ஆயுள் நீட்டிப்பு மருந்து பருகப் பயிற்சி அளித்தபோது

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 30 இல் இருந்து ஒரு சிறு பகுதி

பெருந்தேளர் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. விடியற்காலையில் பெருந்தேளர் சஞ்சீவனி எதிர்கொள்ளுதலைத் தலையாய கடமையாகப் பிரகடனப்படுத்த இருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் பெருமகிழ்ச்சியோடு சாவா மருந்து பருகி நீள உயிர்க்கப் போகிறார்கள். குடும்பம் இல்லாத ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் சஞ்சீவனி பெருமருந்தை உடலில் ஏற்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழத் தயாராக இருக்கப் போகிறார்கள்.

அதிகம் யாரும் செலவழிக்கக் கையைக் கட்டிக்கொண்டு தேளரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. வெறும் ஒன்றரை பைனரி காசு செலுத்தி என்ன என்ன எல்லாம் உடல் நலமூட்டப்படப் போகிறார்கள் ஒவ்வொருவரும்.

ஒரு பிஸ்கோத்து பாக்கெட்டின் விலையில் நான்கில் ஒரு பங்கு. ஒரு கோப்பை காப்பி விலையில் பத்தில் ஒரு பங்கு, ஓர் ஆணுறை விலையில் இருபதில் ஒரு பங்கு. ஒன்றரை பைனரி காசு, வயது நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆளாளுக்கு ஒரு பைனரி காசு அடைத்தால் போதுமானது. எழுபது வயதிலிருந்து விலையின்றி இச்சேவை அளிக்கப்படும்.

என்ன எல்லாம் மருத்துவ சேவைகள் குடிமக்களுக்குக் கிடைக்கப் போகின்றன?

நகரும் ஊர்தியிலிருந்து ஒலி வாங்கியைக் கையில் பிடித்தபடி ஒரு பைனரி நாணயம், ஓராயிரம் நன்மை வெற்றிபெற வந்து பங்குபெறும்படி மறுபடி மறுபடி வேண்டி விரும்பும் உற்சாகமான குரல் கர்ப்பூரமய்யனது- ஒலிப்பதிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் குரல்.

அவன் சொல்கிறான் -வயிற்றை முதலில் சுத்தம் செய்ய தொண்டை வழியாகவும் ஆசனவாய் மூலமும் ஒரே நேரத்தில் காற்றைச் செலுத்தி ஜீரண அமைப்பு முழுக்கச் சுத்தமாகின்றது.

பெருங்குடல் எந்தக் கசடும் தூக்கிச் சுமக்காமல் கழிவெல்லாம் இறங்கி சோப்பு நீர்கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறது. மெல்லிய சக்தி பூண்ட கிருமிநாசினியை நல்ல நீரோடு கலந்து மேற்கொண்டு உடல் பரிசுத்தமாக்கப் படுகிறது.

அடுத்து தமனிகளிலும், சின்னஞ்சிறு ரத்தக் குழாய்களிலும் ஓடும் குருதி யந்திரத்தின் வழியே ரத்த ஓட்டம் செலுத்தப்பட்டுச் சுத்தமடைகின்றது.

சஞ்சீவனி மேடையில் விளக்குகள் எரிய, அறிவியலார் ஐந்து பேர் நாற்காலியிட்டு அமர்ந்திருக்கிறார்கள். செந்தேளர், மானுடர் வகையினர் இவர்கள்.

கரப்பு சிறப்பு அழைப்பாளி நகரின் பாதாளச் சாக்கடை உலகத்தில் நேற்று மாலை உலவப் போனவர், சொர்க்கம் இதுதான் இதுதான் இதுதான் என முழங்கி அங்கிருந்து வெளியே வரமாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாராம்.

நாளை சஞ்சீவனி கருத்தரங்கு என்று கர்ப்பூரம் அவரிடம் நினைவு படுத்த, மயிர் அரங்கு போடா என்று துரத்தி விட்டான். பெருந்தேளரிடம் கர்ப்பூரம் இதைத் தெரிவிக்க, அவர் சினந்து மறுமொழி உரைத்தது இப்படி- கொட்டையை நெறிச்சு கொல்லுங்கடா அவனை.

அறிவியலார்கள் சஞ்சீவனி கருத்தரங்கின் ஒவ்வொரு அமர்விலும் பங்குபெற்றுத் தலையாட்டி பின்னர் ‘அற்புதமான ஆய்வு’ என்று மதிப்புச் சூட்டினார்கள்.

நாசி, பற்கள், நாவு, குறி, செவிகள், கண்கள் என ஒவ்வொரு அவயமாகச் சுத்தமாக்கப்பட்டு பரிசுத்தம் என வலது புறங்கையில் அடையாளம் ஏற்படுத்தும் சிலிக்கன் சில்லு செருகி, நெய் சொட்டும் கேசரியும், பாதாம் அல்வாவும், தோசைகளும் உண்ணக் கொடுக்கப்படுகின்றன.

பரிசுத்தப் படுத்தலுக்கு முன்பு இந்த உணவு உண்ணக் கிடைக்காது. பரிசுத்தப்படுத்துதலுக்கு அப்புறம் இந்த பைனரி விருந்து கொள்ளுதல் கட்டாயமானது.

பைனரி உணவின் அடக்க விலையே ஒரு பைனரி காசை விட அதிகமாக இருக்கும் என்று யாரிடமோ சொல்லியபடி கர்ப்பூரமய்யன் அரண்மனை விழா மண்டபப் படியேறிக் கொண்டிருக்கிறான்.

காசு சும்மா தண்ணீர் போல செலவழிந்தது. இது வீண் செலவு இல்லையா என்று பெருந்தேள்ப் பெண்டு கணவரிடம் குறைப்பட்டது மாற, இந்த காலம் தாண்டி வந்து குதித்த திருடன் சொன்னது எல்லாம் நடப்பாகிறது.

பெருந்தேளர் இவனது வசீகரத்தில் மயங்கி விட்டாரா என்று ஐயமுற்ற பெண்டு மனம் ஆறுதலடைய அவள் கணவர் சொன்னது –

சில்லில் இருக்குதடி சூட்சுமம் பெண்ணே.

பின்னே இல்லையா, அவர் பாட்டாகவே பாடிவிட்டார் –

சில்லு பதிக்கச் சொன்னா வல்ல பயகளும் மாட்டேன்னு ஓடிடுவான். இப்போ பாரு அவனவன் வந்து தோசை தின்னுட்டு ஆயுசுக்கும் அவனைக் கொத்தடிமை ஆக்கற சில்லு பதிச்சு விடு பதிச்சு விடுன்னு பிடுங்கி எடுத்து சில்லனாகி விட்டது மொத்த கோகர்மலைநாடே.

இந்தச் சில்லுகளை வைத்து ஒவ்வொரு தேள். கரப்பு, மனிதர், இதர ஜீவராசிகள் பெருந்தேளர்ப் பெருமான், அவரது அன்பு மனையாட்டி பெருந்தேள்ப்பெண்டான நீவிர் என இனி பிரஜைகளை ஒவ்வொருத்தரையும் கவனிப்பில் வைக்க முடியும்.

இது கேட்ட பெண்டு களி கூர்ந்து அப்போ, ஒரு சில்லு என்ன, ஒரு நூறு சில்லு பதிச்சுடலாமே என்றாளாம். உடம்பிலே அதை எல்லாம் பதிக்க இடம் வேண்டாமா என்று பெருந்தேளர் ஆட்சேபணை தெரிவிக்க அது நிற்கவென்று அப்போது கடந்தார்களாம்.

இதை அரண்மனை தினசரி நடவடிக்கை அறிக்கை சொல்கிறது. மேலும் இவற்றோடு சஞ்சீவனி மருந்தை எப்படி அதற்கான சிறப்புக் கோப்பையில் வார்த்து வாய்க்குள்ளோ, உதடு பட எச்சில் விழ வைத்தோ பருகாமல் ஒரு மடக்கில் எப்படிப் பிடித்து வாயில் ஒரு வினாடி சுவைத்து வயிற்றில் செலுத்தப்பட வேண்டும் என்று பயிற்சி தர சஞ்சீவனி பட்டறை முற்றிலும் காசு செலவின்றி இன்று முதல் நடத்தப்படுகிறது.

இந்தப்படி அறிவிக்கப்பட்டுள்ளதால் பயிற்சிக்காக ஓடோடி வந்து பழைய இரும்பு நாற்காலிகளை நிறைத்துக் காத்திருந்த பதவி ஓய்வு பெற்ற முதியோர் அதிகம் தட்டுப்பட்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன