தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
கபிதாள்.
கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே!
பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு பேரும் ராத்திரி தந்த சுத்தி செய்து, குளித்து வாசனை திரவியங்களை தாராளமாக உடம்பில் வாரியெடுத்துப் பூசி மெல்லிய கருத்த ஆடை தரித்து கதவடைத்துக் கட்டிலுக்கு பரஸ்பர அணைப்பில் விரைவார்கள்.
அது இரண்டு வருஷத்துக்கு முன். அப்போது கல்யாணம் ஆன புதிது. எதைப் பார்த்தாலும், எதைத் தொட்டாலும், எதை அனுபவித்தாலும் புதுசாக இருந்ததால் கர்ப்பூரய்யன் தம்பதியினர் அமாவாசை, பௌர்ணமி தவிர மற்ற நாட்களிலும், இரவோடு கூடப் பகலிலும் உடல்சுகம் தேடி படுக்கை அறையே கதியெனக் கிடந்தார்கள்.
அவர்களின் கட்டில் விளையாட்டு தொடங்கியபோதுதான் வெளி வாசல் நடைக்குப் போகும் ஒழுங்கையில் செந்தேள் காலனி ஒன்று ஏற்பட்டு மெல்லப் பெருக ஆரம்பித்தது.
கல்யாணம் திருத்தணிகையில் நடந்தது. மழைநாள் திருமணம். ஈரம் பூத்த குன்றுப்பாதையில் தோள் சுமக்கும் தவிலோடும் நாகசுவரத்தோடும் வாத்திய கோஷ்டி விரைந்தபோது மழை பெய்ய ஆரம்பித்து வாத்தியக்காரர்கள் சொட்டச் சொட்ட நனைந்து போயிருந்தனர்.
நாகசுவரத்தின் உள்ளே மழைநீர் புகுந்து சீவாளி பொருத்தும் போது கீழ்வழியாக நீர் கசியத் தொடங்கியது. தவிலும் நனைந்துவிட்டது.
மேளத்தை சிறு நெருப்பில் காட்டிச் சுழற்றி வார்களை மறுபடியும் எடுத்து முடுக்கி அந்த மிழவைக் கோல்கொண்டு மெல்லத் தட்ட சுநாதமாக அது பேசுமாம்.
நெருப்பெல்லாம் மூட்டிக் காயவைக்க வேண்டாம். நேரம் இல்லை. கல்யாணத்துக்கு முகூர்த்தம் தட்டிவிடும், வந்தவரைக்கும் வாசித்தால் போதும் என்று கூடவே வந்த புரோகிதர்கள் பொறுமை இழந்து பரபரத்தார்கள்.
கபியும் கர்ப்பூரய்யனும் திருமணம் கொள்ள கோவில் மண்டபத்தின் கூரை பாதி வானம் பார்க்கத் திறந்திருக்க, அடுத்த மழையில் எல்லோரும் இன்னொரு தடவை நனைந்து போனார்கள்.
நாகசுவரம் தேம்பித் தேம்பித் தண்ணீரோடு இசைக்க, தவில் தோல் தளர்ந்து ஊம் ஊம் என்று ஏக்கம் கொண்டு சத்தம் எழுப்பி இதோ இதோ இதோ என்று விசும்பியது. ஜால்ரா தாளம் கூட ஈரமாகி, ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது,
கோயில் வெளிமண்டபத்தில் தாலி கட்டித் தம்பதிகளாக இருவரும் ஆசீர்வாதம் வாங்கியபோது புரோகிதரின் தொடையில் விழுந்து ஓடியது கரப்பு என்று மனசறிந்து பொய் சொன்னான் கல்கத்தாவிலிருந்து கல்யாணத்துக்கு வந்திருந்த கபிதாளின் தாய்மாமன். எந்த சாக்கு சொல்லியும் கல்யாணம் நின்று போகக் கூடாது என்று ஜாக்கிரதை அவருக்கு.
ஆனால் கர்ப்பூரமய்யன் தேளைப் பார்த்திருந்தான். அமைதியாக அவன் இருந்ததற்கும் கல்யாணம் சீராக நடக்க வேண்டியிருந்ததே காரணம்.
அன்று இரவு கபிக்கு வீட்டுவிலக்கு சீக்கிரமே வந்துவிட கர்ப்பூரய்யன் ரொம்ப சரி என்று கல்யாணத்துக்காக கோவில் மடைப்பள்ளியில் வாங்கிய அதிரசமும் முறுக்கும் தேங்காய் பர்ஃபியும் மற்றபடி நைவேத்தியம் ஆன எண்ணெய் முழுக்காட்டிய தோசையும் புளியஞ்சாதமும் வாங்கி வந்ததைக் கிரமமாகச் சாப்பிட்டு விட்டு கட்டிலில் ஒருத்தரும் தரையில் மற்றொருவருமாக உறங்கப் போனார்கள்.
தரையிலிருந்து கட்டிலுக்கும் கட்டிலிலிருந்து தரைக்கும் தம்பதிகளாக வெறும் ஆலிங்கனத்தோடு இடம்மாற, ராத்திரி அந்தப்படிக்குப் போனது. பிரஷ்டையான ஸ்திரியும் அவள் புருஷனும் தீட்டு நீக்க நடுராத்திரி வெந்நீர் போட்டுக் குளித்து உறங்கப் போனார்கள்.
அந்த ராத்திரியில் படுக்கை அறைக்குச் செல்லும் ஒழுங்கையின் ஓட்டுக் கூரையில் இரண்டு தேள்கள் புருஷன் பெண்சாதி அவை அங்கே வந்து மழைச் சாரலுக்கு விலகி இருந்தன. கலவியிலும் ஈடுபட்டன. கபிதாளின் கனவில் அவை வந்தன. கனவுத் தேள் நேரில் வருமா என்று கபிதாள் கர்ப்பூரமய்யனை அணைத்துக்கொண்டு கேட்டாள். வராது என்று சொன்ன கர்ப்பூரமய்யன் உறங்கவே இல்லை.