துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி நினைவில் வந்தவர், சென்னா போல் நீண்ட காலம் இங்கிலாந்து மகாராணியாக இருந்த, அண்மையில் காலம் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணி.
சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள் ஆக (5 seasons, 10 episodes each) ஒளிபரப்பாகிறது. இன்னும் ஒரு பருவம் பாக்கி இருக்கிறது. மொத்தம் அறுபது மணி நேரம் சாவதானமாக நீட்சி அடைந்து உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்கள் ஆர்வத்தோடு விரும்பிப் பார்க்கிற வெப் சீரியலாக The Crown தி க்ரவுன் எல்லா அர்த்தத்திலும் வரலாறு படைக்கிறது.
கிட்டத்தட்ட எலிசபெத்தின் அறுபதாண்டு மகாராணி வாழ்க்கையைச் சித்தரிக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.
இது இங்கிலாந்து மகாராணி சரித்திரம் மட்டுமில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு அப்புறமான பிரிட்டீஷ் அரசைத் தழுவிச் செல்லும் நீண்ட கதையாடல் இது, பீட்டர் மார்கன் எழுதியிருக்கும் திரைக்கதை தெளிவாகவும், சுவாரசியமாகவும் மிளிர்கிறது.
எலிசபெத் சந்தித்து, ஆணையிட்டு, இடைகலந்து பழகிய பிரிட்டீஷ் பிரதம மந்திரிகளின் நீண்ட வரிசையை நோக்கினாலே இந்தப் பிரம்மாண்டம் மனதில் படும். வின்ஸ்டன் சர்ச்சில், ஹெரால்ட் மாக்மில்லன், மார்கரெட் தாட்சர், ஹெரால்ட் வில்சன், ஜான் மேஜர், எட்வர்ட் ஹீத், டேவிட் காமரூன், டோனி ப்ளேர் என்று மாறிமாறி கன்சர்வேடிவ் கட்சியும் தொழில் கட்சியும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய இந்தப் பிரதமர்களில் சிலர் எலிசபெத்தின் தாத்தா வயதானவர்கள். அவர்களில் மகாராணியின் தந்தை வயதானவர்கள், கணவர் வயதானவர்கள், சகோதரி சகோதரர் வயதானவர்கள், மகன் வயது இளைஞர்கள் என்று சகல வயதினரும் இந்தத் தொலைக்காட்சித் தொடரில் பாத்திரப் படைப்பாகிறார்கள். மகாராணி இன்னும் கொஞ்சம் நாள் ஆயுளோடு இருந்திருந்தால் தற்போதைய இந்திய வம்சாவளி பிரிட்டீஷ் பிரதமர் ரிஷி சுனாக்கும் கதாபாத்திரமாகி இருப்பார்.
எலிசபெத் குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சலனங்களை, மகாராணியின் மருமகளான டயானாவை, எலிசபெத் கணவர் பிலிப் இளவரசரை, மகன் சார்லஸ் இளவரசரை, சகோதரி மார்கரெட்டை எலிசபெத்தோடு சூழ்ந்து நிறுத்தி நிகழ்கிறது த க்ரௌன். சர்வதேச அரசியல், பொருளாதார மாற்றங்களை, நாடுகள் சிதறுண்டு போவதை, புதிதாக எழுவதை எலிசபெத் வாழ்க்கைச் சித்தரிப்பின் விளிம்புகளிலிருந்து காட்சிப் படுத்தப்படுகிறது. உலகப் பொருளாதாரத் தலைமையை அமெரிக்கா ஏற்க, பிரிட்டீஷ் பொருளாதாரம் அதல பாதாளம் தொட்டு, ராணி எதுக்கு நமக்கு, தண்டச் செலவு என்று பிரிட்டீஷ் பிரஜைகள் அங்கலாய்பதும் கடந்து போகிற காட்சிகளாகிறது.
பெரும் வரலாற்றோடு குறுஞ் சரித்திரமும் கதையாகிறபோது பார்க்க சுவாரசியமாக இருக்கிறது. 1952 டிசம்பரில் ஐந்து நாட்கள் லண்டன் மாநகரம் மாபெரும் மூடுபனிப் படலத்தால் சூழப்பட்டு சகல விதமான இயக்கமும் நின்று போனது. இரண்டாம் முறை பிரதமாராக வந்த வின்ஸ்டன் சர்ச்சில், ’மூடுபனி எல்லாம் கடவுளின் விளையாட்டு, பெருமழை மாதிரி. ஒன்றும் செய்ய முடியாது. தானே அது நீங்கும்வரை பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்’ என்று சொல்லி விட்டார். எதிர்க் கட்சிகள் மட்டுமில்லை, எலிசபெத் மகாராணியும் உறையூர் சுருட்டு பிடிக்கும் அந்தக் கிழவனாரின் பிடிவாதத்தால் எரிச்சலடைகிறார்கள். கிட்டத்தட்ட சர்ச்சிலை பதவி விலகச் சொல்லும் இக்கட்டான நிலைக்குத் துரத்தப்படுகிறார் எலிசபெத்.
ஆனால் முதியோரின் தெய்வம் உண்டே, ஐந்தாம் நாள் பனி, சர்ச்சில் சொன்ன மாதிரி தானே விலகி பிரகாசமான சூர்யோதயம்!
இன்னொரு micro history நிகழ்வு. மார்கரெட் தாட்சர் பிரதமரானதும் எலிசபெத் மகாராணியும் அரச குடும்பமும் அவர்கள் வார இறுதி ஓய்வு எடுக்கும் ஸ்காட்லாண்ட் பல்மோரல் கோட்டைக்கு அவரை அழைத்து ராகிங் செய்கிறார்கள். காலியாகக் கிடந்த நாற்காலியில் தாட்சர் உட்கார்ந்ததும், எலிசபெத் ராணியின் சகோதரி மார்கரெட் ”என்ன தைரியம் இருந்தால் விக்டோரியா மகாராணி உட்கார்ந்த நாற்காலியில் உட்காருவீங்க. நாங்களே அதிலே உட்கார மாட்டோம். அவ்வளவு மரியாதைக்குரிய மர நாற்காலி இது. உட்கார்ற முன் யார் கிட்டேயும் கேட்க மாட்டீங்களா” என்று நாட்டின் பிரதமரைத் திட்டித் தீர்க்கிறது அவசியம் பார்க்க வேண்டியது.
இளம் வயது எலிசபெத், நடுவயதில் அவர், மற்றும் முதுபெண்ணாக எலிசபெத் என்று அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப, மூன்று நடிகையர் எலிசபெத்தாக நடிப்பது புதுமைதான். மகாராணி மட்டுமில்லை, அவர் குடும்பத்து முக்கிய உறுப்பினர்களும் காலகட்டத்தைப் பொறுத்து வெவ்வேறு நடிக நடிகையரால் நடிப்பிக்கப் படுவது சிறப்பு.
எலிசபெத் மகாராணியாக நடிக்கும் க்ளையர் ஃபய், ஒலிவிய கால்மன், இமல்டா ஸ்டண்டன் மூன்று பேரும் அற்புதமான நடிகையர் என்றாலும், முதிய எலிசபெத் இமல்டா ஒரு மாற்று அதிகம் நல்ல நடிப்பு. வின்ஸ்டன் சர்ச்சிலாக வரும் அமெரிக்க நடிகர் ஜான் லித்கவ், மார்கரெட் தாட்சராகத் தோன்றும் ஜில்லியன் ஆண்டர்சன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.
இவர்களோடு பிரகாசிக்கும் இன்னொருத்தர் – பக்கிங்ஹாம் அரண்மனையின் கட்டுக்காவலை எல்லாம் மீறிச் சுவரேறிக் குதித்து உள்ளே நுழைந்து, எலிசபெத் மகாராணியின் படுக்கை அறையில் புகுந்து, அவர் விழித்தெழும்போது கட்டிலுக்கு அருகே இருந்து, ’மார்கரெட் தாட்சர் ஆட்சியில் விலைவாசி ஏறிடுச்சு, அரசாங்கம் ஏழைபாழை பக்கம் இல்லை’ என்று நடுராத்திரி ராஜ உரையாடலில் ஈடுபட்ட Michael Fagan மைக்கேல் ஃபேகன் என்ற சாமானிய பிரிட்டீஷ் குடிமகனாக வரும் நடிகர் பெயரை எப்படி மறந்தேன்!