பெருநாவல் மிளகு – ஸாமுரினை போர்த்துகீஸ் தூதர் சந்திப்பது
இருட்டுவதற்குள் கொட்டாரத்துக்கு, என்றால் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்து ஸாமுரின் அரசரோடு சந்திப்பு நிகழ்த்த பெத்ரோவுக்கு வாய்த்தது.
ஸாமுரின் என்று கேட்டுக் கேட்டு அவருக்கு ஒரு முகம் மற்றும் ஆளுமை அடையாளத்தைக் கற்பனை செய்திருந்தார் பெத்ரோ. முன்பல் விழுந்த, வயதான சிரியன் கத்தோலிக்க பிஷப்பாக, சதை பிடித்து, முழு அங்கி தரித்து, தலை முக்கால் பகுதி வழுக்கை விழுந்து, குரல் தழதழத்துக் கழுத்தறுக்கக் கத்தி தீட்ட வைக்கிறதான நைச்சியமாகப் பேசும் வைதீகனாக பெத்ரோ கற்பனை செய்த ஸாமுரின் இருந்தார்.
இங்கே வந்து பார்த்தாலோ, முப்பது வயதுக்கு ஒரு நாள் கூட அதிகம் சொல்ல முடியாத இளைஞராக இருந்தார் ஸாமுரின். நெடுநெடுவென்று நல்ல உயரம். ஆறடி இருப்பார். போர்த்துகல் – எஸ்பானியப் பேரரசுகளின் மாமன்னரான விவேகமுள்ள பிலிப் என்ற ஒன்றாம் பிலிப் மன்னரை விட ஒரு பிடி அதிகம் உயரம். கறுத்த உடல். ஆப்பிரிக்கர்கள் போல் அரைத்துக் குழைத்துப் பூசியது போல கருப்பு விழுது விழுதாக பூசி வைத்த உடல் இல்லை. சற்றே மங்கிய கறுப்பு, கண்கள் நெருப்புத் துண்டுகளாக ஒளி விடுகின்றன.
பெத்ரோ ஆணாக இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் ஸாமுரினை மோகித்திருப்பார். கஸாண்ட்ரா இடத்தில் வெகுவான காமத்தோடு வைக்காவிட்டாலும் வனப்பு கண்டு காதலுற்று இருப்பார்.
கஸாண்ட்ராவோடு, இவன், இவர், முயங்கினாலோ. அபத்தம். கற்பனை செய்வது மகா குற்றம். பெத்ரோ வேகமாகப் புன்நினைவு களைந்தார்.
ஸாமுரின் இடுப்பில் அவசரமாக உடுத்தியதுபோல் ஒரு பட்டுத் துணியை இறுக்கக் கட்டி இருக்கிறார். அதற்கு மேல் உடை ஏதும் அணியவில்லை.
பரந்த மார்பும் கரளை கரளையாகக் கையும் காலும் வாய்த்து இரு பக்க கை அமரும் இடங்களிலும் சிங்க உருவங்கள் வடித்து நிறுத்திய அரியணையில் அமர்ந்திருக்கிறார் ஸாமுரின்.
மேலுடம்பில் துணி மறைத்துப் போர்த்தாததைக் குறையாக்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான, குறைந்த நீளத்தில், மத்திய நீளமாக முத்துமுத்தாகப் பதித்த மாலைகளும் காசுமாலைகளும் அழகான ஆபரணங்களாக அவர் நெஞ்சில் தவழ்கின்றன.
தோள்களிலும் இறுகக் கவ்விப்பிடித்த ஆபரணங்களை ஸாமுரின் அணிந்திருக்கிறார். இடுப்பில் ஒரு குத்துவாளைச் செருகியிருக்கிறார். தலையில் பெரியதோர் ஆபரணமாக மணிமுடி தரித்திருக்கிறார். அதற்குள் இடைவெளியை அழகான மயில் அல்லது வேறு ஏதோ வண்ணமயமான பறவை இறகுகள் மறைத்துள்ளன.
தலைமுடியை முன்குடுமி கட்டியிருப்பது அவர் அரியணையில் இருக்கும்போது குனிந்து ஏதாவது தேடினால் அன்றி கண்ணில் படுவதில்லை.
காலில் செருப்புகளோடு கணுக்கால் பிடிக்கும் ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார் ஸாமுரின். சில மாலைகளைத் தவிர எந்த ஆபரணமும் பொன்னாக ஒளி வீசவில்லை. வெள்ளியில் செய்தமைத்தவையாக இருக்கக்கூடும் என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. செம்போ வெங்கலமோவாக இருக்காது தான்.
அரியணை கூட சிங்கம், வளைவுகள், சிறு இலை, கொடி வேலைப்பாடுகளோடு வெள்ளியில் செய்ததாக இருக்கக் கூடும். தரைக்கு மேலே அரையடி உயரத்தில் ஒரு படி வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது அது.
ஸாமுரின் செருப்பணிந்த ஒரு காலை படியில் ஊன்றி, மற்றதை இருக்கையில் மடித்து வைத்து அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின் நீல நிறத்தில் சாட்டின் துணித் தலையணை உறை போட்ட திண்டு ஒன்று ஸாமுரின் அரியணையில் சாய்ந்து சௌகரியமாக அமர வகை செய்கிறது.
முரட்டுச் செருப்புகளும், காதில் பெரிய வளையங்களும், அணிந்து, தலைப்பாகை வைத்த வீரர்கள் நான்கு பேர், வலது கரத்தில் ஓங்கிப் பிடித்த வாளோடு அரியணைக்கு அருகே, நாலு பக்கமும் நிற்கிறார்கள். இன்னொரு வீரன், தரையில், அரியணை பக்கம் ஜாக்கிரதையாக அமர்ந்திருக்கிறான்.
அரசவையில் ஸாமரினுக்குத் தொட்டு விடும் தூரத்தில் முப்புரிநூல் தரித்த முதிய ஆலோசகர் நின்றபடி இருக்கிறார். பெத்ரோ போர்த்துகீஸ் மொழியில் சொல்வதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதும், ஸாமுரின் மலையாளத்தில் உரைப்பதை போர்த்துகீஸ் மொழிக்கு மாற்றுவதும் ஆலோசகரின் பணிபோல. வெகுவேகமாக மொழியாக்குவதால் வார்த்தைக்கு வார்த்தை சரிதானா என்று சோதிக்க முடியவில்லை. சென்னபைரதேவி அரசவையில் பிரதானி நஞ்சுண்டையா நிதானமாக எல்லோருக்கும் எல்லாம் விளங்கும்படி மொழிபெயர்ப்பார். இந்த ஆலோசகர் எதற்கோ ஓட்டஓட்டமாக ஓடுகிறார்.
அப்புறம் ஒன்று, இந்த மலையாள பூமியில், எல்லோரும், எப்போதும் வேகமாகத்தான் பேசுகிறார்கள்.
பலாப்பழ சுளைகளும், வாழைப்பழத்தையும் வாழைக்காயையும் சிறு சக்கரங்களாகத் துண்டுபடுத்தி தேங்காய் எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொறித்தெடுத்து மிளகுப்பொடியும் உப்பும் தூவிய வறுவலும், தென்னை இளநீரும், உரையாடலுக்கு இடையே, ஸாமுரினுக்கும் பெத்ரோவுக்கும் வழங்கப்படுகின்றன. கையில் பிடித்த உணவுத் தட்டுகளோடு அரசியல் பேச்சுவார்த்தை நடத்த பெத்ரோவுக்குச் சற்றே சிரமமாக இருந்தாலும், பொருட்படுத்தாமல் பேசியபடி இருக்கிறார்.
அவரிடம் மிளகு விலை நிர்ணயம் பற்றிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று போர்த்துகல் பேரரசர் பிலிப்பு தீவிரமாக இருப்பதை பெத்ரோ சொல்லிப் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டியுள்ளது.
ஒரு பக்கம் மிளகு அரசி ஜெர்ஸோப்பா மகாராணி சென்னபைரதேவியோடு மொத்த மிளகுக் கொள்முதல் பற்றி உடன்படிக்கைக்கு வழி செய்தபடி, மற்றொரு பக்கம், கோழிக்கோடு ஸாமரினோடு மலபார், தலைச்சேரி இன மிளகுக்குத் தனி வணிக ஒப்பந்தம் ஏற்படுத்துவது பற்றிப் பேச பெத்ரோவுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.
என்ன செய்ய, போர்த்துகல் மன்னர் தீவிரமாக இந்தப் பேச்சு வார்த்தைக்கு முனைந்திருக்கும்போது அவருடைய பணிவான ஊழியர் பெத்ரோ என்ன செய்யமுடியும். அதை நோக்கி பேச்சை நகர்த்த ஒரு சரியான தருணத்தை எதிர்பார்த்து இளநீர் பருகிக் கொண்டிருந்தார் பெத்ரோ. இனிப்பும் உப்புமாக இந்தத் தென்னை இளநீரும் தனிச் சுவையாக இருந்தது.
அரசியலை விட மதம் சம்பந்தமான பிரச்சனைகள் ஸாமுரின் மன்னர் கவனத்தை அதிகம் கவர்ந்திருப்பதாகத் தெரிந்தது அவருக்கு.