பெருநாவல் மிளகு அத்தியாயம் பகுதி – சொல்வனம் இலக்கிய இதழ் வழியே
”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது எண்ணங்கள் உருவாக்கிய இலக்கியமும், ஓவியமும், சிற்பமும், கடவுளும் ஆக இருக்கலாம். உண்மையை அடைய நான்கில் எந்த வாயிலும் கடந்து சதுர்முக பசதிக்குள் போகலாம்”.
நிர்மல முனிவரின் ஆன்மீகச் சொற்பொழிவுக்கு ஜெரஸோப்பாவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஜெரஸோப்பாவில் சென்னபைரதேவி ஒரு சமண சதுர்முக பசதியைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மிகப் பெரியதுமில்லை. ஆகச் சிறியதும் இல்லை. நான்கு பக்கமும் உள்ளே திறக்கும் வாசல் கதவுகள் அந்தக் கோவிலின் பிரார்த்தனை மண்டபத்துக்கு யாரையும் வரவேற்கும்.
கோவில் என்பதால் சிற்பமும், ஓவியமும், கட்டிடக்கலையின் உன்னதம் தொட்ட மண்டபங்களும், உயர்ந்த கோபுரங்களும், திருக்குளங்களும் இல்லை. தீர்த்தங்கரர்களான அறநாத், மல்லிநாத், முனீஸ்வரநாத் ஆகியோரின் திரு உருவச் சிலைகளும், வேலைப்பாடு அமைந்த விதானமும், கல்பாளம் மேவிய தரையுமாக மலர்ந்து நிற்பது சதுர்முக பசதி. திரிலோக ஜீன சில்பாலயா என்று பெயர் சூட்டப்படும் பசதிக்கு. மூன்று உலகத்துக்கும் நெற்றித் திலகம் போன்ற, சமண சிற்பங்களின் ஆலயம் என்று அந்தப் பெயர் பொருள் கொள்கிறது.
ஜெரஸோப்பாவில் மட்டும் சதுர்முக பசதியா? ஹொன்னாவரிலும் கட்டினால் என்ன? இரண்டாவது தலைநகரம் இல்லையோ இந்த நகரம் என்று ஊர்ப் பிரமுகர்கள் சென்னாவைச் சந்தித்து உரிமையோடு முறையிட்டதுமே சரி என்று சொல்லி விட்டாள் சென்னபைரதேவி மிளகு மகாராணி.
ரதவீதிக்குப் பின்னால், சரியாகச் சொல்லப்போனால் ரதவீதிக்கு இணைகோடாக, அதன் மேற்கே விரிந்திருக்கும் தறிக்காரர் வீதியில் ஏற்படுத்தப்படும் பிரார்த்தனைக் கூடம் அமைந்த கோவில் அது. ரதவீதியில் பெத்ரோ மாளிகைக்கு நேர் பின்னால் சதுர்முக பசதி எழுந்து நிற்கிறது.
அடுத்த மாதம் கட்டுமான வேலைகள் எல்லாம் முடிந்து, தரையைக் கட்டிடவேலை எழுப்பிய தூசி போக சுத்தம் செய்து, சுவருக்கு அடிப்படை வண்ணமும், மேலே ஆகாய நீலமும் சீராகப் பூசி, வழிபடப் பசதியின் கதவுகள் திறந்திருக்கும். வேலை சீரான வேகத்தில் நடந்தேறுகிறது.
இன்னுமோர் ஆயிரம் வராகனுக்குச் செலவுக் கணக்கு நீள வாய்ப்பு இருக்கிறது. சென்னபைரதேவி மகாராணியிடம் சொல்லியாகி விட்டது. இந்த வாரம் இறுதிக்குள் அளிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஜெரஸோப்பாவிலும், கோகர்ணத்திலும், பட்கல்லிலும் ஜீன சில்பாலயம், சிவன் கோவில், துர்க்கை கோவில் இப்படி ஒரே நேரத்தில் வழிபாட்டு ஸ்தலங்கள் எழுந்து கொண்டிருப்பதால், மிளகு ஏற்றுமதி ஆகி வரும் வருமானம் பெரும்பாலும் இந்த இனம் செலவுக்குப் போகிறது.
ஏற்றுமதி வருமான வரியாக, தொழில் வரியாக என்றெல்லாம் விதித்த பணம் கருவூலத்துக்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட சிறு தாமதமும் அரசாங்கச் செயல்பாட்டை எங்காவது பாதிக்கிறது. வரி கொடுக்கச் சொல்லிக் கேட்டால் குடிமக்களுக்குப் பிடிப்பதில்லை.
ஜெரஸோப்பா துறைமுகத்தில் அலைகளின் சீற்றம், பாறைக்கல்லால் கட்டப்பட்ட சுவர்களை அங்கங்கே வீழ்த்தியிருப்பதைச் சரியாக்க உடனடி மராமத்து வேலைகள் தேவைப்படுகின்றன. கோகர்ணம் நகரத் தெருக்கள் குண்டும் குழியுமாக அவற்றில் பயணம் செல்வதை அசௌகரியமான செயலாக்குகின்றன. ஹொன்னாவரில் புது சாக்கடை அமைப்பு இன்னும் பாதி நிறைவேறாமல் தெருவை ஒட்டி வெளியே சிதறியபடிதான் சாக்கடை ஓடுகிறது. அடுத்த மாதம் முதல் வாரம் எல்லா மிளகு ஏற்றுமதி வருமானமும் வந்து செலவு கையைச் சுடாமல் செல்லும். ஹொன்னாவர் சதுர்முக பஸதி கட்டுவதும் நிறைவடையும் அப்போது. வேலை நடக்கிறது.
அரசவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.