தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து, சொல்வனம் வழி ஒரு சிறு பகுதி
காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் போகுமளவு பழுது திருத்தியிருந்தது. முழுக்க முன்னே, பின்னே நூற்றாண்டுகள் போய்வர இன்னும் நிறையச் செய்ய வேண்டியது உண்டு.
வேறு கால ஓடத்தை அனுப்பி வைத்து நம்மை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து மீட்டுப் போனால் என்ன? வானம்பாடி குயிலியைக் கேட்டாள். செய்யலாம் தான். ஆனால் வருஷம் – மாதம் – வாரம் –நாள் –மணி-நிமிடம் – நொடி- இடம் என்று அத்தனையும் துல்லியமாக நம்முடையதாக இருக்க வேண்டும். கொஞ்சம் முன்னால் பின்னால் இருந்தால் நம் பிரதிகள் உருவாகி விடுவார்கள்.
நீலன் வைத்தியருக்கு இதொன்றும் புரியவில்லை. வீடு போய்ச் சேர இன்னும் நேரம் பிடிக்கும் என்பது மட்டும் புரிந்தது.
நான்கு பரிமாண வெளியில் நான்கையும் தற்காலிகமாகக் கூறுகளைச் சற்றே திருத்தி குயிலியும், வானம்பாடியும், நீலன் வைத்தியரும் கர்ப்பூரமய்யன் இல்லத்தில் நிகழ்வதை எல்லாம் அவனுடைய மற்றும் கபிதாளின், மற்றும் வேறு யாருடைய பார்வையிலும் படாமல், சத்தம் கேட்காமல் கவனித்தபடி இருக்கிறார்கள். காலப்படகும் அதேபடி தான். இருப்பது தெரிவதில்லை. சத்தம் கேட்பதில்லை. பிரபஞ்சத்துக்குள் ஒரு சிறு பிரபஞ்ச வெளி அது.
கபிதாளின், மற்றும் கர்ப்பூரமய்யனின் அந்தரங்க வாழ்வில் இது ஓரளவு குறுக்கீடுதான். எனினும் நிர்ணயிக்கப்பட்ட சமூக அத்துகளைக் கடந்து இந்த ‘அடுத்தவர்கள் வீட்டில் எட்டிப் பார்ப்பது’ நடக்காது. படுக்கை அறை, கழிவறை ஆகிய பிரதேசங்களில் இந்தக் காட்சியமைப்பு செயல்படாது.
கர்ப்பூரமய்யன் கபிதாளைச் சமையல்கட்டில் ஆலிங்கனம் செய்ய முற்பட்டாலோ? வானம்பாடி குயிலியின் காதில் கிசுகிசுத்தாள். அப்போது நாம் தான் அந்தக் காட்சியை மேலும் காணாமல் வெளிவரணும். குயிலி அவள் காதைத் திருகியபடி சொன்னாள்.
பல்லக்கு கர்ப்பூரமய்யன் வீட்டுக் கூடத்தில் இறக்கி வைத்திருப்பது பார்க்க ஒரு மாதிரி இருந்தது நீலன் மருத்துவருக்கு.
அய்யன் மனைவியைப் படுக்கையில் விட்டுப் பல்லக்கை வெளியே வைத்துவிடலாமே என்று குயிலியைக் கேட்டார் அவர்.
குயிலி பல்லக்குப் பக்கம் போய் கபிதாள் உறக்கம் தீர்ந்திருக்கிறாளா என்று பார்க்க முற்பட்டபோது உள்ளே அ-மனிதர் பேசும் ஒலி கேட்டு ஒரு வினாடி நின்றாள். இது அவளுக்குப் பழக்கமான ஒலி. அதிகாரம் செய்தும், அன்பு காட்டுவதாக அபிநயித்தும், கோகர் மலையிலும் மலை சார்ந்த மண்ணிலும் நீரிலும் ஆட்சி செய்யும் செந்தேள் வர்க்கத்தின் மொழி.
மனித மொழி போல்தான் அந்த மொழியும். முப்பது நூற்றாண்டு முன் இருந்தது போல் அது இப்போது இல்லை. Electric oven, loft, cerebral venom என்றெல்லாம் மனித மொழியைப் பகர்த்தெடுத்து தேள் மொழியாகியபோது புதுச் சொல்லாடல்கள் தேள்பேச்சில் புகுந்தன.
அவை ஒரு சில இருக்க, கூடவே எம்டன், ரிக்கார்ட் போன்ற சொற்கள் இந்தப் பல்லக்குத் தேள்களின் மொழியில் புகுந்துள்ளதையும் கவனித்தாள் குயிலி. உள்ளே எத்தனை பேர் உண்டு என்று முணுமுணுப்பாகத் தேள்மொழியில் அவள் கேட்க உள்ளே தேள்பேச்சு நின்று போனது.
ஒரு மனுஷப் பெண் தங்கள் மொழியில் பேசுவது கேட்டு திகைப்பும் பயமும் தோன்ற ஜோடித் தேள்கள் அசையாமல் நின்றன. சிறிய செந்தேள்கள். இப்போதைய தேளரசு தேள்கள் இவை போல் ஐநூறு சதவிகிதம் பெரியவை. சிறிய என்றாலும் பயமும், பணிவும் கண்களில் காட்டி அவை நின்றன.
அந்த மனுஷப் பெண்ணுக்கு உபத்திரவம் இல்லாமல் வெளியே வாருங்கள் எனக் கட்டளையிட்டாள் குயிலி. பெண்டாட்டி தேள் கொடுக்கை மரியாதையோடு ஆட்டி வெளியே வந்தது. பின்னாலேயே ஆண் தேள்.
குயிலி பல்லக்கு உள்ளே எட்டிப் பார்த்தாள். அங்கே கபிதாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். நேரம் காட்டும் வீட்டுக் கடிகாரம் பனிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது, குயிலிக்கு இந்த சூழல் அபத்தமாகத் தோன்றியது. வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த மனுஷர்களும், தேள்களும் நாடகம் நிகழ்த்துவதுபோல் கூடும் இரவு.. குயிலி வேறே தேள் வர்க்கத்தவர் பல்லக்கின் உள்ளே உண்டா என்று கேட்க இரண்டு தேள்களும் பதட்டத்தோடு இல்லை என்றன.
எனில் நீவிர் இருக்கும் வளை எங்குள்ளதோ?
ஒழுங்கையின் ஓட்டுக்கூரைக்கு உள்ளே, சகோதரி என்றது நடுங்கியபடி ஆண் தேள். வலிந்து உறவு சொல்லி விளித்தல் தவிர்க்கவும் என்று புன்னகையோடு கூறினாள் குயிலி. அவள் திரும்பும்போது இரண்டு தேள்களும் ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கு நிமிர்த்தாமல் நிற்பதை ஓரக்கண்ணால் கண்டு புன்னகை புரிந்தாள்.
என்ன நான் சொன்னது புரிந்ததா? அமைதியான குரலில் குயிலி கேட்டாள். அவை நடுநடுங்கி புரிந்தது என்றன. தேளரசர் வாழ்க என்றும் இன்னும் பலதுமாகக் கோஷம் எழுப்பாமல் கூ கூ என்று மட்டும் பயப்பட்டு ஒலி எழுப்பி அவை போமிடம் சென்றடைந்தன.
தேளரசு, பெருந்தேளன் என்றெல்லாம் இந்த இழிபிறவிகளை மரியாதையோடு விளித்து, அவற்றின் சொற்படி ஆடும் ஆட்டம் அலுத்துப் போனது. ஒரு மாறுதலுக்கு, தேள்கள் எமக்கு அஞ்சட்டும். ஆரம்பத்திலிருந்து அப்படித்தானே இருந்தது?