கோடையில் நினைவு வரும் மார்கழி

50 வருடம் முந்திய ஒரு மார்கழி இப்போது தகிக்கும் கோடையின் போது
நெம்பர் 40, ரெட்டைத் தெரு நாவலில் இருந்து
—————————————————————————————
குளித்துப் பசியாறி, மார்கழி மாத விசேஷப் பொருட்களான சிவன்கோவில் வெண்பொங்கல் பிரசாதமும், பெருமாள் கோவில் புளியோதரை பிரசாதமும் ஒரு பிடி பிடித்துவிட்டு நாங்கள் கூடும் இடம் முருகேசன் படக்கடை. அழகான காலண்டராக சாமி படம் கைக்குக் கிடைத்தால் தேதி பார்க்க அதை மாட்டி வைப்பது இரண்டாம் பட்சமாக இருந்த காலம் அது. அந்த வண்ணப் படங்களை மரச் சட்டத்துக்கு நடுவில் வைத்து, மேலே கண்ணாடி பொருத்தி வீபுதியும் குங்குமமுமாக வீட்டு பூஜை அறையில் குடியேற வைப்பது தலை போகிற காரியமாகக் கருதப்பட்டது. சைக்கிள்கடை ரங்கராஜு வீட்டில் எம்.ஜி.ஆர் படங்களும் இப்படி ஆராதிக்கப்பட்டன. காலண்டர்களை கண்ணாடிச் சட்டம் பொருத்தி புனிதமாக்கும் வேலை முருகேசன் படக்கடையில் நடக்கும். புதுக் காலண்டர் கிடைக்கும் ஜனவரியில் முருகேசன் கடைக்கு ஊரின் எல்லா திக்குகளில் இருந்தும் பக்திப் படையெடுப்புகள் நிகழ்வது வாடிக்கை. ஊதுபத்தி மணக்க கடைக்கே தனியான புனிதம் வந்திருக்கும் அப்போது. .

மார்கழியில் முருகேசன் கடையில் பொங்கல் வாழ்த்து விற்பனையும் மும்முரமாக இருக்கும். நடிகர் முத்துராமன் சாயலில் தலையில் முண்டாசோடு ஏர் உழவன், தலையில் பானையோடும் முகத்தில் சரோஜாதேவி சாயலோடும் நடக்கிற அவன் மனைவி, ஓரமாகச் சாய்ந்து சரிந்து பொங்கிக் கொண்டிருக்கும் பொங்கல் பானை, பின்னால் உழவு மாடுகள், கரும்பு என்று பட்டியல் வைத்துக்கொண்டு வரைந்த வார்னிஷ் வாடைப் படங்கள் எல்லாப் பொங்கல் வாழ்த்திலும் இடம் பெற்றிருக்கும். வாழ்த்தைப் பிரித்தால், வீர வள்ளுவன் சாரோ, கார்மேகம் வாத்தியாரோ எழுதிக் கொடுத்த மாதிரி கவிதையும் இல்லாமல் உரைநடையும் இல்லாமல் கலவையான மொழியில் உலகத்தில் இருக்கப்பட்ட சகலருக்கும் பொங்கல் பொங்கட்டும் என்று எட்டு வரியில் வாழ்த்தி அச்சடித்திருப்பது கண்ணில் படும். இதெல்லாம் பார்க்கவும் படிக்கவும் மூக்குக்குப் பக்கத்தில் பிடித்து வாசனை முகரவும் சவுகரியமாக இருக்குமே தவிர காசு கொடுத்து வாங்கவோ யாருக்காவது அனுப்பவோ தேவையில்லாத சமாச்சாரங்கள் என்று ரெட்டைத்தெருவில் பொதுக் கருத்து நிலவியது. ஆனாலும் அப்பாவுக்கு வருடம் தவறாமல் போஸ்ட்மேன் சின்னகிருஷ்ணன் பொங்கல் நேரத்தில் ஒரு வாழ்த்தை டெலிவரி செய்வார். நெற்குப்பை என்ற ஊரிலிருந்து அவருடைய சிநேகிதர் அனுப்பிய அந்த வாழ்த்தில் எல்லா வருடமும் ஏரிக் கரையில் நடந்து போகிற பசுமாடு தான் கண்ணில் படும். நெற்குப்பையில் அந்த ஒரு பொங்கல் வாழ்த்து மட்டும் எல்லா வருடமும் விலைக்குக் கிடைத்திருக்கலாம்.

முருகேசன் கடையில் பொங்கல் வாழ்த்துகளை ஒரு தடவை பார்வையிட்டானதும், அடுத்த வேலை. இது கிரிதரனுக்கு ஒத்தாசையாகக் கோவில் கட்டுவது.செங்கல்லையும் கருங்கல்லையும் அடுக்கி சிமிட்டி குழைத்துப் பூசி தாடிக் கொத்தனார் செய்கிற கட்டிட வேலை இல்லை. கிரிதரன் நேருபஜார் கோடியில் பெரிய ஆஸ்பத்திரியில் ஒரு கம்பவுண்டரைப் பிடித்து அவர் மூலம் காலியான கண்ணாடி சிரிஞ்சுகளை சப்ஜாடாக வாங்கி வந்திருந்தான். நானூறு ஐநூறு ஊசி மருந்துக் குப்பிகள் அவை. எல்லாவற்றையும் வென்னீரில் சுத்தமாகக் கழுவி உலர வைத்து கிரிதரன் சொன்ன வரிசையில் அடுக்கி கோவில் அமைக்க வேண்டும். கோகலே ஹால் தெருவில் அவனுடைய சிநேகிதர்கள் கற்றுக்கொடுத்த வித்தை அது. ரொம்பவே பிகு பண்ணிக் கொண்டு எங்களையும் வேலைக்கு எடுபிடிகளாகச் சேர்த்துக் கொண்டான் அவன். ‘பொங்கலுக்கு முன்னாடி கோவில் ரெடியாகிடணும்டா’. அவன் கட்டளையை சிரமேற்கொண்டு எல்லோரும் செயல்பட்டோம். அதன் பகுதியாகத்தான் முருகேசன் கடைக்கு இப்போது வந்தது.

கண்ணாடிக் குப்பிகளை வரிசையாக ஏழெட்டு தளங்களில் அடுக்கத் தோதாக கண்ணாடிப் பட்டைகளை முருகேசன் அடி ஸ்கேலால அளந்தார். அப்புறம் ஒரு கூர்மையான கத்தியை எடுத்தார். ‘இது முனையிலே என்ன இருக்கு தெரியுமா? அசல் வைரம். அதுதான் கண்ணாடியை அறுக்கும்’. அவர் காட்டிய அந்த வைரக்கத்தியை மரியாதையோடு பார்த்தோம். மொத்தம் பனிரெண்டூ தடவை கத்தி ஏறி இறங்க, கண்ணாடிப் பலகைகள் எங்கள் கைகளை நிறைத்தன.

கண்ணாடி விழுந்துவிடாமல் பத்திரமாக ஏந்திப் பிடித்தபடி நாங்கள் நுழைந்த அடுத்த இடம் சந்திரகாந்தன் வளையல்கடை. சாயந்திரங்களிலும் ராத்திரியிலும் இங்கே நுழைய முடியாது. பெண்கள் கூட்டம் ஒரு செண்டிமீட்டர் விடாமல் ஆக்கிரமித்துக் கொண்டு வளையல் போடக் கையை நீட்டியபடி காத்திருக்கும். அதுவும் பொங்கலுக்குப் புது கண்ணாடி வளையல் வாங்க ஊர்ப் பெண்கள் திரண்டு வரும் நேரம் இது. வளைகாப்பு ஆன கிருபாகரனின் பெரிய அக்கா மாதிரி இரண்டு கைமுழுக்க கலர் கலராகக் கண்ணாடி வளையல்கள் கலகலக்க செண்பக லட்சுமி டைப் இன்ஸ்டிட்யூட்டுக்கு தட்டச்சு பழகப் போனதை நேற்றைக்குப் பார்த்தோம்.

சந்திரகாந்தன் கடையில் எங்களுக்கு வளையல் தேவையில்லை. வஜ்ரப் பசை தான் வேண்டியிருந்தது. காலி ஊசி மருந்துக் குப்பியின் அடியில் அதைத் தடவினால்தான் அது செங்குத்தாக கண்ணாடிச் சட்டத்தில் ஒட்டிக் கொண்டு நிற்கும். இப்படி நாலு வரிசை சிரிஞ்ச் தூண்களை நிறுத்தி மேலே அடுத்த கண்ணாடிச் சட்டத்தை வைத்தால் கோபுரம் ஒரு நிலை பூர்த்தியாகும். மொத்தம் ஏழு நிலை எழுப்ப வேண்டும்.

கோபுர நிர்மாணம் மும்முரமாக நடந்தபோது நல்லையா வரவு நிகழ்ந்தது. விகடன் விநியோகமாகும் நாள் அது. மாவட்டச் சிறப்பிதழ்களை ஆனந்த விகடன் வெளியிடத் தொடங்கிய காலம். தஞ்சை மாவட்டச் சிறப்பிதழாக, அமுல் பேபி மாதிரி கொழுகொழுவென்று தரையில் கிடந்த ஆனந்த விகடனை ஆசையோடு பார்த்தோம்.

ஜாக்கிரதையாகக் கை கழுவி, துடைத்து வந்து விகடனைப் பிரிக்க தஞ்சை மாவட்டத்தின் பயணம் போய் ராத்திரி நேரத்தில் ஒரு கிராமத்தில் இறங்கி வழிகேட்டது பற்றிய கட்டுரை இன்னும் நினைவில் இருக்கிறது. ‘அச்சு வெல்லம்’ என்று சொன்னால் கோபப்படும் ஒரு பெரியவரை அவருடைய மனைவி இறந்ததைச் சொல்லிக் கூப்பிட்டு வருவதாக சிறப்புச் சிறுகதை – தி.ஜானகிராமன் தேர்ந்தெடுத்தது என்று போட்டிருந்தது. அப்புறம், எம்.ஜி.ஆர் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்’ வாழ்க்கை வரலாற்றுத் தொடர். அது கூட அந்த இதழில் தான் தொடங்கியதாக நினைவு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன