புதுப் பதிப்பு காணும், என்றும் புதிய நாவல் ’1975’ –

என் இன்னொரு நாவல் 1975 ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாகப் புதுப் பதிப்பு கண்டிருக்கிறது.

நாவலில் இருந்து, முன்னுரை
———————————————————————————————–
தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும், நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி காட்டும் வரலாற்றின் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது.

வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக் கற்பனை ஊதிப் பற்ற வைக்க அது, படர்ந்து பரவிய நாவல் நெருப்பானது. 1970-களில் நடந்து, என்னோடு சென்னை மேன்ஷனிலிருந்த நண்பர்கள் நினைவு வைத்திருக்கும் நிகழ்ச்சி அது. பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினத்தில் நிகழ்ந்தது. மேன்ஷன் அறைக்கு எங்கள் யாருக்கும் பரிச்சயமில்லாத ஒரு இளம் பெண் வந்து, வெளியே போகமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

அந்த வினோதமான அல்லது அபத்தமான சூழலை, நான்கு அரசூர் நாவல்கள் எழுதித் தீர்த்தபின் சாவகாசமாக ஒரு சிறுகதையாக எழுத உத்தேசித்தபோது மனதில் தோன்றிய சிந்தனை, அந்தக் காலத்தில் தானே எமர்ஜென்சி நடப்புக்கு வந்தது? எமர்ஜென்சி காலத்தில் நடப்பதாக ஒரு நாவல் எழுதினால் என்ன? 1975 நாவலின் எழுத்து மூலம் இதுதான்.

இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு இல்லை. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. எமர்ஜென்சி இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்வுகளில் பல நிகழ்ந்திருக்கும். ஆனால் அவற்றின் போக்கும் முடிவும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். இறுதி அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். திடுமென்று வந்து திடுமெனக் காணாது போகிற இவர்கள் எல்லோரும் கதைப் போக்கை நகர்த்த ஒரு கை கொடுத்துத் தேர் இழுக்கிறார்களா என்றால் இல்லை. தன்னைச் சுற்றிச் சுழலும் உலகத்தில் இன்னார் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றோ, இயக்கம் எல்லாம் தன்னையே மையமாகக் கொண்டு நிகழ வேண்டும் என்றோ விதி செய்யப் போத்தியால் முடியாது. ஆடுவாரும், ஆடி முடித்து அள்ளிச் செல்லாமல் ஒதுங்குவாரும், ஆட வந்தவர்களுமாகக் கதை விரிவதிலும் ஒரு ரசம் உண்டு.

Character Arc என்ற கதாபாத்திரத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ தட்டுப்படாதவர்கள் போத்தியும் மற்றவர்களும். கதைவெளியில் எமர்ஜென்சி தான் உருவாகி, வளர்ந்து, கலைந்து போகிறது.

எமர்ஜென்சி 1975-ஆம் வருடம் ஜூன் 25-ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. 1977-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்டது. இடைப்பட்ட இருபத்தோரு மாதங்களில் நிகழும் இந்த நாவலின் அத்தியாயங்களும் இருபத்தொன்றுதான்.

நாவலின் முதல் நான்கு அத்தியாயங்கள் சென்னையிலும், அடுத்த பனிரெண்டு அத்தியாயங்கள் தமிழகத்தில் ஒரு சிறு நகரத்திலும், இறுதி ஐந்து அத்தியாயங்கள் தில்லியிலும் நிகழ்கின்றன. தில்லியிலும், சென்னையிலும், நான் பிறந்த சிறு நகரத்திலும் வாழ்ந்து பெற்ற என் வாழ்வனுபவங்கள் நாவலில் கலந்திருக்கின்றன. வாழ்வனுபவத்தின் பின்பலம் இல்லாமல், வெளிநாடோ, உள்நாடோ, எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

பெருங்கதையாடல் இந்த நாவல் போக்கில் அயர்வு சேர்க்கக் கூடும் என்பதால் சிதறுண்ட கதையாடலாகக் கூறப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளின் நிகழ்ச்சித் தொகுப்பு நாவலாகிறது. எமர்ஜென்சியும் போத்தியும் இவை எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் சரடுகள்.

என் ஆருயிர் நண்பர் கிரேசி மோகன் வழக்கம் போல் நாவலின் முதல் பி.டி.எஃப் பிரதியைப் படித்து முதல் விமர்சகராக தினசரி தொலைபேசி, கருத்தும், மேம்படுத்த யோசனையும், பாராட்டும், கறாரான விமர்சனமும் அளித்தார். அவருக்கு என் நன்றி.

இந்தமுறை இன்னும் சில நண்பர்களும் நாவலின் சில பகுதிகளுக்கு நடைபெற்ற எடிட்டிங்கில் மகிழ்ச்சியோடு பங்குபெற்றார்கள். தகவல் ஒருங்கு இணக்கம் சரிபார்ப்பதில் இவர்களின் பங்கு சிறப்பானது. நாற்பது வருடத்துக்கு முற்பட்ட எமர்ஜென்சி கால வாழ்வு அனுபவமும், பணி இட அனுபவமும், இந்தக் கதை நிகழும் இடங்களில் வசித்த அனுபவமும், நல்ல வாசிப்பனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள்.

திருமிகு அனுராதா கிருஷ்ணஸ்வாமி, ஸ்ரீவத்ஸ் நடராஜன், பரத்குமார் பாலசுப்பிரமணியன் ஆகிய இந்நண்பர்களுக்கு என் நன்றி. நண்பர் ரமேஷ் வெங்கட்ராமனுக்கும் என் நன்றி.

நாவலுக்குச் சாற்றுகவி வெண்பா அளித்த நண்பர் கிரேசி மோகனுக்கு மீண்டும் நன்றி.

என் அன்புக்குரிய வாசக நண்பர்களுக்கு என் வாழ்த்துகள். இனி நாவல் உங்களோடு பேச, நான் மௌனமாகிறேன்.

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன