திண்ணை டாட் காம் இணையத் தளத்தில் நாவல் தினை அல்லது சஞ்சீவனியிலிருந்து
கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை.
அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு துர்நாற்றத்துக்கும் காரணம் என்று தெரிய வாய் திறந்து வாச்சி வாச்சியாக நான்கு வரிசை மஞ்சள் பல் காட்டி ஏன்யா என்று ஒரு பிசாசு சத்தம் தாழ்த்தி அழைத்தது.
கர்ப்பூரம் பின்னால் இருக்கிற யாரையோ கூப்பிடுகிறது என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தான். உன்னைத் தான்யா என்று கூட வந்த பிசாசு வாயைத் திறந்து இன்னொரு மாதிரி துர்வாடை கிளப்பிக் கொண்டு சத்தம் போட்டது.
மசகு போல் அடர்த்தியான களிம்பு ஏதோ அடையடையாக அப்பிய கிழிந்த பிடவை உடுத்திய இரண்டும் அந்தச் சேலையையே மேலே தலைப்பு உயர்த்தி மார்பை மூடியிருந்தன. அவை பெருத்த முலைகள் என்று கர்ப்பூரத்துக்குத் தோன்றியது.
கழுதைக்குப் பேர் கர்ப்பூரமா, எழுந்திருடா என்று அவன் தலைக்கு வெகு அருகே தலை குனிந்து ஒன்று கிரீச்சிட குமட்டி வாந்தி எடுத்தபடி கிடந்தான் அவன்.
மிகுந்த சிரமத்துடன் கண் திறந்து பார்க்க, தலையில் மயிர் இல்லாமல் முண்டனம் செய்ததாக இரு பைசாசங்களும் தோன்றின. கபாலத்தில் திட்டுத் திட்டாக ஏதோ ஒட்டி அதன் போக்கில் இன்னொரு துர்வாடையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
கர்ப்பூரம் எழுந்திருடா என்ன தூக்கம் வேண்டியிருக்கு என்று மறுபடி இரண்டு அலாதியான ரூபங்களும் அவன் படுக்கைக்கு அரை அடி மேலே சுற்றிப் பறந்தன.
என்னை நினவு இருக்காடா? முடைநாற்றம் கையிடுக்கிலிருந்தும் கொங்கைகளிலிருந்தும் கசிய கர்ப்பூரனை மிக நெருங்கிப் பறந்த பைசாசம் நாலு வரிசைப் பல்லும் வெளியே தெரியச் சிரித்தது.
இன்னொரு முறை கர்ப்பூரனுக்கு வயிறு எக்களித்து வாயில் வந்தது. சுற்றிவர வாந்தி சால் கட்டி நிற்க நடுவே மல்லாந்து படுத்திருந்தான்.
என்னை விட நீதாண்டா நாறிப் பிடுங்கறே என்று சிரித்தபடி அறை உத்தரத்தில் முதுகால் தட்டிவிட்டு அப்படியே கீழே வந்து கர்ப்பூரனை அணைத்துக் கொண்டு அவன் வாயில் முத்தமிட்டது அந்தப் பைசாசம். அந்த அண்மையும் ஸ்பரிசமும் வாடையும் அவனுக்கு ஏனோ வேண்டியிருந்தன.
அவனுக்கு இதெல்லாம் பழக்கமானதாகத் தெரிந்தது. யார், பூரணாவா? அவன் நம்ப முடியாமல் கேட்டான். இரண்டு பிசாசுகளும் அவனுக்கு நேர்மேலே மிதந்தபடி ஊவென்று ஒலி எழுப்பின.