தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
சுவர் மீண்டும் ஒளிர்ந்தது. நீங்கள் ஒதுங்கி இருப்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில். பெருந்தேளர் அரசாளும் காலத்திலிருந்து முப்பது நூற்றாண்டு பின்னால் கடந்து சேர்ந்த காலம் அது. பேசிய சுவர் இருளடைந்தது.
காலப் படகில் புதியதாக நீட்டப்பட்ட குசினிக்குள் இருந்து வானம்பாடி ஒரு வெள்ளித் தட்டில் தினை உருண்டைகளும், அரிசிப்பொரி உருண்டைகளும் வாழைப் பழங்களுமாக வைத்து எடுத்து வந்து மருத்துவரிடம் அளித்தாள். வேகவைத்த நிலக்கடலை இரண்டு குவளை நிறையத் தட்டில் இருந்தது.
படகில் நெருக்கடி நிலைமை அறிவிக்கும் விளக்கு எரிய மருத்துவரும் குயிலியும் வானம்பாடியும் மங்கலான விளக்கொளியில் சற்றே உருவம் தெளிவின்றிக் காட்சியளித்தார்கள்.
குயிலி படகின் கூறுகளைச் சற்றே மாற்றியமைக்கும் விசை வேலை செய்கிறதா என்று நோக்க, செய்கிறது என்று சுவர் அறிவிப்பு கூறியது. குயிலி காலப் படகின் இருப்பு தொடர்பான கூறுகளைச் சற்றே மாற்ற, படகு வெளியுலகுக்குக் காணாமல் போனது.
படகுக்குப் பக்கத்தில் சமசமவென்று சத்தம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். உரத்த குரலில் பேசுகிறார்கள்.
இன்னிக்கு கிட்டப்பா பாடின மேயாத கானகத்தே இந்த வருஷம் ஒற்றைவாடை கொட்டகையிலே பாடினதை விட அருமை போங்கப்பா.
நாரதர் அந்தப் பொண்ணு சரியாகப் பாடலே. நாரதர் குரல் இப்படியா கீச்சுனு இருக்கும்?
கதர்க்கொடி கப்பல் காணுதே பாடமாட்டேனுட்டா போ. வெள்ளைக்காரன் மேலே அப்படி பயமோ பிரேமையோ. வெள்ளையா இருந்தாப் பிடிக்குமா?
சாயவேட்டியை இடுப்பைச் சுற்றிக்கொண்டு காயாத கானகத்தே பாட்டை சகிக்க முடியாமல் பாடினானொருத்தன். அப்போது மறுபடி சுவர் அறிவிப்பு ஒளிர்ந்தது,
எம்டன்.