At Alwarpetஆழ்வார்ப்பேட்டையில் ஐந்து நிமிடம்


விஸ்வரூபம் நாவல் முதல் பிரதியோடு ஒரு மணி நேரம் முன் ஆழ்வார்பேட்டை போயிருந்தேன். நம்பர் 4, ஆழ்வார்பேட்டை கல்யாண வீடு போல கலகலப்பாக இருக்கிறது. மாடிக்கும் கீழுமாக எல்லா மொழியிலும் தொலைபேசியபடி ஓடிக் கொண்டிருக்கிறார் விஸ்வரூப நாயகன். உற்சாகமும் மன நிறைவும் குரலிலும் முகத்திலும் நிறைந்திருக்கிறது.

பேசிக் கொண்டிருந்த அழைப்பை முடித்து, என் கையில் இருந்து புத்தகத்தை வாங்கி அட்டையை ரசிக்கிறார். ‘நீங்க அனுப்பியிருந்தீங்களே’. ஆமாம், அட்டை லே அவுட் ஆனதும் அனுப்பியிருந்தேன்.

புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்புகளை வேகமாகப் படிக்கிறார், ‘உங்க மேலே கேஸ் போடப் போறேனே.. நீங்களும் விஸ்வரூபம்னா டைட்டில் வச்சீங்க?’ வேடிக்கைப் பேச்சோடு சிரிப்பு வெடிக்கிறது. ‘அதானே முதல் காப்பியை உங்களுக்குக் கொடுத்திட்டேன்.. இப்ப என்ன செய்வீங்க’ என்கிறேன்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் கிருஷ்ண கான சபாவில் ப்ரிஜ் மஹாராஜின் கதக் நிகழ்ச்சி(ஏழு வயசிலே இருந்து கத்துக்கிட்டு இருக்கார் சார், நான் ஒண்ணரை மாசம் படிச்சுட்டு ஆடினேன்.. எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கலென்னு வருத்தமா இருக்கு), குருவின் சிஷ்யை சாஷ்வதி சென்னின் அபிநயம், கதக் இசை பற்றி எல்லாம் பகிர்ந்து கொள்கிறோம்.

அந்த ஒண்ணரை மாச ஆட்டமே படத்தில் எவ்வளவு நேர்த்தியாக, காத்திரமாக வந்திருக்கிறது என்பதை விஸ்வரூபம் பட உருவாக்கதில் தொடர்புள்ளவர்கள் அறிவார்கள்.

மாடியில் அடுத்த தொலைபேசி அழைப்பு என்று யாரோ வந்து சொல்ல நான் கை குலுக்கி விடைபெறுகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன