் ஆவி பறக்க வெண்பொங்கலை, மேலே ஒரு செம்புத் தட்டால் மூடி எடுத்து வருவான். பிளாஷ் போட்டோ எடுக்கிறதுபோல் அரைவினாடிக்கும் குறைவாக அந்தத் தட்டைத் தூக்கிப் பிடித்து சிவனுக்கு உள்ளே இருக்கிற நைவேத்தியத்தைக் காட்டி டப்பென்று உடனே மூடிவிடுவான் மாது. உள்ளே இருந்தபடிக்கே கையை நீட்டிச் சிவனோ, குருக்களோ, முண்டாசை அவிழ்த்த திருவெம்பாவை குமாஸ்தாவோ தட்டோடு பிடுங்கிக்கொண்டு போய்விடலாம் என்ற பயம் காரணமாக இருக்குமோ என்னமோ.
உபயதார்களுக்கு ஆளுக்கு இரண்டு கட்டி பொங்கல், காளாஞ்சியாக வெற்றிலை, பாக்கு, ரொம்பவே கனிந்த இத்தணூண்டு பூவன் பழம், தினசரிப் பத்திரிகையை நீளவாக்கில் கிழித்து மடித்த பொட்டலத்தில் வீபுதி, குங்குமம், பூமாலையில் நறுக்கிய நாலு ஜவந்திப்பூ எல்லாம் வழங்கும்வரை பொறுமையாகக் காத்திருப்போம். இலை நறுக்கில் வைத்து மாது எங்கள் கையில் தொப்பென்று போடுகிற அந்தப் பொங்கலின் ருசி வாழ்க்கையில் அப்புறம் வேறு எந்தப் பொங்கலிலும் கிடைத்தது இல்லை.
மார்கழி மாதம் பஜனைக் கோஷ்டிகளின் மாதம். முதல் பஜனை, கோவில் தாற்காலிக நிர்வாகி கந்தன் ஃபான்ஸி ஸ்டோர் ராமநாதன் வகையறாக்கள் கோவில் வாசலில் இருந்து தொடங்கி ஊர் முழுக்கச் சுற்றி வலம் வருவது. சிரஸ்தார் சேஷன், ரிடையரான வாத்தியார் சிவராமன், ஸ்டாம்ப் வெண்டர் தாத்தா போன்ற ‘அறுபது பிளஸ்’ ஆத்மாக்களின் இந்த கோஷ்டியில் யாராவது ஒருத்தரே கையில் ஜால்ராவோடு லாகவமாக பிடியரிசிப் பெட்டியையும் வயிற்றோடு கட்டித் தூக்கிக்கொண்டு நடப்பார். ஒவ்வொருத்தரும் இழுக்கும் ராகம் ஒவ்வொரு திசைக்குமாகப் பறக்க, வேற்றுமையில் ஒற்றுமையாக ‘நாதன் நாமத்தை நான் மறவேனே, மறவேனே’ என்று இந்த கோஷ்டி ஒரு தேவாரத்தை உண்டு இல்லை என்றாக்கி முடித்து அடுத்த பயமுறுத்தலுக்குத் தயாராகும். பாதிப் பாட்டில் ராமநாதன் தனி சுருதியில் ‘ஹரி ஹரி’ என்று சத்தமாகச் சொல்வார். யார் வீட்டு வாசலிலோ அரிசி போடத் தயாராக யாரோ நிற்கிறதாக அர்த்தம். பிடியரிசிப் பெட்டிக்காரர் நாதன் நாமத்தில் மூழ்கி இருந்தால், அடுத்த வேண்டுகோள் ‘ஹரிசி-வா, ஹரிசி-வா’ என்று இன்னும் இரைச்சலாக வரும். இந்த இரைச்சல் இல்லாவிட்டால் தினசரி திருவெம்பாவை பாடிமுடித்ததும் கையில் வந்து விழும் பொங்கல் அளவு கம்மியாகிவிடலாம்.
‘அரிசி’ பஜனைக்கு அடுத்தது ராஜுத்தெரு பஜனை. இந்தத் தெருவில் சகலரும் சதா தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருப்பார்கள்.. காரம் மணம் குணம் நிறைந்த பட்டணம் பொடி, பெப்ஸ் என்ற இருமல் மாத்திரை வில்லை, கோரோஜனை (அப்படி என்றால் என்ன?) என்று கலந்து கட்டியாக விற்கும் கங்காராஜ் அண்ட் கோ கடைக்காரர், எந்தக் காலத்திலேயோ பிரிண்டிங்க் பிரஸ் நடத்திய ஹிட்லர் மீசைப் பெரியவர், பம்புசெட் மோட்டார் ரிப்பேர்கடை முதலாளி என்று சங்கீதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாத பெரிசுகள் மார்கழி வந்தால் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு, நெற்றி முழுக்க நாமத்தைப் பரக்கப் போட்டுக் கொண்டு படு குஷியாகக் கிளம்பிவிடுவார்கள். நாலு ஆர்மோனியம், சிப்ளாக்கட்டை, அப்புறம் பிரம்மாண்டமாக ராமர் பட்டாபிஷேகப் படம். அதன் மேல் சன்னமான பட்டுத்துணி – திருவெம்பாவை குமாஸ்தா முண்டாசு மாதிரி கிழிசல் இல்லாதது – அலங்காரமாக வழிந்தபடி இருக்கும். அழகான தெலுங்கில் அற்புதமாகப் பாடியபடி இந்த ராஜுத் தெரு மனிதர்கள் நாலுவீதி சுற்றி முடிக்க நடுப்பகல் ஆகிவிடும்.
இந்தத் தன்னார்வக் குழுக்களோடு போட்டி போட தாசில்தார் பஜனை கோஷ்டி வந்து சேர்ந்தது. ஆர்.டி.ஓ ஆபீசில் எங்கேயோ இருந்து ஒரு தாசில்தாரை ஊருக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள். குழந்தை குட்டி இல்லாத அந்த மனுஷர் ஆபீசில் சிவப்பு நாடா சுற்றிய •பைல்களை அப்படியும் இப்படியும் நகர்த்திய நேரம் போக, மிச்சப் பொழுதெல்லாம் பாடுவதிலேயே குறியாக இருந்தார். ‘பரிபாலித முதுகுந்தா, வேணும் தயை, நந்த நந்தன நந்தன முடிதன, அருள்வாய்’ என்று தமிழா, இல்லை பாலி, சுமத்ரா பாஷையா என்று முடிவாகச் சொல்ல முடியாத மொழியில் கீச்சுக் குரலில் பாடியபடி ஆபீஸ் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில் தாளத்தைத் தட்டிக்கொண்டு நகர்வலம் வருவார் இவர். தனியாக வந்தால் பிரச்சனை இல்லை. தாசில்தார் என்பதால் அவர் ஆபீசில் டவாலி சேவகர் தொடங்கி, லோயர், அப்பர் டிவிஷன் குமாஸ்தாக்கள், டென்-ஏ-ஒன் என்ற டெம்பரவரி கிளார்க்குகளில் பலபேரும் தாசில்தாருக்குப் பின்னால் மரியாதையான இடைவெளி கொடுத்துக் கூடவே நடந்து வருவார்கள். ‘மூன்றாவது சம்பளக் கமிஷன் தீர்ப்பை நடப்பாக்கு’ என்று அரசாங்கத்திடம் முறையிடும் என்.ஜி.ஓ ஊர்வலம் மாதிரி இருக்கும் இது.
தாசில்தார் பதவி மாறிப் போகும்போது ரயில்வே ஸ்டேஷன் கொள்ளாத கூட்டம். இனிமேல் அவர் திரும்பி வரமாட்டார் என்று தீர்மானப்படுத்திக்கொண்ட என்.ஜி.ஓக்கள் ‘நந்த நந்தன நந்தன முனிதன’ என்று கையைத் தட்டிப் பாடியபடி திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.