புது நாவலில் அத்தியாயம் மூன்றில் இருந்து
மருத்துவம் பார்க்க மந்திரவாதியை அழைக்க, ஒட்டகச் சிவிங்கி வந்து நிற்கிற அத்தியாயம்
ஆதன் நல்ல மனிதன். முழுநிலவு நாட்களில் மட்டும் மனம் தரிகெட்டு ஓட அவன் ஒரு பக்கமும் இடுப்பு முண்டு இன்னொரு பக்கமுமாக நடுராத்திரிக்கு ஊருணிக்கரையில் அமர்ந்திருப்பது தவிர்த்தால். அது குடிப்பதற்கான நல்ல தண்ணி ஊருணி. அங்கே இவன் குளிப்பான் பௌர்ணமி ராத்திரியில். அவனைத் தவிர ஊர்ணியை அடுத்த பிரசவ ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளின் பீத்துணியை அலசிப் போவதும் நடக்கிற காரியம்தான்.
ஒரு பௌர்ணமியன்று நடு ராத்திரிக்கு ஊருணிக்குள் இறங்கி முழுக்குப் போடும்போது நல்ல சிவப்பு நிறத்தில் நிலா வெளிச்சத்தில் நீர் கிடந்ததைக் கண்டான் ஆதன். ஆரஞ்சுப் பழச்சாறு வண்ணத்தில் நல்ல இனிப்பாக ஊறிவரும் ஊருணி நீர் இப்படிக் குருதி போல நிறமடித்துக் கிடப்பதேன்?
அவன் யோசித்த பொழுது பின்னால் படித்துறையில் நின்று யாரோ கையைத் தட்டுகிறது சப்த ரூபமாகக் காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்க புகை உருவமும், அதில் உள்வாங்கிய கண்ணும், நீண்டு நகம் வளைந்திருக்கும் கரங்களும் முழங்காலுக்குக் கீழ் உருவம் சிதிலமடைந்திருப்பதுமாக நின்றவர் ஆவியுலகப் பிரமுகராகத்தான் அவன் கண்ணுக்குத் தெரிந்தார்.
நல்ல தண்ணி ஊருணியிலே கால் கழுவறது மகா பாவம் தம்பி அஞ்சு நிமிஷம் கழிச்சு உனக்கே தாகம் தவிக்கும். அப்போ குடிக்க நல்ல தண்ணிக்கு எங்கே போவே? உன் குண்டி கழுவி நீயே எடுத்துக் குடிக்கறது சரிப்பட்டு வருமா சொல்லு.
மிதந்து கொண்டே பேசிய அந்த ஆவி ரூபம் தொண்டையில் கரகரப்பு தோன்ற நாலுமுறை இருமியது.
சொல்லு தம்பி. மறுபடி சொன்னது அது.
பெரியவரே நான் அவசர ஆத்திரத்துக்கு ஒரே ஒரு முழுக்கு போடறது உண்டுதான். மன்னிச்சுக்குங்க. அதுக்கு முந்தி வீட்டுலே நடு ராத்திரிக்கு எழுந்து குளிச்சுட்டு தான் வெளிக் கிளம்புவேன். எங்க அம்மா கிட்டே கேட்டுப் பாருங்க. கோட்டிக்காரப் பிள்ளைன்னு அது நான் ராத்திரி குளியல் போடும்போதெல்லாம் அழுவாங்க. இன்னிக்கு இன்னும் அழுதுட்டு இருக்காங்க.
அவன் நிறுத்தாமல் பேச ஆவி ரூபம் சொன்னது – நான் உடையப்பா. இன்னிக்கு முன்னூறு வருஷம் முந்தி இந்த ஊருணியை வெட்டி வச்சேன். அதுவரை சனம் முச்சூடும் பக்கத்திலே காஞ்சிரம்பட்டியிலே கிணற்றுத் தண்ணியை மொண்டுக்கிட்டு வந்து குடிச்சுட்டுக் கிடக்கும். கிணறு வத்தினா ஊரோட கஷ்டம். அதெல்லாம் ஓய்ச்சு வைக்க ஊருணி தோண்டினா நீ அதுக்குள்ளே இறங்கி அப்படித்தான் குளிப்பேன்னு அடம் பிடிக்கறியே நல்லா இருக்கா.
பெரியவரே நான் தலைபோகிற அவசரத்திலே இருக்கேன். ஒரு லக்குக்கு போக வேண்டி வருது. போய்ட்டு வந்து உம்மோட மீதிக்கதை கேட்கிறேன்.
ஆதன் ஈரங்காயாத தலைமுடியை கையாலே ஒதுக்கிக்கிட்டு பெரியவரோட புகை ரூபத்தைக் கடந்து அந்தப் பக்கம் போகப் பார்க்கிறான். இரும்புக் கதவு நடுவிலே வந்து அடைச்ச மாதிரி அவன் முகத்தில் அந்தத் தடை அறையுது.
சொல்லச் சொல்ல கேட்காம போறியே இந்த உடையப்பா சேர்வைக்காரனை அப்படி எல்லாம் எடுத்தெறிஞ்சுட்டு போக முடியாது.
அவர் குரல் உயர்த்த, ஆதன் அடிபணிகிறான். அய்யா அவசரமுங்க நான் போகலேன்னா கந்தர்கோளமாயிடும். நான் போய் மத்தியஸ்தம் செய்யணும்.
அப்படி என்னப்பா நடுராத்திரி பஞ்சாயத்து பண்ண அவசரம்?
உடையப்பரின் ஆவி விசாரித்தது.
வாதினிப் பேய்மகளுக்கும் சாதினிப் பேய்மகளுக்கும் யுத்தம் நடக்குது. ரெஃபரியாக நான் போனால்தான் ஆச்சு.
உடையப்பா நிறுத்தி நிதானமாகச் சிரித்தார். வாதினியும் சாதினியும் யட்சிங்க இல்லியோ என்று விசாரித்தார் அவர் தொடர்ந்து.
ஆமா அதே தான், சொல்லியபடி .
நனைந்த வேட்டி ராக்காற்றில் பறக்க ஆதன் ஊருணிக்கு உள்ளே கால் வைத்து மையம் நோக்கி அவசரமாக நகர்ந்தான்.
ஏழு கிணறுகள் வரிசையாகக் குழித்து வற்றாத ஊற்றுக்களாக குடிநீர் பொங்க வைத்துக்கொண்டிருந்த ஊருணியின் மையத்திலிருந்து குரல்கள் கேட்க ஆரம்பித்தன. எல்லாம் பெண் குரல்கள்.