வாதவூரான் பரிகள் என்னும் என் பத்தியில் சென்ற ஆண்டு புரவி கலை இலக்கிய இதழில் பிரசுரமானது
எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று புத்தக வரலாறில் இதுவரை ஒரே ஒரு நூலுக்குத்தான் விளம்பரம் ஆனது. ஹிரோஷிமா என்ற அல்புனைவு இது. ஜான் ஹெர்ஸே எழுதியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானில் பெருநகரமான ஹிரோஷிமா மேல் அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதைக் குறித்த இந்தப் புத்தகம் உலகில் பல மொழிகளில் மூன்று மில்லியன் பிரதிகள் மொத்தமாக விற்பனையாகியுள்ளது, இதைவிட அதிக விற்பனை, மாசேதுங்கின் சிவப்புப் புத்தகம் தான்.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் இறுதியில் லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய அணு ஆயுதத் தாக்குதலில் ஹிரோஷிமா நகரம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. நகர மக்களில் குறைவானவர்கள் மட்டும் தப்பிப் பிழைத்தார்கள். இன்றைக்கு, இல்லாவிட்டால் நாளைக்கு, நாளை இல்லாவிட்டால் அடுத்த மாதம் என்று நீளும் சாவுப் பட்டியல்களில் இடம்பெறாத அதிர்ஷ்டசாலிகள் இவர்கள். அணுகுண்டு விழாத கால முழு ஆயுசு பெற்றவர்கள்.
அணு ஆயுதத் தாக்குதலுக்கு முந்திய இவர்களின் வாழ்க்கை, அணுகுண்டு விழுந்தபோது அவர்களின் தனிப்பட்ட அனுபவம், சமூக அனுபவம், போருக்கு அப்புறம் அவர்களின் வாழ்க்கைத் தொடர்ச்சி என்று ஆறுபேரின் வாழ்க்கை அல்புனைவுகள் இந்தப் புத்தகத்தில் சுவாரசியமாகக் கதைக்கப்படுகின்றன. தீர்க்கமான பச்சாதாபம், மனப் பக்குவம், பொறுமை என்று கலந்து ஜான் ஹெர்ஸே எழுதியது.
’சின்னப் பையன்’ என்று அமெரிக்க ராணுவம் பெயர் வைத்துச் சீராட்டிய அணுகுண்டு ஹிரோஷிமா நகர் மேல் விழுந்தபோது ஜப்பானிய அரசுக்கும், மக்களுக்கும், அறிவியலருக்கும் கூட அந்தத் தாக்குதலின் பிரம்மாண்டமான நசிவு சக்தி புலப்பட்டிருக்கவில்லை.
அசாதரணமான 6000 டிக்ரி செல்ஷியஸ் வெப்பத்தைக் கிளப்பி ’சின்னப் பையன்’ வெடிக்க, அருகே ஒரு வங்கிக் கட்டிடத்தின் வெளிச் சுவரை தெருவில் இருந்து பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தவர் பஸ்பமாக, சுவரில் அவருடைய வெப்ப நிழல் புகைப்படம் போல் பதிந்தது இன்னும் அங்கே உண்டு. இந்த அணுகுண்டின் கதிரியக்கத்தில் இருந்து தப்ப ஐம்பது இஞ்ச் விரிவுள்ள சுவர் எழுப்பி அதனைக் கடந்து அமர வேண்டும். யாருக்கும் அப்போது தெரியாது.
இதற்கப்புறம் சகலரும் தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தோடு நீரருந்த முனைய, ’மின்சார ருசி’யோடு (electric taste) குடிநீர் மாறியிருந்ததாம். குடித்தபிறகு வாயில் வயிறு மேலெழும்பி வந்ததுபோல் வயிற்றுப் பிரட்டல், குமட்டல். என்றாலும் நீர் வேட்கை, வேட்டை நின்ற பாடில்லை.
கூடவே குண்டு வெடிப்பில் தீப்பிடித்த கட்டடங்களில் இருந்து வெளிப்பட்டு ஓடுகிறவர்களின் கூட்டம். தாறுமாறாக ஓடிய மக்கள் சற்று நேரத்தில் அணுகுண்டு விழுந்த பிரதேசத்திலிருந்து விலகி ஓட ஆரம்பித்தார்கள். கொஞ்சம் போல் உணவு, அத்தியாவசியச் செலவுக்காக பணம் என்று எடுத்துப் போனவர்கள் நிறைய. அவர்களோடு, பிழைத்துக் கிடந்தால் உயிர் வாழ வருமானம் சிறிதாவது கிடைக்கச் செய்ய பழைய தையல் மெஷினை எடுத்துக்கொண்டு ஓடிய தையல்காரரின் விதவை மனைவியும் உண்டு. உருட்டிப் போக முடியாமல் அவள் அந்தத் தையல் மிஷினை தெருக் குழாய் மேடையில் விட்டுப் போனாள், யுத்தம், அணுகுண்டுத் தாக்குதல் எல்லாம் முடிந்து திரும்ப வந்தபோது அங்கேயே, அப்படியே இருந்தது. துரு ஏறியிருந்ததுதான் அதில் தொந்தரவு.
கையில் இப்படி இன்றியமையாததோ, நேசிக்கும் பொருளோ எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்களை வெறுங்கையோடு எதிர்ப்படுகிறவர்கள் கரம் கூப்பி வணங்கி ’மன்னியுங்கள் நான் வெறுங்கையோடு ஓடுகிறேன்’ என்று ஜப்பானிய கலாசாரப்படி வணங்கி ஆறுதலைச் சொல்லிக் கடந்து போனார்கள்.
தீப்பற்றி எரியும் கட்டடங்களின் உள்ளே சிக்கியவர்கள், ஜன்னல் வழியே பார்த்து ‘ஐயா, மன்னிக்கவும், ஏணி ஏதாவது இருந்தால் சார்த்துகிறீர்களா’ என்று வீதியில் ஓடியவர்களை மரியாதை விலகாமல் உதவி கேட்டார்கள். Incredible people, these Japanese …
ஓடிய வழியில் தோட்டத்தில் கொடியில் காய்த்த பூசணிக்காய், அணு வெப்பத்தில் பக்குவமாகச் சுடப்பட்டு (grilled) சாப்பிடத் தயாராக இருந்ததாம்.
குண்டு வெடிப்பை அருகில் இருந்து பார்த்தவர்களின் கண்கள் முகத்திலிருந்து வெளியே பிதுங்கி வந்து விழ, தீனமான கூக்குரல் எங்கும் கேட்டது.
திடீரென்று பெரிய கருப்புத் துளிகளாக மழை விழுந்தது. மழைத் துளியின் வித்தியாசத்தை கவனிக்கவோ, முழுக்க அபாயம் தெரிந்து பயப்படவோ யாரும் இல்லை.
தலை சிறுத்த, உடல் சூம்பிப்போன சிசுக்கள் பிறக்க, கருச் சேதம் ஏற்பட, இளைஞர்களின் ஆண்மை அழிய ‘சின்னப் பையன்’ விளைவித்த நாசத்தின் எல்லை விரிந்து கொண்டே போனது. அணுகுண்டுத் தாக்குதலைத் தப்பிப் பிழைத்தவர்களை மற்ற ஊர்,நகர ஜப்பானியர்கள் நித்திய சீக்காளிகளாகக் கருதி உதாசீனப்படுத்தினார்கள். வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஜான் ஹெர்ஸே விடாமல் இந்நூலுக்காகத் தொடர்ந்த ஜப்பானியரை அமெரிக்காவுக்கு விமானமேற்றி கூட்டிப் போனார் அவர்களை வழிநடத்தியவரும், ஆறில் ஒருவருமான தனிமோடா மதகுரு. அமெரிக்காவில் நகரம் நகரமாக இந்த ஹிரோஷிமா அணுகுண்டுக்குத் தப்பியவர்கள் பயணப்படுகிறார்கள். அவர்களுக்கு அனுதாபம் பெருக, அமெரிக்கர்கள் நன்கொடை மழை பொழிந்தார்கள்.
ஆனாலும் அமெரிக்கர்கள் ’ஜப்பான் மேல் குண்டு வீசியது சரியான செயல்தான், இதற்காக ஜப்பானிடம் மன்னிப்பு கேட்கவேண்டாம்’ என்று கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையாக இன்னும் சொல்கிறார்கள்.
தனிமோடா சுய விளம்பரத்துக்காக எல்லாம் செய்கிறார் என்று புகார் எழுந்தது. அணுகுண்டை விமானத்தில் ஏற்றி வந்து ஹிரோஷிமா நகரத்தின் மேல் வீசிய இணை விமான ஓட்டுநர் co-pilot தொலைக்காட்சி நேர்காணலில் வந்து அணுகுண்டு அழித்த லட்சக்கணக்கான ஜப்பானியர்களுக்காக தேம்பி அழுதார். ’தப்பு தான் நாங்க செய்தது’ என்று புலம்பிய அவர் வடித்தது முதலைக் கண்ணீர் என்றும், டெலிவிஷன் ஸ்டூடியோவில் நேர்காணலுக்கு வருவதற்கு முன் பக்கத்து மதுக்கடையில் சுருதியேற்றிக் கொண்டு வந்து சிறப்பாக நடித்துக் கொடுத்தார் என்றும் தெரிய வருகிறது.
ஷிண்டோ புத்தமதத்தினரான ஜப்பானியர்களை மதம் மாற்றும் செயல்பாடுகளும் இந்தக் கலவரமான நேரத்தில் நடந்தேறின. ஜான் ஹெர்ஸே ஒன்று விடாமல் பதிவு செய்கிறார்;.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒரு நாள் வெளியான பத்திரிகையின் அத்தனை பக்கங்களிலும் ஜான் ஹெர்ஸே எழுதிய ஹிரோஷிமாவைப் பிரசுரித்துக் கவுரவப்படுத்தியது.
ஜான் ஹெர்ஸே வார்த்தையில் வடித்த அந்த ஆறு பேரின் வாழ்க்கையை கவனிக்கும்போது நமக்குப் புலப்படுவது, யுத்தமோ அணு ஆயுதத் தாக்குதலோ, ஊரோடு அழிவோ அல்லது போர் ஓய்ந்த அமைதிக் காலமோ, வாழ்வில் முன்னேறுகிறவர்கள் முன்னேறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அல்லாதவர்கள் இன்னும் பின்னடைவுதான் அனுபவிக்கிறார்கள்.
8