நாவல் தினை அல்லது சஞ்சீவனி – ஒரு சிறு பகுதி
எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது. இறங்க வேண்டாம்
காலப் படகு பழுது நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுவர் சற்று வெளிச்சத்தோடு அறிவித்து அதே தகவலை இயந்திரக் குரலில் சகஜமான குரலில் பரத்துகின்றது.
இருட்டில் மருத்துவர் நீலர் ஏ பெண்களா என்னை விட்டுவிடுங்கள், நான் போகிறேன் என்று படுக்கையிலிருந்து இறங்கப் பார்த்து கால் சரிவர எழாமல் குழைந்து நிற்கிறார்.
அண்ணாரே இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் இதோ உணவையும், ஓய்வையும் நோக்கிப் போகும் நம் பயணத்தைத் தொடரப் போகிறோம்.
குரலில் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தோடு குயிலி சொல்கிறாள்.
நீலரா மசிவார்? தேவலோக அமிர்தமென்றாலும் இப்போது அவர் அஃதொன்றும் நாடார். ஓய்வெடுக்க வீடு போனால் போதும். இந்த நூதன வாகனம் உணவுக்கும் ஓய்வுக்கும் எங்கே கொண்டுபோகிறதோ. அல்லது நான் தான் உணவோ? யாருக்கு?
இந்தப் பெண்கள் குருதி உறிஞ்சிக் குடிக்க வந்த யட்சிகள் தானோ. யட்சிகள் கூட்டு சேர்த்துக்கொண்டு ரத்த வேட்டை ஆடுவதாகக் கேட்டதுமில்லை படித்ததுமில்லையே.
மருத்துவரின் கழுத்திலும் செவி மடலிலும் அட்டைப்பூச்சி அப்பி குருதி உறிஞ்சிய தடம் உண்டு எனில், யட்சி கடித்து குருதி உறிஞ்சிய தடம் ஏதுமில்லையே. மேலும், ஒரு பெருங்காலம் நைஷ்டிக ப்ரம்மச்சாரியாக இருந்த பேரிளையவர்களை யட்சியர் பின் தொடர்வது அலாதியன்றோ .
அவருக்கு மீண்டும் அற்ப சங்கை தீர்க்காமல் வயிறு வலித்தது. அண்ணான் அக்கச்சியரிடம் சிறுநீர் கழிப்பதைப் பற்றிப் பேசுவது சீலமன்று என்று இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லைதானே.
அவர் தொண்டையைச் செருமிக்கொண்டு கூறியது – என்ன பயணமோ சேருமிடமும் தெரியாது போகும் வழியும் புலப்படாது அந்தகாரத்தில் அமர்ந்தபடி அற்பசங்கை தீர்த்துக்கொள்ள யாரோ உதவிடக் காத்திருக்கிறேன்.
ஓ குயிலி உன் உண்மையான பெயர் அதுவோ வேறே எதுவோ அடி வானம்பாடி இப்படியுமா பெயர் வைத்துக்கொண்டு பத்து கிரகம் சூரிய சந்திரன் போய்வரும் பரபரப்போடு சதா அலைந்து கொண்டிருக்கும் சிறுமியே, சங்கை தீர எங்கே போகணும்? இருட்டில் கிழக்கு மேற்கு தெரியவில்லை.
அண்ணாரே பின்னால் பாரும் என்று வானம்பாடி குரல் அவர் காதருகே ஒலிக்கத் திரும்பிப் பார்த்தார். கழிவறைத் தொகுதி அங்கே வந்திருந்தது. அவர் எழுந்து தள்ளாடி அதை நோக்கி நடந்து போக அவசரமாக அவரிடம் குயிலி சொன்னாள்.
அங்கே போன காரியம் மட்டும் முடித்து வந்தால் போதும்; வேறு கதவுகளோ பலகணியோ தட்டுப்பட்டால் அவற்றை இயக்கிப் பார்க்க வேண்டாம். கருந்துளை பின்னால் இருக்கலாம் காலமும் தூரமும் இல்லாப் பெருவெளியில் உறிஞ்சப் படலாம்.
அவள் தெளிவான கூடவே அன்பான குரலில் சொல்ல மருத்துவர் தன் படுக்கையில் அமர்ந்தார். அற்ப சங்கை சூரிய மண்டலத்தில் சுக்கிரனையோ செவ்வாயையோ நோக்கி என்னைச் செலுத்தி பிரபஞ்சவெளியில் சங்கை தீர்க்க வழி சொல்லுமோ? அத்தனை உலகளாவிய நீர்பிரிதல் எனக்கு வேண்டாம்