Periyar, P.A.K, Viswaroopam novel and Nellai Aryasபெரியாரில் தொடங்கி பி.ஏ.கே, நாவல் விஸ்வரூபம் வழியாக நெல்லை ஆரியாஸ் தோசைக்கு


நேற்று மாலை திரு.ஜெகத் காஸ்பரின் சங்கம் – 4 அமைப்பு நடத்தும் விழாவில் பி.ஏ.கே அண்ணா (Ananthakrishnan Pakshirajan) ‘அக்ரஹாரத்தில் பெரியார்’ பற்றி அருமையாகப் பேசினார். அச்சிலும் இணையத்திலும் வந்து இன்னும் நிறைய அன்பர்களால் படிக்க, பேசப்பட வேண்டிய உரை அது.

விழாவில் குத்துவிளக்கு ஏற்ற நானும் அழைக்கப்பட்டேன். என்னமோ, ஷூ போட்டுக் கொண்டு தீபம் கொளுத்த மனம் வரவில்லை. வராது. ப்ஞ்சமுக விளக்கை ஆளுக்கு ஒரு முகமாக ஏற்றி விட்டு இறங்கும்போது, மேடைக்குக் கீழே என் ஒரு ஜதை ஷூ மட்டும் இருந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த பத்ரியோடு ‘விஸ்வரூபம்’ நாவல் வெளியீடு தவிர மற்ற எத்தனையோ தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டேன். நாவலை அவர் நல்ல முறையில் கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இது பேசப்பட கண்ணன் அருளுக.

******************************

நெல்லை ஆரியாஸ் தோசை பற்றி ’சாக்லெட்’ புலவர் (ஜானகிராம் ஓட்டலுக்கு தனியாக வருமாம்)

கருமுல்லை காந்திமதி கொண்டிட பாகம்
திருநெல்லை அப்பர் திகழ்ந்து -வரமள்ளி
வாரியா என்று வரவேற்(று) அளித்திடுவார்
ஆரியாஸ் தோசை அரன்”….

நம் பதில் வெண்பா

தலையை இனம்கண்ட தர்மபத்னி கல்லை
உலைமேல் கிடத்தி உருட்டி மலைபோல
வார்த்துச் சுடச்சுட வாய்ருசிக்க ஊட்டிவிடும்
ஆத்துதோ சையருமை பாடு

(ஆத்து – அகத்து என்பது மருவி)

*************************************

கிரகநிலை பாதகமே பாலியல் குற்றங்கள் அதிகரிப்புக்கு காரணம்’: சத்தீஸ்கர் அமைச்சர் பேச்சு’ – தினமலர்

அசாராமுக்கு அமைச்சர் பரவாயில்லை. இந்தத் துயர சம்பவத்தைப் பற்றி யார் என்ன சொன்னார்கள் என்று தொகுத்தால் அதில் தெரியும் ஒட்டு மொத்த இந்திய முகம் பார்க்க எப்படி இருக்கும்?

*********************

அசாராம் சாமி மாதிரி அடிமுட்டாள்களுக்கெல்லாம் மீடியா புண்ணியத்திலே ரெண்டு நாள் நேஷனல் கவரேஜ்! வாழ்வு!

நண்பர் பாரதிமணி சார் – முருகன், நாம் நினைக்கும் அளவுக்கு இவர்களெல்லாம் அடிமுட்டாள்களல்ல. மக்களின் Gullibiliy-ஐ புரிந்துகொண்டவர்கள். அம்பானி போல் சொந்தத்தில் விமானம் வைத்திருப்பவர்கள்! மக்களை ஏமாற்றத்தெரிந்தவர்கள்! ஒருநாளைக்கு இருபது லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு மாயையைப்பற்றி அழகாக பேசுபவர்கள்! அவர்கள் வாழ்க!!

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன