லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். வழக்கமாக பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்த வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கே ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம். சாயந்திரம் சூரத்துக்கும், அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள்.
இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, மிளகு விழுதில் விழுந்து புரண்டு, மேலெல்லாம் மிளகுக் காப்பு புரட்டிக்கொண்டு, சுட வைத்த எண்ணெயில் சாடி முக்குளித்துப், பொரிந்து கொள்ளவேண்டும். அல்லது மீன்கள் தம் செதில் உதிரக் கல்லில் உரசி உரசித் தேய்த்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் விழுந்து நீந்தி, அந்திம நித்திரை போகவேண்டும். கோழி முட்டைகள், இரும்பு வாணலியில் ஒன்றை ஒன்று, அடித்து உடைத்துக் கிண்டிக்கொண்டு, மிளகாயும் வெங்காயமும் சேர முட்டைக்கறி ஆக வேண்டும்.
இதெல்லாம் நடக்க முடியுமானால் நூறு பேர் சாப்பிட வரும்போது அவசரமாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரிமாற வேண்டியிருக்காது. என்ன செய்ய, ஒஃபிலியா சாப்பாட்டுக்கடை உரிமையாளர் அல்வாரிஸ் காலை பத்து மணிக்கு விருந்து தயாராகி விடும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார்.
கடைகண்ணியில் மாதச் சம்பளத்துக்குப் போய்ச் சேர்ந்தால் இந்த மாதிரி தொந்தரவுகள் எழும்பும் அவ்வப்போது. லூசியா அவற்றைச் சமாளித்தே ஆகவேண்டும். இது சரிப்படாது என்றால் கோவாவில் இருந்து ஹொன்னாவருக்கு வேலை தேடியே வந்திருக்கக் கூடாது.
கோவாவிலேயே இருந்தால் சதா வெற்றிலை பாக்கை மென்று துப்பிக்கொண்டு, வண்டித் துறையில் தலையில் சும்மாடு வைத்து பிரயாணிகளுடைய மூட்டை முடிச்சுகளைத் தூக்கிச் சுமந்து அரைப் பணமும் ஒரு பணமுமாகக் காசு கூலி வாங்கிக்கொண்டு, வீடு பெருக்கி எச்சில் தட்டு கழுவிக் காசு வாங்கிக்கொண்டுதான் ஆயுசுக்கும் இருக்க வேண்டிவரும்.
அப்படி இருந்தால், இன்னும் பத்து வருடத்தில் பல் காவி பிடித்துவிடும் அல்லது உபத்ரவமில்லாமல் விழுந்துவிடும். மூட்டை தூக்கித் தூக்கிக் குத்திருமல் வந்து யாரும் கூலிகொடுத்துக் கூப்பிட மாட்டார்கள். வீடு பெருக்கி, மெழுகி, துணி துவைத்து, பாத்திரம் கழுவுவது வேணுமானால் நாலைந்து வீட்டுக்கு செய்து கை காய்த்துப் போயிருக்கும்.
ஆனால் பழமை அழுத்தமாகப் பதிந்த கோவாவை விட்டு வெளியே ஹொன்னாவர், பட்கல், உடுப்பி, ஹம்பி என்று போய் உணவுக்கடை உத்தியோகம், துணி, காய்கறி-பழக்கடை, மிட்டாய்க்கடை வேலை என்று சேர்ந்துவிட்டால் பத்து வருடத்தில் அங்கே கிடைத்த அனுபவத்தையும், சேர்த்து வைத்த சம்பளப் பணத்தையும் கொண்டு சிறியதாக சொந்தக்கடை ஒன்று போட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வாய்ப்பு உண்டு. அந்த நம்பிக்கை தான் காலை ஆறுமணிக்கு கோழி சமைக்க வரவழைக்கிறது.
லூசியாவுக்கு முகலட்சணம் கொஞ்சம் இருந்தால் போர்த்துகீஸ் பிரபுக்களின் மாளிகை நிர்வாகியாகக் கைநிறைய வருமானம் கிடைக்கும். ஆனால் அங்கேயெல்லாம் வேறு மாதிரி சிக்கல். தனியாக இருக்கும் நேரத்தில் வீட்டு ஆண்கள், விருந்துக்கு வந்த காமாந்தகர்கள் என்று அவனவன் கோவாப் பெண் உடம்பு கேட்பான்.
அதிலும், லூசியாவின் ஒன்றுவிட்ட அத்தை மகள் கஸாண்ட்ரா போன்ற ஒரு சிலருக்கு வீட்டையும், வீட்டு எஜமானையும் சேர்த்து நிர்வகிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படியே பணிக்காலம் முடிந்து துரை திரும்ப லிஸ்பன் போகும்போது, பெண் நிர்வாகியும் போகவும், அங்கே ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கவும் சந்தர்ப்பம் நிறைய உண்டு,
எல்லாம் யோசித்தபடி வாசல் கதவை உள்ளே தாழ் போட்டுக்கொண்டு லூசியா மிளகை விழுதாக்க ஆரம்பித்தாள். நேற்றிரவே ஊற வைத்த மிளகு என்பதால் குழைந்து குழைந்து விழுதாகக் கஷ்டமில்லாமல் அரைபட்டுக் கொண்டிருந்தது.
”லூசியா, லூசியா” என்று வாசலில் கதவை அடித்தபடி யாரோ கூப்பிடும் சத்தம். மீன் வாடை பலமாகச் சூழ்ந்தது. வாசலுக்குப் போகாமலேயே லூசியாவுக்கு யார் வந்தது என்று தெரியும். மீன்கார அபுசாலி ராவுத்தர். இன்றைக்கு விருந்துக்கு ஆற்றுமீன் வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்ததால் வந்திருக்கிறார்.
லூசியா மிளகு விழுது அரைக்கும் அம்மிக் குழவியைக் கல்மேல் ஏற்றி வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள்.
“அப்போ பிடிச்சு கூவிட்டிருக்கேன் உள்ளே கேட்கலியா?” என்றபடி அபுசாலி ராவுத்தர் பெரிய மீன்கூடையை கதவுக்கு இடையே உள்ளே தள்ள, கூடைக்குள் இருந்து, இன்னும் உயிர் இருந்த ஒரு மீன் துள்ளி வெளியே விழுந்தது.
எடுத்து உள்ளே போட்டபடி ”எல்லாம் நேத்து ராத்திரி பிடிச்ச மீன் இதுக்கு மேலே புதுசு வேணும்னா சோத்துக் கடையை சமுத்திரத்துக்கு உள்ளே உக்காந்துதான் நடத்தணும்” என்றார்.