முன்னுரை – நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’
ஒரு நாவலில் அல்லது சிறுகதை, குறுநாவலில் ஒருவர் கழுகு மாதிரிப் பறந்தால் அது புராணம். புராணம் பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது.
அந்த மனுஷர் வானத்திலேறிப் பறக்காமல், மசாலா குளித்து எண்ணெய்ச் சட்டியில் பொறிபட முன்பு உயிர்த்திருந்த கோழி போலத் தரைக்கு ஐந்தடி உயரே பறக்க, அப்படிப் பறக்கும் மனிதனை லட்சியம் செய்யாமல் கூட நடக்கிறவன் போல் பாவித்து மற்றவர்கள் அவனோடு உரையாடிப் போனால் அது மேஜிக்கல் ரியலிசம்.
மற்றவர்கள் பார்த்திருக்க அவனது ஒரு சிறகு வெய்யில் நேர மின்னலில் முறிய, வாதனை அடுத்தவர்களுக்கு முழுமையாகப் புரிய அவன் ஒற்றைச் சிறகுள்ள குருவியாக மழையில் பறந்தால் அது சர்ரியலிசம்.
ஒரு கதையிலே எல்லோரும் பறந்தால் ஒன்று அது பறவைகள் பற்றிய, குழந்தைகளுக்கான கதை அல்லது பெரியவர்களுக்கான ஃபேண்ட்டஸி என்ற முழுக் கற்பனைக் கதையாக இருக்கக் கூடும்.
ஃபேண்ட்டஸியில் மெய் மிகுந்த கதையாடல் பயின்று வருவதில்லை. கதாபாத்திரங்கள், கதை நிகழுமிடம், கதை நடக்கும் காலம் என்று சகலமானதுக்கும் ’இது இப்படி இருப்பது சாத்தியமில்லை’ என்ற புரிதலோடு வாசிப்பை வேண்டுபவை, வாசிக்க வைப்பவை ஃபேண்ட்டஸி புதினங்கள்.
இதெல்லாம் நம் சௌகரியத்துக்காக ஏற்படுத்திக் கொண்ட புனைவுக் கூறுகள். அலகிட்டுப் பார்த்தால் இவற்றின் போதாமை புலப்படும்.
மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சீரான பெருங்கதையாடல். வியாசன் நிறுத்தாமல் சொல்லிவர விநாயகன் கொம்பை ஒடித்து எழுத்தாணியாக்கி எழுதி வருகிறான். கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதையாக எல்லாத் தளத்திலும் பாரதக்கதை நடக்கிறது.
இதில் இரண்டு அன்னையருக்கு ஆளுக்குப் பாதிக் குழந்தையாகப் பிறந்த சிசுவைக் குப்பையில் போடுகிறார்கள். ராத்திரியில் குப்பைத்தொட்டிகளில் ஏதாவது உண்ணக் கிடைக்குமா என்று தேடி வரும் ராட்சசி ஜரா இந்த இரண்டு குழந்தைத் துண்டுகளை எடுத்து ஒன்றாகச் சேர்த்து உயர்த்திப் பிடிக்க இரண்டும் ஒட்டிக்கொண்டு ஒரே குழந்தையாகிறது. ஜரா ஒட்டிக்கொடுத்த அந்தப் பிள்ளை, ஜராசந்தன் ஆகிறான். கொஞ்சம் குறைந்த சக்தியோடு, முழுக்கக் கிழிபட்டாலும் உடனே ஒட்டிக் கொள்ளும் ஆற்றலும் அவனுக்குக் கைவருகிறது. அவன் பெரிய வீரனாக பீமனோடு மல்யுத்தம் செய்கிறான். கண்ணன் நடுவராக நிற்கும் மல்யுத்தப் போர். ஜராசந்தனை இரண்டாக வகுத்தால் தான் இறப்பான் என்று கண்ணன் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிழித்து ஜாடை காட்டுகிறான் பீமனுக்கு. ஜராசந்தனை இரண்டாக வகுந்து வெற்றிக் கூச்சல் போடும் பீமன் பார்த்துக் கொண்டிருக்க அவன் மறுபடி ஒட்டிக் கொள்கிறான். கண்ணன் கொஞ்சம் யோசித்து இரண்டு மனிதத் துண்டங்களையும் தலைமாடு கால்மாடு மாற்றிப் போட கிழித்த தர்ப்பைப் புல்லை மாற்றிப் போட்டு சமிக்ஞை செய்ய, பீமன் அப்படியே நடத்த, ஜராசந்தன் மரணமடைகிறான்.
இது புராணமா, மேஜிக்கல் ரியலிசமா, சர்ரியலிசமா, ஃபேண்ட்டஸியா? எல்லாம் தான். கனமான சமூக அரசியல் கொண்ட பகுதி அது.
திருப்பங்கள் அத்தனையும் கடந்து கம்ப்யூட்டர் புரகிராமில் subroutine போல ஜராசந்தன் கதை நிகழ்ந்து முடிந்து கதையாடல் திரும்ப பாண்டவர்களுக்கும் அவர்களின் ராஜஸூய யக்ஞத்துக்கும் குருஷேத்ரத்துக்கும் main routine ஆன பெருங்கதையாடலாகப் போகிறது. ஒரு பிசிறு இல்லை. ஒரு சுருதிபேதம் இல்லை. ஒரு முன்பின் முரணில்லை. கதை தன்பாட்டுக்கு சீராக முன்னேறுகிறது.
வியாசன் போல் நான் கதை சொல்ல முடியாது. எழுதித்தர கணேசனுமில்லை. எனில் மடிக் கணினியில் என் கதைகளை நான் எழுதும்போது உருவிலும் உத்தியிலும் கருவிலும் சதா புதுமை வருத்த முயன்றபடி இருக்கிறேன்.
கவிதையிலிருந்து எண்பதுகளில் சிறுகதை, குறுநாவல் எழுத வந்தவன் நான். ஒரு பத்தாண்டு காலம் சிறுகதையும் அல்புனைவும் எழுதி இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில் மெய்ம்மையும் துள்ளிச்சாடும் நடையுமாக முதல் நாவல் எழுதினேன்.
அந்த நடையும் கதையாடலும் கடந்து உடனடியாக மேஜிக்கல் ரியலிச நாவல் புனைவுக்கு செம்புலப் பெயல்நீர் போல் இழுக்கப்பட்டு அடுத்த நான்கு அரசூர் நாவல்களை மாந்த்ரீக யதார்த்தம் கொண்டு கட்டிச் சமைத்தேன்.
அதற்கடுத்த இரண்டு நாவல்கள் பயோ பிக்ஷன் எனில் அதற்கடுத்த 1975 பயோபிக்ஷன் விரவிய சிதறுண்ட கதையாடல். சிதறிய கதையாடலோடு அண்மைக்கால மக்கள் வரலாறான குறுவரலாற்றைச் சொல்ல முயன்றது 1930-1940களில் நிகழும் ராமோஜியம் என்ற அடுத்த நாவலில்.
அதற்கடுத்து 2022இல் பதினாறாம் நூற்றாண்டு வரலாறும் மாற்றுப் பிரபஞ்சமும் பின்னிப் பிணைந்து வர பெருநாவல் மிளகு எழுதினேன். இப்போது, 2023-ஆம் ஆண்டு இதோ இந்த ‘தினை அல்லது சஞ்சீவனி’ முழுக்கற்பனை சார்ந்த ஃபேண்ட்டஸி.
ஏமப் பெருந்துயிலும், அனைவருக்கும் தீர்க்கமானதாக ஆயுள் நீட்சி கொள்ள மூலிகை மருந்து தேடுவதும், அசல் பிரபஞ்சமும் மாற்று பிரபஞ்சங்களும், அவற்றினூடே வளைய வரும் ஒன்று பலவான பாத்திரங்களும், மரபணு வளர்சிதை மாற்றங்களும், திருத்தலும் இன்ன பிறவும், இந்நாவலின் புனைவுக்குப் பின்புலம் சேர்த்துள்ளன.
குயிலியும், வானம்பாடியும் கபிதாளும் பூரணியுமோ மெய்போல் தெரிந்தாலோ, குழலனோ, பெருந்தேளரசரோ, கர்ப்பூரமோ, நீலன் அசல், நீலன் பிரதிகளுமோ சமூக, கலாச்சார, கலை, இலக்கிய, அரசியல் வெளியில் யார்யாரோ போல் இருந்தாலோ, வாசிப்பை ஒரு நிமிடம் நிறுத்தி ஒரு காப்பி பருகுங்கள். இதெல்லாம் முழுக் கற்பனை, ஃபேண்ட்டஸி என்று மூன்று முறை கண்ணை மூடிக்கொண்டு சொல்லுங்கள். விட்ட இடத்துக்கு ஒரு பத்தி தள்ளி வாசிப்பைத் தொடருங்கள். எல்லாமே கற்பனையாகத் தெரியும்.
வழக்கம்போல் சுவாரசியமான வாசிப்புக்கு உறுதி தருகிறேன்.
அன்புடன்
இரா.முருகன்
30 மார்ச் 2023