விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின. எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது.
கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த ஓவியத்துக்கு தினசரி ஆராதனை நடக்கும் என்பதால் தூபக்கால், தீபம். குடுவையில் புதியதாக சந்தனக் கட்டையைக் கருங்கல்லில் தேய்த்து வழித்தெடுத்த சந்தனம் நல்வாசனையோடு நெற்றியில் தரிக்கச் சகலருக்கும் வழங்கப்படும்.
வடக்கு மாநில வழிபாடுதான். எனில் வைத்தியக் கடவுளாக உருத்திரன் என்ற முழுமுதற் தெய்வத்தை சிறு பீடத்துக்கு இறக்கி வழிபடுவது பீடன்று. எனவே அனுமன் வந்தான்.
அது மட்டுமில்லாமல் அனுமன் வழிபாட்டுக்கு இன்னொரு காரணமும் உண்டு. மருத்துவர் நீலன் பல்லாண்டு அனுமன் அன்ன நைட்டிகப் பிரம்மச்சாரியாக் இருந்து, அண்மையில் திருமணம் செய்தவர். பழகிப் பழகி அவரது சொந்த தேவனும் அனுமனே என்றானது. அப்புறம் ஒன்று. அவருடைய சீடர்கள் அனைவரும் கட்டைப் பிரம்மசாரிகள் தாம்.
இப்படி பிரம்மசாரியம் கொடிகட்டிப் பறக்கும் இல்லத்தில் தினசரி காலை ஏழு மணியில் இருந்து இரவு ஏழு வரை இரண்டு கன்யகையர் ஊழியம் செய்கிறார்கள் என்பதே விநோதமாக ஊர்வம்பருக்குப் பட்டது. எந்த ஊரிலும் இல்லாத உடுப்பும் பேச்சுமாக அந்தப் பெண்கள் சளைக்காமல் சதா பணி எடுத்துக் கொண்டிருப்பதால் அவர்களைப் பற்றி வம்பெதுவும் புறப்பட முடியாது போனது.
கறுத்து நெடியவர்களாக மெல்லியலார் உடல் கொண்ட, தெருவில் எங்கும் பார்க்கக்கூடிய மற்றப் பெண்களுக்கும் இவர்களுக்கும் வேற்றுமை ஏதும் சுட்டிக் காட்ட முடியாது என்பதும் குறிப்பிட வேண்டியது.
அவர்கள் வந்தது முதல் மற்ற மருத்துவ ஊழியர்கள் தங்களுக்குள் பழகிய அன்பான உறவு சொல்லி அழைப்பது வழக்கத்துக்கு வந்தது – அக்கனாரே அச்சி பெயர்த்தியே என ஆண் ஊழியர்கள் இந்த வடக்கிலிருந்து வந்த பெண்டிரை அன்போடும் அரை மரியாதையோடும் அழைக்க, அவர்களோ அண்ணரே, எம்பி, உம்பி, அப்பன், அப்பச்சி என்றெல்லாம் விளித்துப் பிரியம் காட்டுவார்கள். அழைக்க, அழைக்கப்பட உரிமையாக விளிகள் சிறந்த அவ்வெளியில் உற்சாகம் எப்போதும் அலையலையாக நிலவி வந்தது.
காலை ஏழு மணிக்கு அனுமன் ஆராதனை என்று இப்பெண்கள் வடமொழியில் பாடிய கீதங்கள் புரியாவிட்டாலும், அவர்கள் கூடப்பாடிப் பாடி மருத்துவக் குடில் முழுக்க அவை மற்ற நேரத்தில் கூட இசைச் சிறப்புக்காக முணுமுணுக்கப்பட்டு வந்தன.
ஜெய் ஜெய் ஜெய் மாருதி ஜெய் வாயுபுத்ர என்ற துள்ளலிசைப் பாட்டு அவர்களுக்குள் மிகப் பிரியத்துக்கான விளிப்பாட்டானது.
மருத்துவர் நீலரைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையாகவே ஓர் மனக் குமைச்சல் இருந்தது. மருத்துவர் காலாகாலத்தில் மணம் புரிந்திருந்தால் இங்கே உறவு சொல்லி அழைக்க குழந்தைக் குரல்கள் குரல்கள் அன்போடு சூழ்ந்திருக்குமல்லவா. இப்போதே முப்பதுகளின் மத்திய அகவை, இனி எப்போது இங்கே அடுத்த தலைமுறை வரும் என அவர்களுக்குத் தெரியவில்லை.
இந்த நிலையில் மருத்துவர் நீலர் சஞ்சீவனி என்ற விளிப்பெயருள்ள ஆயுள் நீட்டிப்பு மருந்து விழுங்கி வைத்தால் அவரை அவரது 135ஆம் வயதில் பராமரிக்க யாருண்டு? அவர் இது பற்றிக் கவலையேதும் படாது ஐநூறு வருடத்துக்கு ஒரு முறை நிகழும் மிகமிக அரிதான ஆயுள் நீட்டிப்பு ஆண்டு இதோ விரைவில் வரப் போகிறது எனக் காத்திருந்தார்.
ஒரு சல்லி காசு செலவில்லாமல் ஆயுள் அதிகமாக்க ஓடி வராமல் அதைப் பகடி செய்து மருத்துவரையும் நையாண்டி செய்ய ஒரு சனக் கூட்டமே திரண்டெழுவது நியாயமா என இதுவும் இன்னும் பலவிதமாகவும் பிரலாபித்து மருத்துவர் கவிஞராக மாறி நின்று நிலைமண்டில ஆசிரியப் பா நூறு யாத்து மனம் சமனப்பட்டார் மாதோ.
செய்யுள் செய்யாவிட்டால் கைப்பழக்கம் நழுவி இலக்கணம் மீறிவிட வாய்ப்பு உண்டே. அவைக்கு வரும் மற்ற கவிஞர்கள் குற்றம் காணவே காதைத் தீட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்களே. பேசாமல் இந்தப் பிற கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒரு மணங்கு ஆயுள் நீட்டிப்பு மருந்தை வலுக்கட்டாயமாகப் புகட்டியோ பிள்ளைகள் போல் மாட்டேன் மாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில் பின்னஞ்சந்தில் குழாய் வைத்துப் பாய்ச்சியோ அவர்களைப் புராதனப் பன்றிகளாக்கி விட்டால் என்ன.
தளைதட்டத் தட்ட தலைதட்டிப் பாட வைத்து அவர்களைத் துன்பப்படுத்தினால் தான் என்ன? வேண்டாம் மருத்துவம் நல்ல விசயம். இந்தத் துன்மார்க்கரைத் துன்பப்படுத்த மிளகாய்க்கும் ஆசனத் துவாரத்துக்கும் பொருந்த சிலேடை வெண்பா பாடவைக்கலாம். எரிவுதான் கொள்வதால் என்றும் சிவப்பதால்.
அத்தியாயம் முழுவதும் படிக்க கீழே சொடக்குக