என் நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 39-இல் இருந்து
நீலன் வைத்தியர், அதாவது அசல் நீலன், நார்த்தங்காய்ச் சாறில் இஞ்சி பிழிந்து வெல்லம் கலந்து வைத்திருந்த காய்கறி ரசத்தைக் குடுவையோடு எடுத்தார். அது சஞ்சீவனி இல்லை.அவரை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பானம்.
குளிரக்குளிர குளிர்ந்த சுனை நீர் கலந்தோ, ஒரு நிமிடம் அடுப்பில் ஏற்றிச் சூடு படுத்தியோ அதைப் பருகலாம். இப்போது உறக்கத்தையும் வென்று இரவு முழுவதும் கண்ணுறங்காமல் சஞ்சீவனியை சோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சஞ்சீவனிக்கு மாற்று மருந்தை முதலில் தேவைக்கு அதிகமாகவே உண்டாக்கி வைத்திருப்பது கணிசமாக இருக்கிறதா என்று பார்த்தார். இன்னும் ஒரு வாரத்துக்கு வரும் மாற்று மருந்து கைவசம் உண்டு என்று கண்டு திருப்தியடைந்தார்.
அவருடைய சோதனை எலிகள் எதுவும் கிடையாது. நேரடியாக மனித குல ஆண்கள் மற்றும் பெண்கள் சஞ்சீவனியை உருவாக்க உருவாக்கப் பருகி அவரவர் உடலில், நினைப்பில், மனதில் என்ன தோன்றுகிறது என்பதைப் பாதுகாப்பாகப் பதிந்து வைக்க வேண்டும்.
போன முறை நீலன் வைத்தியர் சஞ்சீவனி உண்டாக்கி அதை சோதனை செய்யக் குறைந்தது முப்பது பேர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டார்கள். நல்ல சாப்பாடு, உறக்கம், சும்மா கிடத்தல், மருந்து குடிக்கத் தவிர வேறே வேலை இல்லை இப்படி எல்லாம் நன்றாக நடந்துவர பத்துபேர் மருந்து அதிகமாகிப் போயோ என்னவோ பறக்க ஆரம்பித்து விட்டார்கள்.
எல்லோருக்கும் கிடைக்கிற நல்லதிருஷ்டமா என்ன பறப்பது? நடப்பவர்கள் மேலும் ஓடும் வாகனங்கள் மேலும் மோதாமல் காற்று சுத்தமாக இருக்கும் வெளியில் மனதில் நேரிசை வெண்பா யாப்பின்படி புனைந்துகொண்டு பறந்து போக எத்தனை பேருக்கு வாய்க்கும்?
பறந்து பறந்து காணாமல் ஒன்றும் போகவில்லை அவர்கள். சிறு பறத்தல், இறங்குதல், உண்ணுதல், சஞ்சீவனி குடித்தல் கூடவே தெருவில் கண்டோர் மரியாதையோடு நின்று வழிபட்டு அகல, சகலப் பெருமையோடும் பறப்பது. எத்தனை பேருக்கு வாய்க்கும் இது?
பறந்தார்கள் என்று சேதி கேட்டதுமே சஞ்சீவனி சிசீ என்று அத்தனை நாள் உழைப்பையும் புறங்கையால் தள்ளிவிட்டார்கள். அப்போது கிளம்பியதுதான் இந்தப் பெண்களோடு காலப் பயணம்.
நீலன் அண்ணாரே, தெம்பாக ஆளுக்கொரு கோப்பை காப்பி குடித்து விட்டு சுறுசுறுப்பாகத் தொடங்குவோமா என்று தலையைச் சொரிந்தபடி விசாரித்தாள் குயிலி. எந்த நூற்றாண்டிலும் தலை சொரிந்து துயில் எழாத பெண்மணியுண்டோ என நீலன் தனக்குள் வியந்தார்.
காப்பியா, அதெல்லாம் நீ கொடுத்தியே என்று ஒரு கோப்பை பருகிவிட்டு தலை சுற்றிக் கிடந்தேனே, அதற்கு அப்புறம் காப்பியைத் தொடக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டேன். உன்னோடு இருந்து ஏதாவது பருகி ஆகவேண்டும் என்றால் தேநீர் ஒரு கோப்பை அருந்த நான் தயார்.