வெளிவர இருக்கும் புதுநாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ யில் இருந்து ஒரு சிறு பகுதி

ஏப்ரல் 3 2023 திண்ணை டாட் காம் இணைய இதழில் அத்தியாயம் 8 பிரசுரமானது

ஒன்றும் செய்ய முடியாது. நிகழ்ந்து முடிந்த வரலாறு. மாற்றி நிகழ்த்த, அதுவும் பல நூற்றாண்டுகள் உருண்டோடப் பின்னால் வந்த குயிலி பார்க்க வேண்டுமானால் சும்மா பார்த்துவிட்டுப் போகலாம்.

திரும்ப வேண்டிய நேரம் இது, தள்ளுவண்டியில் வைத்து இழுத்துப் போன தார்க் கலவை வழியெல்லாம் சிதறிக் கொண்டு போக, ஒரு குத்து சூடான தார் குயிலி கால்மேல் விழுவதாக சிதறி வந்தது.

அது அவள் பாதத்தை அடைவதற்குள் மறுபடி மேலே போக, அந்த வெளி பரந்து விரிந்த ஆள் நடமாட்டம் இல்லாத பெரிய பொட்டலாக ஆனது.

இல்லை, குயிலி வேறு எந்தக் காலத்தையும் நின்று நிதானித்து அதில் அமிழ்ந்து பார்க்கப் போவதில்லை. நேரம் இல்லை. வானம்பாடி வேறு அவசரப்படுத்துகிறாள்.

பெருந்தேளர் ஹோலோகிராமாகச் சந்திக்க இருக்கிறார் என்று காலப் படகின் சுவர்த் திரை அவசரமாக அறிவித்தது. குயிலியும் வானம்பாடியும் அடுத்தடுத்து அமர்ந்து நேர்காணலை எதிர்பார்த்திருந்தனர்.

அலுவலகத் தொழில்நுட்ப அவை உருவாக்கிய லேசர் ஹொலோகிராமாக , பெருந்தேளர் ஊர்ந்து முன்னால் வருகிறார்.

குயிலி, வானி, இன்னும் 1820இல் தான் இருக்கீங்களா? ஒற்றைச் சாட்டமாக இருபது முப்பது நூற்றாண்டைக் கடக்கும் முன்னே, சின்னச் சின்னப் பயணம் போய்வந்து தயார்ப்படுத்திக்கறது நல்லதுதான். அதற்காகத் தேர்ந்தெடுத்த காலங்களுக்கான அண்மைக்கால வரலாற்றிலே இவ்வளவு அமிழ வேண்டாம். அடுத்து?

ஐயா, வணங்கறேன் என்று பெருந்தேளரின் ஹோலோகிராம் முன்னால் மண்டியிட்டு நான்கு முறை தலை தரையில் பட வணங்கி எழுந்து நின்றாள் குயிலி.

வானம்பாடியும் அந்த வெகுவாக சம்பிரதாயமான வணங்குதலை நடத்த பெருந்தேளர் முகத்தில் கண்கள் பிரகாசித்தன. விஷம் நிறைந்த கொடுக்கு – அன்பர்களுக்கு அல்லல் நீக்கும் கவசமும் அன்பிலாருக்கு உயிர் பறிக்கும் விடமுமான அவர்தம் வல்லுறுப்பு அது. அதன் சிறப்பு குறித்து ஐந்தாம் நூற்றாண்டு பொது சகாப்தப் புலவரை நியமித்து தூதுவும், உலாவும் பிரபந்தமும் எழுத வைத்து சிருங்கார ரசம் போதாது என்று இன்னொரு புலவரை, இவர் எட்டாம் நூற்றாண்டுக்கவி- மதிப்பீடு செய்ய வைத்தார்கள். புலவருக்கு ஆயிரம் பிரபஞ்ச நிதி சொல்லியிருந்ததற்குப்பதில் தொள்ளாயிரத்தைம்பது காசுத் துணுக்குப் பொதி மட்டும் கொடுத்து ஒரு நூற்றாண்டு பின்னால் அவரை இறக்கி விட்டது வேறு கதை. இன்னும் அவர் வீடு சேரவில்லை.

எட்டாம் நூற்றாண்டு புலவரே கால்வாசி நிதி மதிப்புக்கு, அதிமதுர சிருங்காரக் கண்ணி என்ற நீள்செய்யுளை எழுதி வந்து விருது பெற்றுச் சென்றார். தேளர் கொடுக்கு வனப்பு ஐம்பது அடி நீண்டு போக கொடுக்கு இரண்டாம் குறி, நீள்குறி இரண்டாம் கொடுக்கு என மோகாவேசத்தோடு வர்ணித்து அவர் எழுதிய கண்ணி அது. வாசித்தும், சொல்லக் கேட்டும், நடனமாக ஆடியும், நாடகமாக மேடையில் பேசி உலவியும், கலவி இன்பம் பகிர்ந்தமை கண்டு பழகி, புலவரைப் பார்த்தாலே கலவி இன்பம் துய்க்கும் சுகம் ஏற்பட்டது பலர்க்கும்.

இது வழக்கமானதாக, அவரை எட்டாம் நூற்றாண்டுக்கே திருப்பி அனுப்பிவிட முடிவு செய்தபோது வயதான பெரிய தேளர்களும் கரப்பர்களும் தங்களுக்கும் இன்பம் நுகர இதுவே வழியாக இருக்க, கவிஞரை என்றால் புலவரைக் கண்ணில் படாமல் செய்து விட்டால் சரிப்படாது என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

பெருந்தேளரும் நிர்வாக அவையும் கலந்தாலோசனை செய்து ஏற்றுக்கொண்டு, நடக்கும் ஐம்பதாவது நூற்றாண்டிலேயே புலவரை இருத்திக் கொள்ள நிச்சயமானது.

அவரை வைத்து பெருந்தேள் காமாயிரம், கரப்பு திகம்பர அந்தாதி என்று புதிதாகப் பாடவும் செய்தனர் அவர்கள். இருநூற்றிருபது அன்பளிப்பு செய்தால் அன்பளித்தவர் நாயகனாக வரும் சிற்றிலக்கியங்களைப் புலவர் எழுதித் தள்ளி விடுவார். குறிக்கும் கொடுக்குக்கும் வேறுபாடு தெரியாமல் எழுதுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தாலும், அது அவர் சித்தரிக்கும் அதீத காமத்தின் தரிசன வெளிப்பாடு எனக் கருத வேண்டும் என்று அரசாணை மூலம் கவிதை அனுபவ மதிப்பீடு கற்றுத்தரப்பட்டது.

மின்னணு உருவில் சேமித்து வைத்தது தவிர கட்டாயமாக நியூரோன்கள் மூலம் தகவல் களஞ்சியத்தில் உடனடி இணைப்பு வழியே இந்த சாகாவரம் பெற்ற படைப்புகளை மனித மூளையில் சேமித்து வைக்க, கட்டாயத்தின் பேரில் அடிமை வம்ச மனிதப் பரம்பரையில் பத்து பேரைத் தகவலர்களாக நியமித்துமிருக்கிறது. அவர்கள் இறக்கும்போது வேறு தகவலர்களுக்கு இவர்கள் படித்து அனுபவித்துக் கிட்டிய இந்த ரசனை, மனனம் செய்த சிருங்காரச் செய்யுள்கள், அவை போல் காமம் சொட்டும் செய்யுள் இயற்றக் கைகொள்ள வேண்டிய திறமையெல்லாம் கடத்தப்படும்.

மதுவும் போதைப் பொருளும் மாந்திமாந்தி சதா போதையில் இருப்பவர்கள் போல், தகவல் பரப்பில் தனக்குத் தேவையில்லாத சிங்காரக் காட்சிகளை எப்போதும் உணர்ந்து அதில் அமிழ்ந்தபடி இருக்கும் அந்தப் பரிதாபத்துக்குரியவர்கள் உண்ண உடுக்கக் கூட பிரக்ஞை இன்றி படுத்தே கிடக்கிறார்கள்.

தகவல் மனிதர்கள் வினாடியின் பதினெட்டாயிரம் பங்கில் சேர்த்து வைத்த தகவலைத் தேடி எடுத்து வரவேண்டும். மாமைக்கும் பசலைக்கும் வேறுபாடு என்ன என்று தேளர் யாரும் கேட்டால் உடனே தகவல் தர வேண்டும். தாமதம் இருந்தால் நியூரல்
வெளிவரவிருக்கும் என் புதுநாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ சிறு பகுதி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன