From chapter 33 of Thinai or Sanjeevani
நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும்.
விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது.
ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது.
அவ்வகையில் இன்றைக்கு விடிகாலையில் பெருந்தேளரசர் ஆணைப்படி குயிலி ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் நீலனோடு மனத்தொடர்பு ஏற்படுத்தி அவரை உடனே உறக்கம் நீங்கி வரச் செய்யவேண்டும்.
அவர் அதற்கு முன், உறக்கத்தில் இருந்தபடியே சஞ்சீவினி மருந்து மானிட இனத்துக்கு மட்டுமானது இல்லை என்றும் சகல இனத்துக்குமானது என்றும் விளக்க அறிக்கை வெளியிட வேண்டும்.
அவர் எழ மறுத்து விட்டால் அவர் கனவில் மறைமுகமாக அவர் உயிர் பேரிடரில் இருப்பதைக் கோடிட்டுக் காட்ட வேண்டும். பெருந்தேளரின் கருணையே உருவான முகத்தைத் தேள் விடம் மூர்க்கமாகச் சுமந்திருக்கும் ஒன்றாகக் காட்டி நீலரை அவர் கனவில் நூறு தேள்கள் துரத்த ஓட வைக்க வேண்டும்.
இப்படி நிறைவேற்றக் கடினமான ஒரு பட்டியலோடு குயிலியைப் பெருந்துயில் மண்டபத்துக்குள் வரும்போது அவளுக்கு இதொண்ணும் அச்சமூட்டும் ஒன்று இல்லை. அங்கே சகல அலங்கார பூஷிதரான தேட்சவமாக அழுகிக் கொண்டிருக்கும் முதுபெருந்தேளர் தான் அவளைப் பயமுறுத்துகிறவர்.
நடைப்பிணம் போல் ஓடும், விஷமம் செய்யும், பாடும் பிணம் அவர். சகசயனத்தில் இருக்கும் அழகர் அழகியர் இன்னும் உயிரோடு இருப்பதால் இவருடைய தொந்தரவு தாங்காமல் சீக்கிரம் ஆயுளை முடித்துக்கொள்வதை எதிர்பார்க்கிறார்களாம்.
குயிலி அவ்வப்போது மண்டபத்தில் ஒவ்வொரு துயிலரின் உடல், உளம் தொடர்பான நிலைமையை ஆய்ந்து அறிக்கை அளிப்பது வழக்கம்.
துயிலர்கள் உள்மனம் குயிலியோடு சகஜமாக உரையாடும்போது சேகரித்த தகவலில் முதுவரின் கிழவிளையாட்டு தொடர்பானவற்றை நீக்கி அரசுக்கு அனுப்புவது வழக்கம். வானம்பாடி போன்ற நெருங்கியவர்களோடு பகிர்ந்து நகைக்க உதவும் முதுவர் குறும்புகள்.
இன்று ஏமப் பெருந்துயில் மண்டப ஆய்வில் நீலர் சம்பந்தமான உபரி நடவடிக்கை தேவைப்பட்டதால் நடு இரவு கழிந்ததுமே குயிலி துயிலரங்க மண்டபத்துக்கு வந்துவிட்டாள்.
முதுவருக்கு உடல் அழுகாமல் இருக்க நிறைய வேதியியல் பொருட்களை அவருக்கு இரண்டு நாள் முன்னதாகவே பூசி எகிப்திய பாரோ அரசனின் சவம் போல் அழுகி நாறும் கோலம் கொண்டு கிடக்கச் செய்து விட்டிருந்தாள் குயிலி.
அத்தனை வேதியியல் பொருள் பூசினால் உயிரோடு இருப்பவர் கூட செத்துப் போகக்கூடும். முதுவன் போன்ற பணக்காரச் சவங்கள் உறைந்து ஈயென்று அழுக்குப் பல் காட்டித் துயில்வது சகஜம்.
முதுவன் சவத்தை சாவகாசமாகக் கவனிக்கலாமென்று தீர்மானித்துக் குயிலி நீலரின் அதாவது பிரதி நீலனின் பேழையை நோக்கி நடந்தாள்.
வெறும் உறக்கத்திலிருப்பவர்கள் நெஞ்சு ஏறி இறங்கி அனிச்சைச் செயலில் இருப்பது போல் பெருந்துயில் கொள்வாரின் நெஞ்சு அசைவதில்லை. எனினும் அவர்களின் தொண்டையிலிருந்து ஊஊஊ என்று காற்று உள்ளிருந்து வெளியே கடந்து போவது போல் மெல்லிய சத்தம் எழுப்பி வெளியேறும். அவர்களுக்கு டான்ஸில்லிடிஸ் வரக் காரணம் இதுதான்.
பேழையின் மூடியை உயர்த்தி அந்தச் சத்தத்தைக் கேட்க குயிலி காத்திருக்க, பிரதி நீலர் தலை குழைந்து பேழைக்குள் தலைகீழாக விழுந்துவிட்டார்.
அவருக்கு உயிரில்லை என்று குயிலிக்குப் போதமானது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள் அவள். அசல் நீலன் அவள் இல்லத்தில் தான் கூறு மாற்றி யார் கண்ணிலும் புலப்படாமல் இருக்கிறார். அவரிடம் சொல்லலாமா?